சனி, 4 அக்டோபர், 2014

கை, கால் மூட்டு வலி குறைய




லண்டன்: "கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்' என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, லண்டனில் வெளியாகும், "டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: "அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்
ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன' என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலி ஒன்றின் உடலில், அடிபட்ட இடத்தில், உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து, உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால், வீக்கம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு, சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன. இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட, இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால் மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால், வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது, வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது. உப்பு நீரில் ஊற வைத்த துணியால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல், போன்ற எல்லா முறைகளும் வலி, வீக்கத்தைக் குறைக்கின்றன.

கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர், இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று, குளித்து நிவாரணம் பெறுவதை, பல ஆண்டுகளாக, நாம் கண்டு வருகிறோம். உண்மையில், வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது. மருத்துவத்தில் பயன்படும், "ஹைபோடோனிக்' கரைசலில், மிகவும் குறைந்தளவு உப்பே உள்ளது. இக்கரைசலை அடிபட்ட இடத்தில் பயன்படுத்தும் போது, கடுமையான எரிச்சல் ஏற்படுவதைக் கண்டறிந்தோம். அதே சமயம், அடர்த்தியான உப்பைக் கொண்ட, "ஹைபர்டோனிக்' கரைசல், எரிச்சல் ஏற்படாமல் மட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இதே கரைசலை பயன்படுத்தலாம். இவ்வாறு ஆய்வு முடிவுகள், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, ஆறுதல் அளிக்கும் தீர்வை வெளிப்படுத்தி இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.