சனி, 7 மே, 2016

பெருகி வரும் சிறுநீரக பாதிப்புகள்!!!!


தற்காத்துக்கொள்ள விரிவான வழிகாட்டி…

‘‘ஒருவர் உயிர் வாழ ஒரு சிறுநீரகமே போதுமானது. ஆனால், இயற்கை ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்களைக் கொடுத்துள்ளது. இருந்தும் அவற்றைச் சரிவரப் பராமரிக்காமல் பிரச்னை களைப் பெற்று, வளரவிட்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலைமை வரை செல்வதற்கு, மக்களின் அறியாமையே காரணம்’’ என்று ஆரம்பித்த டாக்டர் வெங்கடேஷ், அதைப் போக்கும்விதமான தகவல்களை விரிவாகத் தந்தார்.
சிறுநீரகத்தின் முக்கியப் பணிகள்!
 1300-க்கும் மேற்பட்ட ரத்தக் கழிவுகளை வெளியேற்றுவது
 ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது
 ரத்தவிருத்தி
 வெயிலில் இருந்து கிடைக்கும் `விட்டமின் டி’யை முழுவதும் பய னுள்ளதாக மாற்றுவது
 ரத்தத்தில் உள்ள புரதத்தை பாதுகாப்பது
 எலும்பை பலமாக வைப்பது
 சாப்பிடும் உணவு, மருந்துகளில் உள்ள கழிவுகள், விஷத் தன்மையை பிரித்து வெளியேற்றுவது உள்ளிட்ட இன்னும் பல.
சிறுநீரகம்… சில தகவல்கள்!
 சிறுநீரகத்தின் சீரான இயக்கம் நம் கையில்தான் இருக்கிறது. குடிக்கும் தண்ணீர் தொடங்கி உட்கொள்ளும் உணவு, மாத்திரை மருந்துகள் வரை எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
 உடல் நிலை, வாழும் சூழல், சாப்பிடும் உணவுகள், குடிக்கும் தண்ணீரின் அளவு போன்றவற்றைப் பொறுத்து ஒருவருக்கு வெளியேறும் சிறுநீரின் அளவு மாறுபடும். ஒரு நாளைக்கு ஒருவர் தெளிவான, நிறமில்லாத 2 லிட்டர் அளவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும். அதற்குத் தேவையான தண்ணீரைக் குடிக்க வேண்டும். 
 சிறுநீரகப் பிரச்னை ஒரே நாளில் வரக்கூடியது அல்ல. அதேசமயம், ஆரம்பத்திலேயே அதை அறிந்துகொள்வதற்கு அறிகுறிகளும் இருக்காது. சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதற்கான அடிப்படை அறிகுறிகள் தென்படும்போது சிறுநீரக பாதிப்பானது வளர்ந்த நிலையில் இருக்கும். அதனால், வருடத்துக்கு ஒருமுறை சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே பாதிப்புகளைக் கண்டறிந்து சரிசெய்யவேண்டியது அவசியம்.
ஒரு மில்லியன் வடிகட்டிகள்!
ஆரோக்கியமான சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடிகட்டிகள் (nephrons) இருக்கும். கிட்னியின் சீரான இயக்கத்துக்குத் துணிபுரிபவை இந்த வடிகட்டிகள். கிட்னி பாதிக்கப்படும்போது இந்த வடிகட்டிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 45 வயதைக் கடந்தவர்களுக்கு இயற்கையாகவே இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 90 வயதில் 60 சதவிகித  வடிகட்டிகள் மட்டுமே இருக்கக்கூடும். என்றாலும், அந்த வயதின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு அதுவே போதுமானதாக இருக்கும். ஆனால், கிட்னி பாதிப்பு வந்த இளம் வயதினருக்கு அவர்களின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு ஈடுகொடுக்கும் எண்ணிக்கையில் இந்த வடிகட்டிகள் இல்லாதுபோகும்போது, அது நாளுக்கு நாள் பாதிப்பின் அளவை அதிகரித்து உயிரிழப்புவரை அழைத்துச் செல்லக்கூடும்.
சிறுநீரகப் பிரச்னைகள்… யார் யாருக்கு?
ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என பாகுபாடின்றி யாரும் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், 60 வயதைக் கடந்தவர்கள், சுயமாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்துக் கொள்பவர்கள், தேவையான தண்ணீர் குடிக்காதவர்கள்… என இவர்கள் சிறுநீரக பாதிப்புகளுக்கு முதன்மை இலக்காவார்கள். இந்தியாவில் பல லட்சம் பேர் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும், 2:1 என்னும் விகிதத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுநீரகக் கல் பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள்    கூறுகின்றன.
அறிகுறிகள்
 கால் வீக்கம்
 அதிக மற்றும் குறைந்த சிறுநீர் வெளியேறுவது
 இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது 
 மூச்சுவிடுவதில் சிரமம்
 ரத்தசோகை
 உயர் ரத்த அழுத்தம்
 எலும்பு பலமின்மை மற்றும் எளிதில் உடைந்துபோவது
 பசியின்மை
 வாந்தி
 சட்டென தோல் உரிந்துபோவது
 அடிக்கடி விக்கல்
 எடை கூடுவது, குறைவது
 மலட்டுத்தன்மை
 உடலுறவில் நாட்ட மின்மை உள்ளிட்ட இன்னும் பல.
சிறுநீரகக் கல் !
உலக அளவில் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களில் 12% பேர் சிறுநீரகக் கல் பிரச்னையை எதிர்கொள் கிறார்கள். இந்தியாவில் இது 30 – 40% ஆகும்.  குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை ‘ஸ்டோன் பெல்ட்’ என்றும், இங்குள்ள மக்களில் அதிகமானோர் சிறுநீரகக் கல் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 சிறுநீரகக் கல்லானது, ஏற்கெனவே ஏதேனும் வியாதி இருப்பவர்களில் 12% பேருக்கு வரலாம். வயது வித்தியாசம் கிடையாது. ஆனால், வயதுக்கு ஏற்ப சிறுநீரகக் கல் வருவதற்கான காரணங்கள் மாறக்கூடும்.
 சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் பைக்குச் செல்லும் வழியில் 5 இடங்கள் குறுகலாக இருக்கும். பெரும்பாலும் அந்த இடங்களில்தான் அடைப்பு ஏற்படக்கூடும். அதாவது சிறுநீர் செல்லும் பாதையில் அழுக்கான நீர் செல்லும்போது கரைசல்கள் ஆங்காங்கே ஓட்டிக்கொள்ளும். அது தொடரும்போது படிப்படியாக அளவு அதிகரித்து அடைப்பு பெரிதாகி அடைத்துக்கொள்ளும். இதனால் சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகி, சிறுநீரகத்தில் தேங்கி, சிறுநீரகம் வீங்கும். இதனால் சிறுநீரகக் கல் உருவாகும்.
 பெரும்பாலும் சிறுநீரகக் கல் உருவாகக் காரணம் நாம் சாப்பிடும் உணவில் உள்ள உப்புதான். எந்த அளவுக்கு உப்பைக் குறைத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு சிறுநீரகத்துக்கு நல்லது.
 சிறுநீரகக் கல்லை உடனடியாக நீக்கவில்லை எனில், அதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து உயிரிழப்புவரை ஏற்படுத்தக்கூடும். சிறுநீரகக் கல்லை நீக்கிய பிறகு, மீண்டும் வராமல் இருப்பதற்கான மருத்துவ ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும். 
செயலிழப்பில் இரண்டு வகை!
தற்காலிகம், நிரந்தரம் என சிறுநீரகச் செயலிழப்பு இரண்டு வகைகளில் நேரும். வேறு ஏதேனும் ஒரு நோய்க்காக ஒரு மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததன் பக்கவிளைவாக சிறுநீரகம் பாதிக்கப்படுவது, தற்காலிகச் செயலிழப்பு. இதனைச் சரிசெய்துவிடலாம். ஆனால், நாள்பட்ட நிரந்த செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு. சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவது மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க உதவும். இன்று உலகம் முழுவதும் நாள்பட்ட நிரந்த சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 67% சதவிகிதம் பேரில் 40% பேர் சர்க்கரை நோயாலும், 27% பேர் ரத்த அழுத்தத்தாலுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
தற்காப்பு நடவடிக்கைகள்!
 சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்பதால், பாதிப்பு எதுவும் இல்லை என்றிருக்காமல், வருடம் ஒருமுறை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.   
 ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 
 உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும். 
 புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 சுயமருத்துவமாக வலி நிவாரணிகளோ, மற்ற மருந்து மாத்திரைகளோ எடுத்துக்கொள்ளக் கூடாது.
 கால்சியம் உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 விட்டமின்-சி உணவுப் பொருட்கள், திராட்சை, கோஸ், ‘பெரி’ என முடியும் காய்கறி, பழங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 தினம் 2 லிட்டர் தெளிவான, நிறமில்லாத சிறுநீர் வெளியேறும் அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 `மொத்தத்தில், சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டைக் குறைக்கும், கெடுக்கும் விதமான உணவு மற்றும் வாழ்க்கைமுறைப் பழக்க வழக்கங்களைத் தவிர்த்து வாழ்ந்தால், சிறுநீரகங்களும் நீடூழி வாழும் ஆரோக்கியமாக!’’
சுயமருத்து முதல் எதிரி!
உடலின் தேவையில்லாத கழிவு, நச்சுகளை வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணி அல்லது மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, அந்தக் கழிவு, நச்சுகளைத் தொடர்ந்து வெளியேற்றும் செயல்முறையில் சிறுநீரகங்கள் நிச்சயமாக பாதிக்கப் படும். எனவே, சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்துக்கான முதல் எதிரி.
அதிக உப்பு… ரொம்ப தப்பு!
உடல் தேவைக்கும் அதிகமான அளவுக்கு உப்பு சாப்பிடுவதால் கிட்னி பாதிப்பு மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, வாத நோய் உள்ளிட்ட இன்னும் பல பிரச்னைகள் வரக்கூடும். எனவே, ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு என்பதில் கவனமாக இருக்கவும்.

கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படி…


  • முக்கனி என்று அழைக்கப்படும் மா,பலா,வாழை யில் மாம்பழத்திற்கு மயங்காதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை நம் நாவை சுண்டி இழுக்கும்.மேலும் மேலும்சாப்பிட வைக்கும்.
    மாம்பழ சீசன் துவங்கிவிட்ட நிலையில் காணும் இடங்களிலெல்லாம் மாம்பழக்கடைகள் முளைத்துள்ளன. சீசனும் மாம்பழத்தின் மீதான மக்களின் ஆர்வமும் பல இடங்களில் மாம்பழக்கடைக்காரர்களை தடுமாற வைக்கிறது. விற்பனையை
  • அதிகரித்து லாபம் ஈட்ட செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்கவைக்கின்றனர். மாம்பழ ஆசையில் அதை பரிசோதிக்காமல் வாங்கி உண்டுவிட்டு உடல்நிலையை கெடுத்துக்கொள்கிறார்கள் பலர்.
    தற்போது தமிழகத்தின் சராசரி வெப்பநிலையே 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்று சொல்லும் அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடையில் அதிகம் விளையக்கூடிய மாம்பழம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்தான் அச்சுறுத்தலுக்கு உரியது. அதற்கு காரணம், கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயுவின் மூலம் மா, வாழை போன்றவைகளை  12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம்  சாதாரண ஒரு காய் 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும். எனினும்,  அதிக விற்பனையை கருத்திற்கொண்டு பழ வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்.
    இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படும். கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள்  நல்ல கனமாகவும், தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும், தோலை நீக்கிப் பார்த்தால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மக்கள் கண்டறிய முடியும்.
    அவசர உலகத்தில் இதனை கண்டறியும் மனமோ,நேரமோ இல்லாத அப்பாவி மக்கள் ஏமாந்து வாங்கி உண்டு உடலை கெடுத்துக்கொள்கின்றனர்.  ஆனால் வியாபாரிகள் மத்தியில் கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களைப்பற்றி வேறுவிதமாக சொல்லப்படுகிறது.
“அந்தக் காலத்தில் பழங்களைப் பழுக்கவைக்க புகைமூட்டம் போடுவார்கள். அதற்கு அவசியமான காற்றுப் புகாத அறைக்கு வாய்ப்பில்லாததால்  அதற்கு பதிலாகத்தான் நவீன முறையில் கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கிறோம். இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். மருத்துவ ரீதியாக கால்சியம் கார்பைடால் எந்த கெடுதியும் கிடையாது. கார்பைடு பழங்கள் பற்றி வருவதெல்லாம் பெரும்பாலும் வதந்திகள்தான்” என்று மறுக்கின்றனர்.
பழ வியாபாரிகள் மனசாட்சியோடு நடக்கவும், அதனை உண்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் என்று  எண்ணி  இது போன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

தாய்மையின் அடயாளம் கண்டறிவது எப்படி?


கருத்தரித்தல் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து வருகிறது. கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவையெல்லாம், முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சமிக்ஞைகள் ஆகும். கருத்தரித்த ஒருவாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளைகளில் சில அறிகுறிகள் தோன்றும்.
இயல்பான ஹார்மோன் செயல்பாடுகளில் மாறுபாடுகள் உண்டாகும்போது, கருத்தரித்திருப்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
1. மாத விலக்கு வராமை.
2. குமட்டல்,
3. இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
4. புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்.
5. வாசனையைக் கண்டால் நெடி.
6. மார்பகம் பெரிதாவது, தொட்டால் வலி, நரம்புகள் புடைத்துத் தெரிதல், மார்பகக் காம்புகள் கருப்பாக மாறுதல் என மார்பகத்தில் மாற்றங்கள்.
7. மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு.
8. புளி, களிமண், ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஆசை ஏற்படுதல்.
மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கைகால்களும் உருவாகும். இக்காலக்கட்டத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக்குழந்தை பாதிக்கப்படும்.
முதல் அறிகுறிகள்:
முதல் அறிகுறிகள் எப்போதும் தனியாகவோ, பிற காரணிகளுடன் இணைந்தோ தோன்றக்கூடும். இந்த அறிகுறிகளை மட்டும் வைத்து கர்ப்பத்தை முடிவு செய்யாமல், அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. காரணம், இந்த அறிகுறிகள் சிலவேளைகளில் குழப்பத்தையும் உண்டாக்கும்.
உதாரணத்திற்கு சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மாதவிலக்கு நிற்பது
கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு ஆவது என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்காகவதுண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்க நின்றிருக்கும்.
இந்த நிலைகளுக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல்,புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், இரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடற்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குத் தொடராது. ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.
சிலர் கர்ப்பம் தரித்திருப்பார்கள். ஆனால், மாதவிலக்கு வராமல் இருந்தாலும் தங்கள் கருத்தரித்திருப்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள். இவர்களுள் பாலூட்டும் காலத்திலேயே கருத்தரிப்பவர்கள், மாதவிலக்கு வற்றும் காலத்தில் கருத்தரிப்போர் ஆகியோரை உதாரணமாகக் கூறலாம்.

களைப்பு
பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடற்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த பன்னிரண்டாவது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.
பசலை நோய் அல்லது மசக்கை
இதை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னெஸ் என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பல பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் வருகிறது. மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கூறிய அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பலர் உறுதி செய்துகொள்கிறார்கள்.
சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்னைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

பசலை நோய் அல்லது மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?
முட்டையும் அணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படியிருந்தும் சக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
வேறு ஒன்றுமில்லை. தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு வேண்டிய சத்தையும் தாய் பெற வேண்டியுள்ள நிலையிருப்பதே ஆகும். இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகிலிருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.
மார்பகப் பகுதியில் மாற்றங்கள்
முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்திலுள்ள இரத்த நாளங்களும், மொத்தசுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவங்கள் சுரக்கும்.
கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் மேற்சொன்ன மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

மனநிலை மாற்றமும், எடையில் மாற்றமும்
சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்கமுடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.
வயிறு பெரிதாக…
கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக பதினெட்டு முதல் இருபதாவது வாரங்களில் இந்தஅசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.
கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
மேலே குறிப்பிட்டுள்ள கருக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாக இருப்பதையும் நீங்கள்அறிந்திருப்பீர்கள். ஆகவே, இந்த அறிகுறிகளை மட்டும் அடையாளமாகக் கொண்டிராமல், கருவை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
கருவை உறுதிப்படுத்தும் பரிசோதனை முறைகள்
அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது. பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் மூன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும். என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் மூலம் விரைவாகவே கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்துகொள்ளலாம். இவற்றைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீர்ப் பரிசோதனை
முதல் சிறுநீரை எடுத்துப் பரிசோதிப்பதற்காக கிட்டுகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இவை பெரும்பாலும் எல்லா மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். இதிலேயே கருத்தரித்திருப்பதால் அதற்கான அடையாளம் என்ன, கருத்தரியாவிட்டால் அதற்குரிய அடையாளம் என்ன என்பதைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றைக் கண்டு பெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யலாம்.
ஹார்மோன் பரிசோதனை
நம்பகமான பரிசோதனை முறை என்பது மாதவிலக்கு நின்ற நாளிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து செய்யப்படுகிறது. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் பாலியல் முதல் சிறுநீரைப் பிடித்து பரிசோதித்தால் அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்க வில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இப்பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, இரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் மூலம் அறிந்துகொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.
கரு நெளிவுப் பரிசோதனை
கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாதவாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது குயிக்கனிங் பரிசோதனை என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.
இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் கையாளுகிறார்கள்.