செவ்வாய், 3 ஜூன், 2014

ஊட்டச்சத்து- புரதம்


புரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும். பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.

புரதத்தின் செயல்பாடுகள்:

புரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.

கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் தாய்சேய் இருவரின் உடற்திசு வளர்ச்சிக்கும் மற்றும் பால் சுரப்பதற்கும் கூடுதலான புரதம் தேவைப்படுகிறது

உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு

இறைச்சியில் உள்ள புரதங்கள் மிகவும் உயர்ரக புரதங்களாகும். அவற்றிலிருந்து உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதாசாரத்தில் கிடைக்கிறது. சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கும் தானியங்கள் மற்றும் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளும்போது போதுமான புரதங்கள் கிடைக்கின்றது.

பால் மற்றும் முட்டையில் நல்ல தரமான புரதங்கள் உள்ளன. பயறு வகைகள், கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி போன்றவை புரதம் அதிக அளவில் உள்ள சில பொருட்களாகும். தாவர உணவுகளில், சோயாபீன்ஸில் மிக அதிகளவு புரதம் கிடைக்கின்றது. இவை 40 சதம்வரை புரதங்களை கொண்டவை. 57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும். அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அதே வயதை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பால் கொடுக்கும் காலங்களில் (குழந்தை பிறந்த 6 மாத காலம்வரை) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படும்.

உணவுப் பொருட்கள்:

சாப்பிடக்கூடிய பகுதியில் உள்ள புரதத்தின் அளவு (கிராம்/100 கிராம்/ )

சோயாபீன்ஸ் 43.2
கொண்டைக்கடலை, உளுந்து, பச்சை பயறு மற்றும் துவரை 22
நிலக்கடலை, முந்திரி மறறும் பாதாம் பருப்பு 23
மீன் 20
இறைச்சி 22
பசும்பால் 3.2
முட்டை (ஒரு முட்டையில்) 13.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.