வெள்ளி, 23 மே, 2014

கொஞ்சம் வாக்கிங்... நிறைய ஜோக்கிங்!



'செய்வன திருந்தச் செய்' - அன்றே சொன்னாள் அவ்வைப் பாட்டி! 
பொழுது விடிந்ததுமே செய்கிற வாக்கிங், ஜாக்கிங் விஷயங்களை நம்மில் சிலர் வெறும் ஜோக்கிங் ஆக மாற்றுவதைப் பார்க்கும்போது, அவ்வை நினைவு தான் வரும்.
நடைப் பயிற்சி, யோகா, சிரிப்புப் பயிற்சி என்று சென்னை மக்கள் காமெடி பண்ணும் சில ஸ்பாட்டுகளை சுற்றி வந்தோம்.
அமைதியாக பலரும் வாக்கிங் போகிற போட் கிளப் ஏரியா.
ஆரோக்கியத்தோடு சேர்த்து புண்ணியத்தையும் தேடிக்கொள்ளும் டூ இன் ஒன் நோக்கோடு இங்கே வாக்கிங் வரும் சிலர் கையில் பிஸ்கட் பாக்கெட்டும் கொண்டுவருகிறார்கள். பலரும் வாக்கிங் போகிற வழியில் பிஸ்கெட்களை உடைத்துப்போட்டு, தெரு நாய்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். எதிர்பாராத அந்த அதிகாலை உபசரிப்பில் சுறுசுறுப்பாகும் தெரு நாய்கள் பிஸ்கட்களைக் கைப்பற்ற குரைத்துக்கொண்டும் கடித்துக்கொண்டும் 'ஃபைட்'டில் இறங்க, ஏரியாவே ரணகளமாகிறது. நாளடைவில், விடிந்ததும் பிஸ்கட் கிடைக்கிற தகவல் மற்ற ஏரியா நாய்களுக்குப் பரவிவிட... நாளுக்கு நாள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. விளைவு, 'போட் கிளப் தெருக்கள் எல்லாமே பதற்றமான வாக்குச்சாவடி கணக்கில் ஆகிவிட்டன’ என்று வருந்துகிறார்கள் வாக்கிங் நண்பர்கள்.
இதே டைப் புண்ணியவான்கள் மெரினா கடற்கரையில் காக்கைக்குப் பொரி போடுவதும் இப்படித்தான். தலைக்கு எட்டுகிற உயரத்தில், காக்கைகள் அங்கும் இங்கும் அதிவேகமாக பறந்து லேண்ட் ஆவது சாதாரணக் காட்சி. தேமே என்று புல் தரையில் தியானம் செய்துகொண்டு இருப்பவர்களின் தலை மேல் காக்கைகள் வந்து மோதிவிட்டுப் போவதும்... 'காலாங்காத்தால காக்கா தலை தட்டிருச்சே... (மதியம்னா மட்டும் ஓகே-வா ஸார்!) இன்னிக்கு என்ன ஆகப்போகுதோ..?’ என்று ஜாகிங் வந்த நண்பர்கள் எல்லாம் காக்கா தோஷத்தைப் பற்றி கவலையில் ஜாகிங்கை பாதியிலேயே கைவிட்டுவிட்டு திகிலோடு வீட்டுக்குக் கிளம்புவதும் அடிக்கடி நடக்கிறது.
வாழ்க்கையில் சாதித்து முடித்தவர்களை (அல்லது அப்படி நினைத்துக்கொள்பவர்களை) கொஞ்சம் கூடுதலாகவே இந்த மாதிரி ஏரியாக்களில் அதிகம் பார்க்கலாம். நாள் முழுக்கப் பரபரப்பாக, வருடக்கணக்கில் பிஸியாக இருந்து ஓய்வுபெற்றுவிட்ட இவர்களிடம் பேசவே ஆள் இல்லாமல் இருப்பார்கள். வாக்கிங் போகும்போது யாராவது 'குட்மார்னிங் ஸார்..’ சொல்லி சிக்கினால் போச்சு. 'நைன்ட்டீன் எய்ட்டி செவன்ல..’ என்று கை வீசி நடந்தபடியே ஆரம்பிப்பார்கள். குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது சிற(அறு)ப்புரை இருக்கும். நிம்மதியாக நடக்க முடியாமல், இவர்களுக்கு 'உம்' கொட்டியும் தலையாட்டியும் பிளட் பிரஷர் எகிறிப்போகும் அகப்பட்ட ஆசாமிகளுக்கு. வந்தோமா, வாக்கிங் முடித்துவிட்டுப் போனோமா என்று இல்லாமல்... இந்த அனுபவ அறிவாளிகளின் இழுப்புக்கு ஆட்பட்டு தொடர்ந்து ஏழெட்டு ரவுண்டு வாக்கிங் போகவேண்டிய நிர்ப்பந்தம் வேறு!
பூகம்பம் வந்தால் பெஞ்சுக்கு அடியில் ஒளிய வேண்டும் என்பதைப்போல் இவர்களைக் கண்டாலே சிலர் சிமென்ட் பெஞ்சுக்கு அடியிலும், செடிகளுக்கு இடையிலும் பதுங்குக்குழிக்குள் ஒளிந்த சதாம் உசேன்போல் பதுங்குவதையும் சாதாரணமாகப் பார்க்கலாம். ('ஒரு ரவுண்டு வாக்கிங் போய்ட்டு ஒரு பால் பாக்கெட்டு வாங்கிட்டு வரதுக்கு இவ்ளோ நேரமா...’ என்று வீட்டுக்காரம்மா கொந்தளிப்பாரே என்ற படபடப்பு வேறு.)
மெரினாவுக்கு வாக்கிங் வரும் தமிழ் சினிமா காமெடி நடிகர் அவர். காலை எழுந்ததும் அருகம்புல் ஜூஸ் சாப்பிட்டுவிட்டு வாக்கிங் கிளம்பிவிடுவார். அவர் குஷியான மூடில் இருந்தால் எதிர்ப்படும் நண்பர்களை வழிமறித்து அவர் சுயபுராணம் பேச ஆரம்பித்தால், அவரிடம் இருந்து கழட்டிக்கொண்டு கிளம்புவதே பெரிய வேலையாகிவிடும். கெஞ்சிக் காலில் விழுந்தாலும் கதை அளப்பதை நிறுத்த மாட்டார். ஆனால், அதுவே மற்ற யாராவது அவரிடம் வலியப்போய் பேச முற்பட்டால், அது அவருக்குப் பிடிக்காது. 'வாக்கிங் போகும்போது பேசிக்கொண்டே நடப்பது கூடாது’ என்று அட்வைஸ் செய்துவிட்டு நடையைக் கட்டிவிடுவார். இவரோடு பிளேடு போட வருகிறவர்களின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் அதிகமானதால், இவர் வாக்கிங் போகும்போது செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் விண்வெளி வீரர் கணக்கில் உடை, ஷூ... இத்யாதிகளை அணிய ஆரம்பித்தார். அந்த கெட்டப்பில் முக்கியமாகக் காதை மட்டுமல்ல; முகத்தில் பாதியையே மறைக்கும் சைஸுக்கு ஹெட்செட் ஒன்றும் அணிந்திருப்பார். அவரைப் பல நாள் கவனித்த ஒருவர், ''அப்படி என்னதான் ஹெட்செட்ல கேட்டுட்டே போறீங்க... மியூஸிக் தெரபி வித் வாக்கிங்கா..?'' என்று ஆர்வமாக விசாரிக்க... அப்போதுதான் மிஸ்டர் காமெடி ஹெட்செட்டில் இருந்து சட்டைக்குள் போன வயரை எடுத்திருக்கிறார். வெறும் வயர் மட்டுமே இருந்தது.
''நாமெல்லாம் பிரபலங்கள்(?). வாக்கிங் போறப்ப யாராவது பேச்சு கொடுப்பாங்கள்ல... அதை அவாய்ட் பண்ணத்தான் இந்த டெக்னிக்! கூப்பிட்டாலும் காதுல விழாத மாதிரி நடந்துக்கிட்டே இருப்பேன்'' என்றார். கேட்டவர், ''இதான் சார் நீங்க பண்ணுனதுலயே பெரிய காமெடி!'' என்று சிரித்திருக்கிறார்.
வசூல்ராஜா கமல்போல் படிக்காத டாக்டர்களும் வாக்கிங் வருவதைப் பார்க்கலாம். எம்.பி.பி.எஸ்., எம்.டி., எஃப்.ஆர்.சி.எஸ்., படித்த டாக்டர்களே இவர்களிடம் தோற்றுப்போவார்கள். ''நாலு லார்ஜ் தண்ணி அடிக்கறதால தப்பில்ல. ஆனா, அன்னைக்கு நைட் எட்டு டம்ளர் தண்ணி குடிச்சிட்டுத் தூங்கப் போனா, ஆல்கஹால் பூரா டைல்யூட் ஆகி, கிட்னியில இருந்து தானா கரைஞ்சு மறைஞ்சுபோகும்'' என்று வாய்க்கு வந்ததை அடித்துவிடுவார் ஒரு மெகா தொப்பை ஆசாமி. அடுத்தவரோ, ''இதையும் கேளுப்பா, தண்ணி அடிச்ச அடுத்த நாள் காலையில மொத்தமா மூணு இளநீர் சாப்பிட்டா முதல் நாள் அடிச்ச ஆல்கஹால் வியர்வை வழியா ஆவியாகிப் போயிடும்...'' என்று விளக்கம் கொடுப்பார். குடிக்கிற குற்ற உணர்வைப் போக்கிக்கொள்வதற்காக இவர்களாகப் பகிர்ந்துகொள்கிற 'மருத்துவப்’ பரிகாரங்களைப் பின்பற்றினால், குடல் வெடித்துக் காலியாக வேண்டியதுதான்!
வெகுநாளாக வாக்கிங் போகும் ஒரு தீவிர வாசகர், 'நட்பு'க்கு இலக்கணமான இரண்டு வாக்கிங் தோழர்களின் கதையை எடுத்துவிட்டார். தோழர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர். அடுத்தவர் வியாபாரப் பிரமுகர். நம்ப மாட்டீர்கள்... 20 வருடங்களுக்கும் மேலாக இருவரும் மெரினாவில் தவறாமல் வாக் போவார்களாம். வாக்கிங், ஜாக்கிங், எக்ஸர்ஸைஸ் எல்லாம் முடிந்ததும் முன்னாள் அமைச்சருக்கு. 'மூலிகை ஜுஸ்’ என்ற பெயரில் அங்கே விற்பனையாகும் ஏதோ ஒரு ஜூஸைக் குடிக்கும் பழக்கம் உண்டு. கூட வருகிற நண்பர் ஒதுங்கிவிடுவாராம். பல வருடங்கள் இப்படியே தொடர... ஒருநாள் ஏதோ நினைப்பில் ''ரெண்டு ஜூஸ் போடுங்க..'' என்று ஆர்டர் பண்ணியிருக்கிறார் முன்னாள் அமைச்சர். நண்பர் பதறிப்போய் ''ஐயோ... எனக்கு ஜூஸெல்லாம் வேணாங்க...'' என்றார். ''ஏன்?'' என்று கேட்டதற்கு ''அந்த ஜூஸ் சாப்பிட்டா கிட்னி ஃபெயிலராயிரும்னு ஒரு புக்ல படிச்ச ஞாபகம்'' என்றாராம். மாஜிக்கு மூஞ்சி வெளிறிவிட்டதாம். அடிவயிற்றைத் தடவியபடியே, ''அடப்பாவி... இத்தனை வருஷமா இதைத்தானேய்யா குடிச்சிக்கிட்டு இருக்கேன்... என்னிக்காவது இந்த விஷயத்தைச் சொன்னியா?'' என்று உடைந்த குரலில் கேட்டிருக்கிறார். ''சரிங்க... இது வரைக்கும் ஒரு நாளாச்சும் என்னைக் குடிக்கச் சொல்லி நீங்க கேட்டதே இல்லியே...'' என்று பதில் வந்ததாம்.
இவரும் மாஜிதான். முன்னாள் டி.ஜி.பி. காவல் துறை யூனிஃபார்மில் இருக்கும்போது இவருடைய 'கட்டுடல்' ஷேப் சரியாகத் தெரியாது. ஆனால், ஓய்வு பெற்ற பிறகு தனியாக வாக்கிங் போகையில்தான் அனாடமி குட்டு அம்பலம் ஆனது. உடம்பு ஒரு பக்கமும் பிரம்மாண்டமான தொப்பை இரண்டு அடி தள்ளியும் இருக்க... விட்டலாச்சார்யா படங்களில் குட்டி சைத்தானுக்கு மாட்டிய மாதிரி உடம்போடு உடம்பாக - சகல மேடு, பள்ளங்களும் தெரிகிற மாதிரி ஜெர்ஸி துணியில் டிரஸ் மாட்டி நடப்பார் பீச்சில். அதே பகீர் கெட்டப்பில் பப்ளிக்காக உடற்பயிற்சியும் நடக்கும். முன்னாள் அமைச்சருக்கு அவரது நண்பர் 20 வருடம் கழித்து கிட்னி ஃபெயிலராகும் என்பதைச் சொன்னதைப் போல், இவருக்கும் ஒரு நண்பர் என்றாவது, 'எப்படி டிரஸ் போட வேண்டும்’ என்பதைச் சொல்லிக் கொடுக்காமலா போய்விடுவார்?
இந்த காமெடிகளும் கலாட்டாக்களும் ஒரு சாம்பிள் பாக்கெட் ஷாம்பூ போல்தான். அதிகாலையில் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு கடற்கரைக்கோ, பூங்காக்களுக்கோ சென்றால் இதுபோல் வடிவேல், சந்தானம் காமெடியை எல்லாம் மிஞ்சும் விதவித விநோதக் காட்சிகள் உங்களுக்குக் காணக் கிடைக்கும்.
பிராணாயாமம் என்று நினைத்துக்கொண்டு வலது கட்டை விரலால் இடது நாசியை மூடிக்கொண்டு, இடது கை கட்டை விரலைக் கொண்டுபோய் வலது காதை மூடிக்கொண்டெல்லாம் கச்சா முச்சா பயிற்சிகளில் ஈடுபடுவோரைக் காணலாம். இந்த போஸிலேயே பின்னோக்கி வளைய ஆரம்பித்து, பேலன்ஸ் பண்ண முடியாமல் திடீரென்று குப்புற விழுந்து, சுதாரிப்புக்கு மூக்கிலிருந்து கையை எடுத்துத் தரையில் ஊன்றி... பார்க்கவே பயமாக இருக்கும்.
இன்னும் சிலர் பார்க்கில் இருக்கும் பெஞ்சில் குறுக்குவாக்கில் படுத்துக்கொண்டு தலைகீழாக எக்ஸர்ஸைஸ் செய்வார்கள். நடைபாதையில் போகிறவர்மேல் கால் படுமே என்ற கவலையோடு, பேலன்ஸ் பண்ணுவதற்காக பின்னால் சாய்ந்து பின்னந்தலையில் அடி வாங்கிக்கொண்டு எழுந்திருப்பவர்களும் உண்டு.
கீழே விழுந்தவுடன், யாராவது பார்த்துட்டாங்களா என்பதை முதலில் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அதன்பிறகே 'காயம்... கீயம் பட்டுருக்குமோ’ என்று தேடுவார்கள்.
இந்த மாதிரி பக்காவான வாக்கிங் ஸ்தலங்களுக்கு வர விருப்பம் இல்லாமல்... சில ஜென்டில்மேன்கள் போக்குவரத்து சூடு பிடிக்கும் நேரத்தில் பிளாட்பாரங்களின் மீது ஏறியும் இறங்கியும் போவதையும் காண முடியும், சென்னையில். சாலையோர அசிங்கத்தை மிதித்துவிடாமல், நீட்டிக்கொண்டு இருக்கிற மின்சார டிரான்ஸ்ஃபார்மர் தலையைப் பதம் பார்க்காமல், தரையில் திறந்திருக்கும் பாதாளச் சாக்கடையில் விழுந்துவிடாமல்... கடந்து போகிற வாகனங்களின் ஹை டெசிபல் திடீர் ஹாரனில் காது கிழிந்துவிடாமல்... சகல ஜாக்கிரதை நடவடிக்கையும் மேற்கொண்டு நடை பயணம் செய்யும் இவர்களுக்கு ஒரு விஷயம் தெரிவது இல்லை... எந்த பி.பி.யைக் குறைக்க இவர்கள் போகிறார்களோ... அந்த பி.பி-யை வீட்டுக்குப் போய் செக் செய்தால்... அநியாயத்துக்கு எகிறி இருக்கும்.
உணவுக் கட்டுப்பாட்டின் அவசியம்பற்றி மணிக்கணக்கில் லெக்சர் அடித்துக்கொண்டே நடை பயிலும் சிலர்... எக்ஸர்ஸைஸ் சமாசாரங்கள் எல்லாம் முடித்த கையோடு ஜூஸ், கோஸ், நறுக்கிய கேரட், நறுக்காத வெங்காயம், பப்பாளி.... என்று வாக்கிங் ஸ்தலத்தில் விற்கும் சமாச்சாரங்களை ஒரு லோடு உள்ளே தள்ளிவிட்டு வீட்டுக்குக் கிளம்புவதும் சகஜம்தான்.
''தன் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் நினைப்பது நல்ல விஷயம்தான். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமருத்துவம் பார்த்துக் கொள்வது எவ்வளவு தவறோ... அதேபோல்தான் நாமே தவறாக உடற்பயிற்சிகள் செய்துகொள்வதும். தவறாக செய்யும் உடற்பயிற்சி உள்ளுக்குள் ஏதாவது தவறான விளைவுகளை உண்டாக்கிவிட வாய்ப்பு உண்டு. அதனால், யோகாசனம் செய்தாலும், உடற்பயிற்சி செய்தாலும் சம்பந்தப்பட்ட துறையில் இருக்கும் நிபுணரின் ஆலோசனையைப் பெற்று செய்வதே சிறந்தது!'' என்கிறார் அவசர சிகிச்சைப் பிரிவு நிபுணரான தவப்பழனி.
எனவே, 'உடற்பயிற்சி செய்கிறேன் பேர்வழி..’ என்று வேண்டாத பூதத்தைக் கிளப்பாமல், உருப்படியாகக் கிணறு வெட்டுங்கள் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்!


Thanks to:.penmai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.