சனி, 7 மே, 2016

பெருகி வரும் சிறுநீரக பாதிப்புகள்!!!!


தற்காத்துக்கொள்ள விரிவான வழிகாட்டி…

‘‘ஒருவர் உயிர் வாழ ஒரு சிறுநீரகமே போதுமானது. ஆனால், இயற்கை ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்களைக் கொடுத்துள்ளது. இருந்தும் அவற்றைச் சரிவரப் பராமரிக்காமல் பிரச்னை களைப் பெற்று, வளரவிட்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலைமை வரை செல்வதற்கு, மக்களின் அறியாமையே காரணம்’’ என்று ஆரம்பித்த டாக்டர் வெங்கடேஷ், அதைப் போக்கும்விதமான தகவல்களை விரிவாகத் தந்தார்.
சிறுநீரகத்தின் முக்கியப் பணிகள்!
 1300-க்கும் மேற்பட்ட ரத்தக் கழிவுகளை வெளியேற்றுவது
 ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது
 ரத்தவிருத்தி
 வெயிலில் இருந்து கிடைக்கும் `விட்டமின் டி’யை முழுவதும் பய னுள்ளதாக மாற்றுவது
 ரத்தத்தில் உள்ள புரதத்தை பாதுகாப்பது
 எலும்பை பலமாக வைப்பது
 சாப்பிடும் உணவு, மருந்துகளில் உள்ள கழிவுகள், விஷத் தன்மையை பிரித்து வெளியேற்றுவது உள்ளிட்ட இன்னும் பல.
சிறுநீரகம்… சில தகவல்கள்!
 சிறுநீரகத்தின் சீரான இயக்கம் நம் கையில்தான் இருக்கிறது. குடிக்கும் தண்ணீர் தொடங்கி உட்கொள்ளும் உணவு, மாத்திரை மருந்துகள் வரை எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
 உடல் நிலை, வாழும் சூழல், சாப்பிடும் உணவுகள், குடிக்கும் தண்ணீரின் அளவு போன்றவற்றைப் பொறுத்து ஒருவருக்கு வெளியேறும் சிறுநீரின் அளவு மாறுபடும். ஒரு நாளைக்கு ஒருவர் தெளிவான, நிறமில்லாத 2 லிட்டர் அளவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும். அதற்குத் தேவையான தண்ணீரைக் குடிக்க வேண்டும். 
 சிறுநீரகப் பிரச்னை ஒரே நாளில் வரக்கூடியது அல்ல. அதேசமயம், ஆரம்பத்திலேயே அதை அறிந்துகொள்வதற்கு அறிகுறிகளும் இருக்காது. சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதற்கான அடிப்படை அறிகுறிகள் தென்படும்போது சிறுநீரக பாதிப்பானது வளர்ந்த நிலையில் இருக்கும். அதனால், வருடத்துக்கு ஒருமுறை சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே பாதிப்புகளைக் கண்டறிந்து சரிசெய்யவேண்டியது அவசியம்.
ஒரு மில்லியன் வடிகட்டிகள்!
ஆரோக்கியமான சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடிகட்டிகள் (nephrons) இருக்கும். கிட்னியின் சீரான இயக்கத்துக்குத் துணிபுரிபவை இந்த வடிகட்டிகள். கிட்னி பாதிக்கப்படும்போது இந்த வடிகட்டிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 45 வயதைக் கடந்தவர்களுக்கு இயற்கையாகவே இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 90 வயதில் 60 சதவிகித  வடிகட்டிகள் மட்டுமே இருக்கக்கூடும். என்றாலும், அந்த வயதின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு அதுவே போதுமானதாக இருக்கும். ஆனால், கிட்னி பாதிப்பு வந்த இளம் வயதினருக்கு அவர்களின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு ஈடுகொடுக்கும் எண்ணிக்கையில் இந்த வடிகட்டிகள் இல்லாதுபோகும்போது, அது நாளுக்கு நாள் பாதிப்பின் அளவை அதிகரித்து உயிரிழப்புவரை அழைத்துச் செல்லக்கூடும்.
சிறுநீரகப் பிரச்னைகள்… யார் யாருக்கு?
ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என பாகுபாடின்றி யாரும் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், 60 வயதைக் கடந்தவர்கள், சுயமாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்துக் கொள்பவர்கள், தேவையான தண்ணீர் குடிக்காதவர்கள்… என இவர்கள் சிறுநீரக பாதிப்புகளுக்கு முதன்மை இலக்காவார்கள். இந்தியாவில் பல லட்சம் பேர் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும், 2:1 என்னும் விகிதத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுநீரகக் கல் பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள்    கூறுகின்றன.
அறிகுறிகள்
 கால் வீக்கம்
 அதிக மற்றும் குறைந்த சிறுநீர் வெளியேறுவது
 இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது 
 மூச்சுவிடுவதில் சிரமம்
 ரத்தசோகை
 உயர் ரத்த அழுத்தம்
 எலும்பு பலமின்மை மற்றும் எளிதில் உடைந்துபோவது
 பசியின்மை
 வாந்தி
 சட்டென தோல் உரிந்துபோவது
 அடிக்கடி விக்கல்
 எடை கூடுவது, குறைவது
 மலட்டுத்தன்மை
 உடலுறவில் நாட்ட மின்மை உள்ளிட்ட இன்னும் பல.
சிறுநீரகக் கல் !
உலக அளவில் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களில் 12% பேர் சிறுநீரகக் கல் பிரச்னையை எதிர்கொள் கிறார்கள். இந்தியாவில் இது 30 – 40% ஆகும்.  குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை ‘ஸ்டோன் பெல்ட்’ என்றும், இங்குள்ள மக்களில் அதிகமானோர் சிறுநீரகக் கல் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 சிறுநீரகக் கல்லானது, ஏற்கெனவே ஏதேனும் வியாதி இருப்பவர்களில் 12% பேருக்கு வரலாம். வயது வித்தியாசம் கிடையாது. ஆனால், வயதுக்கு ஏற்ப சிறுநீரகக் கல் வருவதற்கான காரணங்கள் மாறக்கூடும்.
 சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் பைக்குச் செல்லும் வழியில் 5 இடங்கள் குறுகலாக இருக்கும். பெரும்பாலும் அந்த இடங்களில்தான் அடைப்பு ஏற்படக்கூடும். அதாவது சிறுநீர் செல்லும் பாதையில் அழுக்கான நீர் செல்லும்போது கரைசல்கள் ஆங்காங்கே ஓட்டிக்கொள்ளும். அது தொடரும்போது படிப்படியாக அளவு அதிகரித்து அடைப்பு பெரிதாகி அடைத்துக்கொள்ளும். இதனால் சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகி, சிறுநீரகத்தில் தேங்கி, சிறுநீரகம் வீங்கும். இதனால் சிறுநீரகக் கல் உருவாகும்.
 பெரும்பாலும் சிறுநீரகக் கல் உருவாகக் காரணம் நாம் சாப்பிடும் உணவில் உள்ள உப்புதான். எந்த அளவுக்கு உப்பைக் குறைத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு சிறுநீரகத்துக்கு நல்லது.
 சிறுநீரகக் கல்லை உடனடியாக நீக்கவில்லை எனில், அதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து உயிரிழப்புவரை ஏற்படுத்தக்கூடும். சிறுநீரகக் கல்லை நீக்கிய பிறகு, மீண்டும் வராமல் இருப்பதற்கான மருத்துவ ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும். 
செயலிழப்பில் இரண்டு வகை!
தற்காலிகம், நிரந்தரம் என சிறுநீரகச் செயலிழப்பு இரண்டு வகைகளில் நேரும். வேறு ஏதேனும் ஒரு நோய்க்காக ஒரு மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததன் பக்கவிளைவாக சிறுநீரகம் பாதிக்கப்படுவது, தற்காலிகச் செயலிழப்பு. இதனைச் சரிசெய்துவிடலாம். ஆனால், நாள்பட்ட நிரந்த செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு. சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவது மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க உதவும். இன்று உலகம் முழுவதும் நாள்பட்ட நிரந்த சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 67% சதவிகிதம் பேரில் 40% பேர் சர்க்கரை நோயாலும், 27% பேர் ரத்த அழுத்தத்தாலுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
தற்காப்பு நடவடிக்கைகள்!
 சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்பதால், பாதிப்பு எதுவும் இல்லை என்றிருக்காமல், வருடம் ஒருமுறை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.   
 ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 
 உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும். 
 புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 சுயமருத்துவமாக வலி நிவாரணிகளோ, மற்ற மருந்து மாத்திரைகளோ எடுத்துக்கொள்ளக் கூடாது.
 கால்சியம் உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 விட்டமின்-சி உணவுப் பொருட்கள், திராட்சை, கோஸ், ‘பெரி’ என முடியும் காய்கறி, பழங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 தினம் 2 லிட்டர் தெளிவான, நிறமில்லாத சிறுநீர் வெளியேறும் அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 `மொத்தத்தில், சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டைக் குறைக்கும், கெடுக்கும் விதமான உணவு மற்றும் வாழ்க்கைமுறைப் பழக்க வழக்கங்களைத் தவிர்த்து வாழ்ந்தால், சிறுநீரகங்களும் நீடூழி வாழும் ஆரோக்கியமாக!’’
சுயமருத்து முதல் எதிரி!
உடலின் தேவையில்லாத கழிவு, நச்சுகளை வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணி அல்லது மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, அந்தக் கழிவு, நச்சுகளைத் தொடர்ந்து வெளியேற்றும் செயல்முறையில் சிறுநீரகங்கள் நிச்சயமாக பாதிக்கப் படும். எனவே, சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்துக்கான முதல் எதிரி.
அதிக உப்பு… ரொம்ப தப்பு!
உடல் தேவைக்கும் அதிகமான அளவுக்கு உப்பு சாப்பிடுவதால் கிட்னி பாதிப்பு மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, வாத நோய் உள்ளிட்ட இன்னும் பல பிரச்னைகள் வரக்கூடும். எனவே, ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு என்பதில் கவனமாக இருக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.