புதன், 9 செப்டம்பர், 2015

‘இயன்முறை’ மருத்துவம் (பிசியோதெரபி)



1. ‘இயன்முறை’ மருத்துவம் (பிசியோதெரபி) என்றால் என்ன? இயன்முறை மருத்துவம், உடல் இயக்கத்தை, முறைப்படுத்தும் மருத்துவம். ஒருவர் காயம் அல்லது நோயால் பாதிக்கப்படும் போதும், உறுப்புகள் செயல் இழக்கும் போதும் இயன்முறை மருத்துவர், உடல் பயிற்சி மற்றும் அறிவுரை மூலம், இயக்கம் மற்றும் செயல்களை மீட்க உதவுகிறார்.

2. எல்லா வயதினருக்கும் இந்த மருத்துவம் ஏற்றதா?
இயன்முறை மருத்துவம், உடல் வலி மற்றும் நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்து, அனைத்து வயதினரும் தத்தமது உடலை பராமரிக்க உதவுகிறது. பாதிப்படைந்தோர், மற்றவர்களை சார்ந்து இல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படவும், அவர்களது பணியில் மீண்டும் ஈடுபடவும் ஊக்குவிக்கிறது.

3. எந்த வகையான உடல் உபாதைகளுக்கு, இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்? பலதரப்பட்ட உடலியக்க பிரச்னைகளுக்கு, இயன்முறை சிகிச்சை மூலம், நல்ல பலனை பெறலாம். முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற நீண்ட கால தொந்தரவுகளுக்கும், நிவாரணம் பெற முடியும்.
4. பிரசவத்திற்கு முன்பும், பின்பும் கூட இயன்முறை சிகிச்சை தேவையா? பிரசவத்திற்கு முன்பும், பின்பும் அளிக்கப்படும் சிகிச்சையின் மூலம், பெண்களின் உடல் எடை மற்றும் அவர்களின் உடல் அமைப்பு பராமரிக்கப்படுகின்றன. நரம்பியல், இதயவியல் துறைகளிலும், இந்த மருத்துவம், மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
5. விளையாட்டு வீரர்களுக்கு இந்த மருத்துவம் முக்கியம் என்கின்றனரே? 
விளையாட்டு வீரர்களின் பொது உடல் அமைப்பை பேணவும், உடல் வலிமை மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், விளையாட்டில் ஏற்படும் காயம், சுளுக்கு மற்றும் வலிகளுக்கும் இதன் மூலம், நல்ல பலனை பெறலாம். 

6. பக்கவாதம் என்றால் என்ன? நம் மூளை தான் நம்முடைய அசைவுகள், செயல்கள், உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை கட்டுப்படுத்துகிறது. மூளையின் ஏதாவது ஒரு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம், ஒரு சில நிமிடங்கள் தடைபடுவதால், அப்பகுதியின் மூளை செல்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்து விடுகின்றன. மூளையின் ஒரு பகுதி பாதிப்படைவதால், நம்முடைய சுய நினைவை இழக்க நேரிடும். மேலும், மூளையின் செயல்பாடுகளான கை, கால்களின் இயக்கங்களையும் இழக்க நேரலாம். இந்த பாதிப்பு தான் பக்கவாதம்.
7. வாதத்தை தடுக்கும் நடவடிக்கைகள் என்ன? * முறையான பிசியோதெரபி பயிற்சி மூலம் உடல் எடை, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்
* கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும்; உணவில், உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்; சர்க்கரையில் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்
* மது அருந்துவது; புகை பிடிக்கும் பழக்கத்தை, தவிர்க்க வேண்டும்
8. வாதத்தை அறிந்துகொள்ளும் வழிமுறைகள் என்ன? * கை அல்லது கால் மற்றும் முகத்தின் ஒரு பகுதி செயல் இழத்தல்
* திடீரென கண் பார்வை குறைவு அல்லது பார்வை முழுமையாக இழப்பது, குறிப்பிட்ட ஒரு கண்ணின் பார்வை பாதிப்படைவது; பேச்சு வராமல் தடுமாறுவது; தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படுவது இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால், உடனே, நரம்பியல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
9. முக வாதம் என்றால் என்ன? முக வாதம் என்பது, முகத் தசைகளின் இயக்கக் குறைபாடு. முகத்திற்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால், முகத் தசைகள் வலிமை இழக்கின்றன. இதனால் முகத் தசைகள் மற்றும் கண் இமைகளின் இயக்கம் தடைபடுகிறது.
10. முக வாதம் தீர்க்கும் வழிமுறைகள் என்ன? இயன்முறை சிகிச்சை மூலம் முகத் தசைகளை தூண்டி, அதன் இயக்கத்தை, சீர் செய்ய முடியும். மேலும், பயிற்சிகள் மூலம், முகத் தசைகளுக்கு வலிமையூட்டுதல், தசை அசைவிற்கான கட்டுப்பாடுகளை கூட்டுதல், கண் அசைவை மேம்படுத்துதல், மேலும் கண் மற்றும் வாய் அசைவிற்கான உடற்பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.