ஞாயிறு, 14 டிசம்பர், 2014

‘தைராய்டு’ ஹார்மோன் செய்யும் மாயாஜாலம்


வெயிட் ஏறிட்டே போகுது, பீரியட்ஸ் ஒழுங்கா வரலை, ரொம்ப டயர்டா இருக்கு” – இப்படி யாராவது சொன்னால், உடனே அவர்களிடம் கேட்பது, தைராய்டு பிரச்னை இருக்கா என்றுதான். இந்தியாவில் பெரும்பான்மையான பெண்களுக்கு தைராய்டு குறைபாடு உள்ளது. ஆனால் இதில் பாதிப் பேருக்்கு தைராய்டு பற்றிய விழிப்புஉணர்வே இல்லை.
தைராய்டு என்பது என்ன?
“தைராய்டு நம் தொண்டைப் பகுதியில் அமைந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவம்கொண்ட ஓர் உறுப்பு.  உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றப் பணிக்குத் தேவையான, பிரதான நாளமில்லா சுரப்பி இது. பலரும் ஆரோக்கியத்துடன் வாழ உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்பற்றுகிறோம். ஆனால், உடலின் சீரான, ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மிக முக்கியம்.”
தைராய்டு பாதிப்பு பெண்களுக்குதான்  ஏற்படுமா?
“தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் நோய்கள் ஆண், பெண் இருவருக்குமே வரும். ஆனால் ஆண்களைவிட பெண்களையே 5 முதல் 10 மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது. அதிலும் இளம் வயதுப் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். உடலில் தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறைந்தால், அதை ஹைப் போதைராய்டிசம் (Hypothyroidism) என்றும், அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyrodism) என்றும் குறிப்பிடுவோம்.
” தைராய்டு பாதிப்பால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்?
‘‘ பெண்கள் பருவம் அைடயும்போதும், குழந்தைப்பேற்றை எதிர்நோக்கும் போதும், உடல் மற்றும் மனதளவில் பல சிக்கல்களை தைராய்டு பாதிப்பால் சந்திக்க நேரிடும்.  தைராய்டு சுரப்பியில் இருந்து வெளிப்படும் டி3, டி4 என்ற இரண்டு ஹார்மோன்கள் ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. நமது உடலின் நரம்பு மண்டலம், நினைவாற்றல், உடல் மற்றும் மூளை வளர்ச்சி, பாலின உறுப்புகளின் செயல்பாடு, கருத்தரித்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தைராய்டு சுரப்பு குறைந்தால், உடல் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும்.  குறிப்பாக, பெண்களுக்கு உடல் பருமன், கால் வீக்கம், மாதவிடாய் கோளாறுகள், அதிகச் சோர்வு, தலைமுடி உதிர்தல், தோலில் வறட்சி, நினைவாற்றல் குறைதல் போன்றவை ஏற்படும். தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்தால், உடல் மெலிதல், கை நடுக்கம், அதிகமான இதயத்துடிப்பு, அதிக வியர்வை போன்றவை தோன்றும்.
குழந்தையின்மை சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு, தைராய்டு பிரச்னை உள்ளது. மேலும், கருவுற்ற தாயின் தைராய்டு நோய், கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. முதலிலேயே இந்தப் பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் கருச்சிதைவைத் தவிர்க்க முடியும்.”
தைராய்டு நோய் ஏன் பெண்களையே அதிகளவில் பாதிக்கிறது?
‘‘மிக முக்கியமான  ஒரு காரணம், ஆட்டோ இம்யூனிட்டி (Autoimmunity) எனப்படும் தன் எதிர்ப்பு ஆற்றல். அதாவது, நம் உடலில் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் செல்கள்,சொந்த உடலின் உறுப்புகளையே, வெளியில் இருந்து வரும் நோய்க் கிருமிகளை போல கருதி அழிக்கத் துணிகின்றன. இந்த தன்எதிர்ப்பு ஆற்றல் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen) என்ற ஹார்மோன், இந்த தன்மையைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது.
மேலும் பெண்களின் மரபணுவில் இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் (Chromosomes) இருப்பதும் காரணம். இயற்கையாகப் பெண்களுக்கே அதிக அழுத்தமான சூழ்நிலைகள் உள்ளன.  நமது முன்னோர்களைவிட,  இன்றைய  தலைமுறையினரிடம் தைராய்டு நோய் அதிகமாகக் காணப்படுவதற்கு ஸ்ட்ரெஸ் முக்கிய காரணம். கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தை பெற்றவர்களுக்கும் ஏற்படும் தைராய்டு பிரச்னைக்கு, ஸ்ட்ரெஸ் ஒரு முக்கிய காரணமாகும்.”
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு?
‘‘தைராய்டு நோய்க்கு தீர்வு இல்லை என்ற எண்ணம் மிகவும் தவறானது. ரத்தத்தில் தைராய்டு ஹார்மோன்களின் அளவைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னை உள்ள பெண்களும் மற்ற பெண்களைப் போல ஆரோக்கியமாக வாழ முடியும்.  நாளமில்லா சுரப்பியியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று, மருந்து உட்கொள்வதன் மூலம், மாதவிடாய் கோளாறு மற்றும் மலட்டுத்தன்மைக்கும் தீர்வு காண முடியும். பேறு காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தவிர்க்க முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.