திங்கள், 6 ஏப்ரல், 2015

தாய்ப்பால் கொடுக்கும் அன்னையருக்கு..

உலகிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற, சத்தான, கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால் தான். அதை புகட்டும் அன்னையர், தங்களை, சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து வகையான உயிர் சத்துக்களும் உள்ளன. தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். 
தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர், சத்தான உணவுகளை சாப்பிடுவதுடன், அதிகப் புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, கீரை, பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். கிழங்கு வகை உணவுகளை குறைத்து, சுறா புட்டும், வெள்ளைப் பூண்டும் அதிகமாக சாப்பிட்டால், பால் அதிகமாக சுரக்கும்.
மசாலா, அதிக காரம் சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணெய்யில் பொரித்தவை, எசன்ஸ் மற்றும் ரசாயனக் கலவை உணவுகள், குறிப்பாக துரித உணவுகளை தவிர்ப்பதுடன், குளிர்பானங்களை அருந்தவே கூடாது.
ஓட்டல்களில் பிரியாணி மற்றும் சிக்கன் 65 போன்ற நான்வெஜ் அயிட்டங்கள், ஐஸ்கிரீம், மில்க் ஷேக் போன்ற அயிட்டங்களை சாப்பிடக் கூடாது. குறிப்பாக, சீதாப் பழத்தை தொடவே கூடாது.
சில நேரங்களில், ஈரம் மற்றும் இறுக்கம் காரணமாக கூட குழந்தைகள் அழலாம். பசிக்காகத்தான் குழந்தை அழுகிறது என்று நீங்களாகவே முடிவு செய்து, பால் கொடுக்கக் கூடாது.
குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு ஒரு முறை, நீங்களாகவே கணக்கிட்டும் பால் கொடுக்க வேண்டாம். குழந்தை பசிக்காக அழுதால், அதன் வயிறு நிறையும் மட்டும் பால் கொடுக்கவும்.
மார்பகப் புற்று நோய் உள்ளவர்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
எய்ட்ஸ், எச்.ஐ.வி., பாசிட்டிவ், ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி குஷ்டம், காலரா, வெறிநாய்க் கடியால் ரேபிஸ் கிருமிகளால்
பாதிக்கப்பட்டவர்கள், அதிகப்படியான காய்ச்சலில் அவதிப்படுவோர் தாய்ப்பால் தரக்கூடாது.
மன நோயால் பாதிப்படைந்த பெண், தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது.
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குறிப்பாக முதல் நான்கு நாட்களுக்கு கொடுக்கும் சீம்பால், மூளைக்காய்ச்சல், போலியோ, வயிற்றுப் போக்கு, மலேரியா போன்ற நோய்களை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
தாய்ப்பால் அதிகமாக கொடுக்கும் தாய்மார்களுக்கு, பிற்காலத்தில் மார்பகப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மன நிம்மதியுடன், வசதியாக அமர்ந்து கொடுத்தால் பால் சுரப்பு அதிகமாகி, குழந்தைக்கு திருப்தியாக பால் கிடைக்கும். சில குழந்தைகள் பால் குடித்தபடி தூங்கிவிடும். அப்போது மார்பு காம்பிலிருந்து வெடுக்கென்று குழந்தையின் வாயை எடுக்கக் கூடாது; மெதுவாக எடுக்கவும்.
ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு முறையும் பால் குடிக்கும் அளவு மாறும். எவ்வளவு பால் குடிக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால், குழந்தை பால் குடித்தவுடன் நன்கு தூங்கினாலோ, ஆரோக்கியமாக இருந்தாலோ, சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலோ, குழந்தையின் உடலமைப்பில் வித்தியாசம் தெரிந்தாலோ, குழந்தையின் எடை கூடினாலோ, குழந்தைக்கு தேவையான பால் கிடைக்கிறது என்று அர்த்தம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வேண்டுமென்றால் தாய்ப்பால் கொடுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.