வியாழன், 7 ஆகஸ்ட், 2014

குட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்? --- ஹெல்த் ஸ்பெஷல்

தாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது. குழந்தைகளை நல்ல மனநிலையோடும், நற்சிந்தனையோடும் வைத்திருக்கவேண்டும் என்பதே பெற்ற வயிறுகளின் தவிப்பு. அறிவிலும், உடல் நலத்திலும் ஆகச்சிறந்த வாரிசாக தங்கள் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் பெரிதும் போராடுகிறார்கள். 'ஐந்தில் வளையாதது’ என்பதுபோல் மழலையாக இருக்கும்போதே ஊட்டமான உணவு, ஆரோக்கியமான சூழல், உற்சாகமான மனநிலை, நல்ல பழக்கவழக்கங்கள் எனக் கற்றுக்கொடுக்காவிட்டால், வளர்ந்த பிறகு திருத்துவது ரொம்பவே சிரமம்.
போட்டிகளும் ஆபத்துகளும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் குழந்தை பிறந்தது முதல், பள்ளிக்குச் செல்லும் வரை அதாவது மூன்று வயது வரை உற்சாகமாக வளரக்கூடிய விஷயங்களை இதயபூர்வத்தோடு விவரிக்கிறது இந்த இணைப்பு.


குழந்தையைத் தூக்கும் முறை: 
பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காமல் இருக்கும். குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து வீரிடலாம். உரம் விழலாம். இதற்குச் சுய மருத்துவம் செய்யக் கூடாது. குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும். திரும்பவும் இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்குங்கள். பஞ்சு போல் மென்மையாகக் கையாளுவதன்மூலம் பிஞ்சு உடலுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கும்.
  குளிப்பாட்டும் முறை:   
பிறந்த குழந்தைகளைத் தாயே பயமின்றிக் குளிப்பாட்டலாம். குழந்தைகளுக்கான பிரத்யேக எண்ணெயை உடலில் தடவி வருடிவிடுங்கள். நாம் தரையில் அமர்ந்தபடி, குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோலத் தூக்கிப் பிடிக்க வேண்டும். குழந்தையின் உடலை பேபி சோப் போட்டுக் குளிப்பாட்டி, பிறகு தலை முகத்தைக் கழுவுங்கள். தலைக்குக் குளிப்பாட்டும்போது, ஒரு கையை அகல விரித்து, குழந்தையின் நெற்றிப் பகுதியைப் பிடித்தபடி, தண்ணீர் ஊற்ற வேண்டும். வாயால் மூக்குச் சளியை எடுக்கிறேன் என்ற பெயரில் வாயால் ஊதுவது, அழுத்துவது கூடவே கூடாது. குளிப்பாட்டிய உடன் தலை, காது, மூக்கு, கழுத்துப் பகுதியை ஈரம் போகத் துவட்டுங்கள்.
வாரம் ஒரு முறை மிகவும் மிதமான வெந்நீரில், சிறிது யூகலிப்டஸ் இலையைப் போட்டுக் குளிப்பாட்டினால், குழந்தை ஆரோக்கியமாக வளரும். நிம்மதியாகத் தூங்கும்.
தாய்ப்பால் ஊட்டும் முறை: 
குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால்தான் கொடுக்கவேண்டும்.  குழந்தையின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தாய்ப்பால் மிகச் சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்க, பால் அதிகம் சுரக்கும். தாய்ப்பால் சரியாகப் புகட்டுகிறோமா? குழந்தை சரியாகப் பால் குடிக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முதலில் குழந்தையின் வாய்ப் பகுதி அகலமாக விரிந்திருக்கிறதா என்று கவனியுங்கள். குழந்தையின் முகவாய் தாயின் மார்பைத் தொடுவதுபோல் இருக்கவேண்டும். மார்புக் காம்பின் கரியப் பகுதி குழந்தையின் வாயின் மேற்பகுதியில், கீழ்ப்பகுதியைவிட அதிகமாகக் காணப்படவேண்டும். அதாவது கவ்விய நிலையில் இருந்தால் குழந்தை ஆழமாக உறிஞ்சும்.  தாய்க்கும் மார்பு காம்பில் வலி ஏற்படாது. இது, தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான ஒரு அற்புதப் பிணைப்பை உருவாக்கும்.
தூங்கவைக்கும் முறை: 
குழந்தை தூங்கும் வரை, அதன் அருகில் அரவணைத்தபடி பால் கொடுத்துவிட்டு, தூங்கியதும், புடவையில் கட்டிய தூளியில் போடலாம்.  தூளி அதிக உயரத்தில் இல்லாமல், தரையோடு இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளுங்கள்.  தாயின் அரவணைப்பு தொடர்ந்து இருப்பதுபோல் அது உணரும்.  வெயில் காலத்தில் கட்டிலில் படுக்க வைப்பதைவிட, குழந்தைகளைத் தரையில் ஒரு பாயை விரித்து, அதில் பருத்திப் புடவையை மெத்தைபோல் நன்றாக மடித்துப் படுக்கவையுங்கள். உஷ்ணம் குழந்தையைத் தாக்காமல் குளிர்ச்சியாக உணரும். குழந்தையின் அருகில் கனமான பொருட்கள் எதையும் வைக்காதீர்கள். காற்றாடிக்கு நேராகப்படுக்க வைக்காதீர்கள். இதனால் குழந்தை மூச்சுத் திணறலுக்கு ஆளாக நேரிடும். காற்றாடியின் வேகத்தைக் குறைத்து, ஓரமான இடமாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஒரே இடத்தில் படுக்கவைத்தாலும், உடலில் சீக்கிரமே உஷ்ணம் ஏறிவிடும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, குழந்தையை இடம் மாற்றிப் படுக்கவைக்க வேண்டும்.


குழந்தைகள் வயிற்றுப்போக்கு, சளி, இருமல், காய்ச்சல் இவற்றால் அடிக்கடி சோர்ந்துவிடுவது உண்டு. உணவு வயிற்றுக்கு ஒப்புக்கொள்ளாமல்போவது, செரிமானப் பிரச்னை, வயிற்றில் பூச்சி போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். குழந்தைகள் எதைக் கண்டாலும், அதை உடனே வாயில் வைத்துக்கொள்வார்கள். அதனால், கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்னையை ஏற்படுத்திவிடும். சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்தால், உடலில் இருக்கும் கழிவுகளும் கிருமிகளும் வெளியேற்றப்படும்.  வயிற்றுப்போக்கும் சரியாகும்.
அதிகக் குளிர்ச்சி, தொற்றுநோய் இருந்தாலும் காய்ச்சல் வரும். பல்வேறு நோய்களுக்குத் தண்ணீரே முக்கியக் காரணம். அதனால், தண்ணீரை நன்றாகக் காய்ச்சி, ஆறவைத்து, வடிகட்டிக் கொடுப்பது அவசியம். தொற்று நோய்களால் மூக்கு ஒழுகுதல், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை நீடித்தால், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட தேவையற்ற பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. சுற்றுப்புறத்தைச் சுகாதாரத்துடன் வைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்களால்கூட சளி ஏற்படலாம். சிறுநீர் கழித்ததும், உடனுக்குடன் கவனித்து, மாற்றவேண்டியது அவசியம்.
டயபரை அடிக்கடி மாற்றாமல் போகும்போதும், இறுக்கமாக அணிவிக்கும்போதும் குழந்தைகளுக்குச் சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்.  டயபரைக் குழந்தைக்குப் போடும்போதே, அதன் கால் இடுக்குப் பகுதியில் பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிவிட்டுப் போடுங்கள்.  இதனால், குழந்தைக்கு அரிப்பு, அலர்ஜி ஏற்படாமல் இருக்கும்.
 நோய் தடுக்கும் மருந்துகள்... 
 குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலேயே மருந்துகள், தடுப்பு ஊசிகளைப் போட்டுவிடுகிறார்கள். அவை என்ன தடுப்பு ஊசி, என்ன மருந்து என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
 குழந்தை பிறந்ததும், காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போடவேண்டும்.
 ஒன்றரை மாதத்தில், டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பு ஊசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ்.
  மூன்றரை மாதத்தில் டிபிடி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
 நான்கரை மாதத்தில் போலியோ சொட்டு மருந்து.
  ஐந்தரை மாதத்தில் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ்.
  ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மை தடுப்பு ஊசி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பு ஊசிகள்...
   ஒன்றே கால் வயதில் தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பு ஊசி
   ஒன்றரை வயதில் டிபிடி
   நாலரை வயதில் டிபிடி மற்றும் போலியோ சொட்டு மருந்து.


குழந்தைக்கு நம்பகமான சூழலும், தாயின் அரவணைப்பும் மிகவும் அவசியம். பாசமும், பாதுகாப்பும் இருப்பதைக் குழந்தைக்கு உறுதிப்படுத்தினால்தான் அதன் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். தொடுதல், கொஞ்சுதல், பேசுதல் போன்ற செயல்களின் மூலம், குழந்தை நம் முகம் பார்த்து வாயைக் குவித்து வார்த்தைகளை வெளிப்படுத்த முயற்சிக்கும்.  சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.
வளர்ப்பவர்களைப் பார்த்தே குழந்தையின் பழக்கவழக்கங்களும் இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழல். ஒரு நாளில் தாய், குழந்தையுடன் செலவிடும் நேரம் குழந்தையின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும். குழந்தைகளின் செயல்களைப் பாராட்டுவதும், சிறு தவறு செய்தால் 'ஸாரி’ கேட்பதும், எடுத்த பொருட்களை அதற்கான இடத்தில் வைக்கப் பழக்குவதும் பெற்றோரின் கடமை.  விட்டுக் கொடுத்துப் போகும் குணம்தான் சமூகத்தில் குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். 
எதைப் பார்த்தாலும், ஆசை எழும்பும் வயது.  அதற்காக, கேட்டதை எல்லாம் வாங்கித் தருவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்களின் குடும்பச் சூழல், வசதி, தேவையைப் புரிந்துகொண்டு,  அதற்கேற்ப வாழும் சூழலை உருவாக்குங்கள். பிஞ்சிலேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் வாழும் சூழல், பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். குழந்தையின் மனதில் தேவை இல்லாத ஆசைகள் இருக்காது.  மனக்குழப்பமும் ஏற்படாமல், தெளிவாய் சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.   

நடப்பது, ஓடுவது, விளையாடுவது, எதையாவது எடுத்து வீசுவது என சுட்டிகள் துறுதுறுவென இருப்பார்கள். இதைத் தொல்லையாக நினைக்காமல் பெற்றோரும் கூடவே குழந்தையை உற்சாகப்படுத்தவேண்டும்.  இது பெற்றோருக்கும் ஓர் உடற்பயிற்சிதான்.
பிஞ்சு குழந்தைகள் இருக்கும் வீட்டில், பெரியவர்கள் குரலை உயர்த்திப் பேசுவதோ, கத்துவதோ கூடாது. சுற்றி இருக்கும் விஷயத்தைக் கிரகிக்கத்தொடங்கும்போது, சத்தமான பேச்சுகூட குழந்தைக்குப் பயத்தை ஏற்படுத்தலாம்.
சாப்பிட அடம்பிடித்தாலோ, அழுகையை நிறுத்துவதற்காகவோ குழந்தையிடம் 'பூச்சாண்டி வர்றான் பாரு’ என்று பயம் காட்டிப் பணியவைக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு. பின்னாளில் உணவையே வெறுக்கும் அளவுக்குச் சாப்பாட்டின் மீதான பிடிப்பு போய்விடலாம். அன்போடு, நெறிக் கதைகளைச் சொல்லி உணவை ஊட்டுவதே சிறந்தது.
சிலர் குழந்தைகளை மேலே தூக்கிப்போட்டு விளையாடுவது, சுழற்றி விளையாடுவது என்று விபரீதமாகக் கொஞ்சுவார்கள். இதனால், குழந்தை சிரிப்பதைப் பார்த்து, ரசிப்பதாக நினைத்துக்கொண்டு திரும்பத் திரும்பச் செய்வார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயம்.  குழந்தைகளுக்கு மனதளவில் இனம் புரியாத பய உணர்வு ஏற்படும். 'இதைச் செய்யாதே’ எனத் தடை போடுவதே குழந்தையின் பயத்தை அதிகரிக்க செய்யும். அதே எச்சரிக்கையை, 'ஜாக்கிரதையாகப் பண்ணும்மா...’ என்று சொன்னால் குழந்தைகள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படும். நல்ல பண்புகளும் வளரும்.
குழந்தைகள் நடக்க ஆரம்பித்ததும், வீட்டையே சுற்றிச்சுற்றி வலம் வரத்தொடங்கும். அடிக்கடித் தடுக்கி விழும்.  குழந்தைகள் நடக்கக்கூடிய இடங்களில் கூர்மையான டேபிள், ஸ்டூல் போன்ற எந்தப் பொருட்களையும் வைக்காதீர்கள்.  தண்ணீர், எண்ணெய் போன்றவை கொட்டிவிட்டாலும், உடனடியாகக் கவனிக்கவேண்டும். குழந்தையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருப்பது மிகவும் முக்கியம்.
அன்பு, பாசம், அரவணைப்பு எனச் சகல சந்தோஷ சூழலில் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கை, தைரியத்துடன் அறிவாளியாகவும் வளர்வார்கள். 

குழந்தைக்குத் தேவையான உணவு உடலில் சேர்கிறதா என்பதை அறிந்துகொள்ள முதலில் குழந்தையின் எடையைக் கவனிக்க வேண்டும். குழந்தை பிறக்கும்போது 2.75 கிலோ இருந்தால், நான்கே மாதத்தில் அதன் எடை 5 கிலோ இருக்க வேண்டும். எடை ஓரளவு இரட்டிப்பானால்தான், குழந்தை சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்று அர்த்தம். 
உடை 
பிஞ்சுக் குழந்தைகளின் உடை பஞ்சுபோல் மிருதுவாக இருக்கவேண்டும். டிசைன், கலர், அழகு என்பதை மட்டும் பார்க்காமல், உடலை வதைக்காத பருத்தி ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.  ஒரு மாதக் குழந்தைக்கும் இப்போது பாவாடை, சட்டை வந்துவிட்டது. இவற்றைப் போட்டுப் அழகுபார்ப்பது, குழந்தைக்கு இம்சையை ஏற்படுத்தலாம்.  உடைகளால் ஏற்படும் அசௌகரியங்களைக் குழந்தையால் வெளியில் சொல்ல முடியாது.
வெயில் காலத்தில் பருத்தியால் ஆன உடைகளே குழந்தைகளின் உடலுக்குப் பாதுகாப்பு. மிகவும் இறுக்கமான ஆடைகள் அணிவிப்பதை முடிந்தமட்டும் தவிர்த்துவிடுங்கள். அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதால், எளிதில் கழற்றி மாற்றக்கூடிய உடைகளை வாங்குங்கள்.
கடைகளிலேயே குழந்தைகளுக்கு உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்கும் நிலை இருப்பதால், புதுத் துணிகளை வாங்கியவுடன், நன்றாக அலசிக் காயவைத்த பிறகே அணிவது நல்லது.
ஜிகினா, ஜம்கி உடைகளில் பட்டன்கள், ஊக்கு, கொக்கிகள் இருந்தால் அது குழந்தையின் உடலை உறுத்தலாம்.  குழந்தைகள் கையில் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. அதனால், வெல்க்ரோ, எலாஸ்டிக், லேஸ் உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.  மழைக் காலத்திலும், ஸ்வெட்டர் குல்லா போன்றவற்றை உடுத்தும்போது, ஜிப் இல்லாததாகப் பார்த்து, கழுத்துவழியாக மாட்டுவதுபோல் வாங்கலாம்.

குழந்தை 3 மாதத்துக்குள் முகம் பார்த்து சிரிக்கும். நீங்கள் 'ம்...’ என்று சொன்னால், குழந்தையும் 'ம்’ என்று சொல்லும். காதில் வாங்கும் சத்தத்தை உணர்ந்து, திரும்பவும் அதைச் சொல்லிப்பார்க்கும். அதனால், மென்மையான ஒலி எழுப்பிக் குழந்தையை உற்சாகப்படுத்தலாம்.
4-வது மாதம், கவிழ்ந்துகொண்டு, தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க குழந்தை முயற்சிக்கும். குழந்தையை நிற்கவைக்க, இந்த மாதம் முதல் பழகலாம். கைகளில் எதையாவது கொடுத்து குழந்தையை நிற்கவைக்கலாம்.
5 - 6 மாதங்களில் குழந்தை உட்க£ர முயற்சிக்கும். தலையையும் நெஞ்சையும் உயர்த்தும். எதையாவது பிடித்துக்கொண்டு அதனால் உட்கார முடியும். பிடிமானம் விடுபட்டால் கீழே விழும். தரையில் அழுத்தமாக முன்னங்கையை ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.
6 மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்க தொடங்கும். அப்போது, வாயில் இருந்து அதிகமான அளவு எச்சில் வெளிவரும். தண்ணீர், பால் கொடுக்கும் போதும், வாயில் அதிகமாக எச்சில் சொட்ட ஆரம்பிக்கும். துணிகள் ஈரமாக இருந்தால் அடிக்கடி மாற்ற வேண்டும். பற்கள் முளைப்பதன் அறிகுறி தென்பட்டாலே, குழந்தை வலியால் அடிக்கடி அழத் தொடங்கும். குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு ஏற்ற வலி நிவாரணி மருந்தைக் கொடுக்கலாம். பற்கள் முளைக்கும்போது ஈறுகளில் அரிப்பு, வலி, எரிச்சல் இருக்கும். பால் குடிப்பதைக்கூட குழந்தை மறுக்கும். சில நேரங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
பற்கள் முளைக்கும்போது குழந்தைகள் தூக்கம் இல்லாமல், புரண்டு புரண்டு படுக்கும். நடு ராத்திரியில் எழுந்து அழத் தொடங்கும்.
7-வது மாதம் - எந்த உறுதுணையும் இல்லாமலே குழந்தை உட்காரப் பழகிக்கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நின்று, தானே நேராக நிற்கப் பழகும்.
8 - 9 மாதங்களில், நன்றாகவே உட்காரும். கால்களில் மொத்த எடையையும் தாங்கிக்கொள்ளப் பழகும். எதைக் கொடுத்தாலும், அதைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளும். சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகச் சேர்க்கவும், அடுக்கவும் கற்றுக்கொள்ளும். பத்தாம் மாதம், நன்றாகத் தவழ்ந்துபோய் எல்லாப் பொருட்களையும் எடுக்க ஆரம்பிக்கும். எதையாவது பிடித்தபடி ஓர் இடத்தில் இருந்து, இன்னோர் இடத்துக்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக்கொள்ளும்.
11 - 12 மாதம் - உட்கார்ந்த நிலையில் திரும்பவும், நன்றாக முழங்கால்களை ஊன்றித் தவழவும் முடியும். நேராக நிற்கும். தரையில் எதையாவது எழுதுகிற மாதிரி செய்யும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும், நேராக நிற்கப் பழகும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக்கொள்ளும்.
2 - 3 வயதில்,  அம்மா அப்பா பேசுவதை உன்னிப்பாகக் கேட்டு, அதற்குப் பதில் சொல்லத் தொடங்கும். பெற்றோர் அதிகம் பேசுவதால் மட்டுமே, குழந்தை நல்ல பேச்சுத் திறனுடன் பிரகாசமாக ஜொலிக்கும். இந்த வயதில் குழந்தையுடனான உரையாடல் இல்லாமல் போனால், குழந்தை பேசுவதும் தாமதமாகிவிடும்.  குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், 'ஸ்பீச் தெரப்பிஸ்ட்’டிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

கிடைப்பதை எல்லாம் வாயில் வைக்கும் பழக்கம், விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது சகஜம்தான். ஒருவிதப் பயத்தினாலும் சில குழந்தைகள் விரலைச் சூப்பலாம். ஆனால், அதுவே தானாகச் சரியாகிவிடும். 'விரல் சூப்பினால் வாய் பெரிதாகிவிடும் கண்ணா... கிருமிகள் வயித்துக்குள்ள போய் ஃபைட் பண்ணும்’ என்று மென்மையாக ஒரு கதை போல் சொன்னால், நிச்சயம் குழந்தைகள் அந்தப் பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.
குழந்தைகளுக்கான மென்மையான பிரஷினால் பல் தேய்த்து, வாய் கொப்பளித்த பின்னரே வயிற்றுக்கான ஆகாரத்தைத் தரப் பழக்குங்கள். பல் துலக்காமல் சாப்பிடும்போது, வாயில் உள்ள கிருமிகள் வயிற்றுக்குள் போய் பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும்.
இரண்டு வயது குழந்தைகள் 10 மணி நேரம் நன்றாக உறங்குவார்கள். சில குழந்தைகள் அதிக நேரம் தூங்க மாட்டார்கள். அதற்கு வீட்டுச் சூழல், அறையின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாவது காரணம் இருக்கும். குழந்தை குறைவான நேரமே தூங்கினாலும், சுறுசுறுப்பாக இருந்தால், அதை நினைத்துக் கவலைப்பட வேண்டியது இல்லை.
சில குழந்தைகள் மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பார்கள். சில நேரங்களில் பச்சையாகவும் மலம் வெளியேறும். எப்போதாவது இப்படி நிகழ்ந்தால் ஆபத்து இல்லை. ஆனால், தொடர்ச்சியாகப் பச்சை நிறத்தில் இருந்தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ மருத்துவரிடம் காட்டுவதே நல்லது. ஒரு வயதான பிறகு சிறுநீர், மலம் கழிப்பது எப்படி என்பதைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள். 
ஓடிப் பிடித்து விளையாடுவது, விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தந்து ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்யும் ஓவியம், பெயிண்டிங் கற்றுத் தருவது, இசையைக் கேட்கச் செய்வது, களிமண் அல்லது சப்பாத்தி மாவைப் பிசைந்து பலவிதமான உருவங்கள் செய்யச் சொல்வது, பேப்பர்களை மடக்கி விமானம், கப்பல், பூக்கள் செய்யக் கற்றுக்கொடுப்பது எனக் குழந்தைகளுக்கான உற்சாக வழிகளைத் திறந்துவிடுங்கள். குழந்தைகளுக்குப் பயனாக இருக்கும்பட்சத்தில்மட்டும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உட்காரவையுங்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் குழந்தைகள் அடிமையாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுவைக்கும் பேச்சுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவைகளும் பழகியக் குழந்தைக்கு பேச்சில் பிரச்னை இருக்காது. ஏதாவது ஒரு சுவை மட்டுமே பழக்கப்பட்ட குழந்தைக்குப் பேச்சு தெளிவாக இருக்காது. கோர்வையாக வார்த்தைகளைப் பேசத் தாமதம் ஆகலாம். ஆகவே, அனைத்து சுவைகளையும் சுவைக்கப் பழக்குங்கள். 
குழந்தையால் எவ்வளவு சாப்பிட முடியுமோ... அந்த அளவு மட்டுமே உணவு கொடுங்கள். சாப்பிட்டு முடித்த உடன், 'வெரிகுட்’ சொல்லுங்கள். 'சமத்து’ எனக் கொஞ்சுங்கள். குழந்தைத் தானாக முன்வந்து சாப்பிடும்போது, உணவு சிந்தினாலோ, கொட்டினாலோ, திட்டாதீர்கள். சிந்தாமல் சிதறாமல் சாப்பிடக் கற்றுக்கொடுங்கள். துவைத்த துணிகளை மடித்து, குழந்தைகளை பீரோவில் அடுக்கச் சொல்லுங்கள். சுவாரஸ்ய அனுபவமாக நினைத்து குழந்தைகள் அந்த வேலையை உற்சாகமாகச் செய்வார்கள். வேலை, விளையாட்டு, உணவு என அனைத்தின் வழியாகவும் பழக்கங்களை உருவாக்கலாம்.
சமைக்கும்போது, 'இது தக்காளி, இது வெண்டைக்காய்... இதை நான் நறுக்கப்போறேன்’ என்று காய்கறிகளைக் காட்டி, வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். குழந்தை சுயமாகச் சிந்திக்கவும், அனைத்து செயல்களைத் திறமையாகச் செய்யவும் இது வாய்ப்பாக அமையும். 'செய்யாதே’ எனத் தடுப்பதற்கு முன் எதைச் செய்யலாம் என்பதைக் கற்றுக்கொடுங்கள். ஒரு பாராட்டும் முத்தமும் குழந்தையின் பிரகாசமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். 

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்குக் கட்டாய உணவு தாய்ப்பால் மட்டுமே.  முதல் 6 மாதங்கள் தாயிடம் இருந்து பால் குடிப்பதால், வைட்டமின் சி கிடைத்துவிடும். அதன் பிறகு தாய்ப்பாலுடன், காய்கறிகள், பழங்கள், சீரான திட உணவைக் குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.
 கஞ்சிகளைக் கொடுக்கலாம். தானியங்களை நன்றாக அரைத்து, சலித்து, அந்த மாவில் கஞ்சியாக நீர்க்கக் காய்ச்சிக் கொடுக்கவேண்டும்.
   வாழைப்பழம், சப்போட்டா இவற்றை நன்றாக மசித்துத் தரலாம். நன்றாக வேகவைக்கப்பட்ட முட்டையின் மஞ்சள் கருவை மசித்துத் தரலாம்.
   குழைய வடித்த சாதத்தில் பருப்பை மசித்து, நெய் சேர்த்துத் தரலாம்.  இதனுடன் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளையும் லேசாக வேகவைத்து மசித்துச் சேர்க்கலாம்.
  இரண்டு ஸ்பூன் கேழ்வரகை முந்தைய நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்துக்கொள்ளுங்கள். சிறிது தண்ணீரை அடுப்பில் வைத்து, அரைத்த கேழ்வரகு விழுதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி, அந்தப் பாலை விட்டுக் கைவிடாமல் 2 நிமிடம் கிளறவும். இதில் பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்.

வளரும் குழந்தைக்குப் பால் போஷாக்கான உணவு. ஆனால், பாலை நன்றாகக் காய்ச்சித்தான் தர வேண்டும். அதேபோல் முட்டையை வேகவைத்து அதைக் குளிரவைத்துத் தர வேண்டும்.
தண்ணீரையும் நன்றாகக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி குழந்தைக்குக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு 7 முதல் 8 மாதங்கள் நிறைவடைந்ததும், தயிர் சாதம் கொடுக்கலாம். சிலர் சளி பிடிக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். தயிர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. வயிற்றில் புண் வராமல் தடுக்கும். அதிக அளவு பழச்சாறுகள்,  காய்கறிகளில் சூப் செய்து தரலாம். அந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளைக் குழந்தைக்கு ஏற்றபடி செய்து தரலாம். 

9 முதல் 10-வது மாதத்தில் ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா போன்ற வெரைட்டியான பழங்கள், வைட்டமின் சி அடங்கிய நெல்லிக்காய் மசித்துக் கொடுக்கலாம். பழச்சாறாகவும் கொடுக்கலாம்.
எந்தப் பழத்தில் சாறு தயாரித்துக் கொடுத்தாலும், அதை வடிகட்டிய பிறகே தரவேண்டும்.  கொட்டைகள் சரியாக அரைபடாமல் இருந்தால், குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கும் அபாயம் இருக்கிறது.  பழங்களைத் தரும்போது அதை நன்றாகக் கழுவி மசித்த பிறகே தர வேண்டும். இட்லி, உப்புமா, சப்பாத்தி, தயிர், வேகவைத்த முட்டை, முள் நீக்கப்பட்ட மீன் தரலாம்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கான காலகட்டம் 7 மாதம் முதல் ஒன்றரை வயது வரை.  இதில் புரதசத்து மிகவும் அத்தியாவசியம். வைட்டமின் சி, பி காம்ப்ளெக்ஸ், கொழுப்பு என நிறைய சத்துக்கள் தேவைப்படும்.
6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு மற்ற உணவுகள் தேவைப்பட்டாலும், சத்து, புரதம் மற்றும் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து போன்றவைகளுக்குத் தாய்ப்பாலே சிறந்த மூலப்பொருள். குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை நோய்களில் இருந்து தாய்ப்பால் பாதுகாப்பு அளிக்கிறது. 6 மாதத்தில் இருந்து ஒரு வயது வரை மற்ற உணவுகளுக்கு முன்பாக தாய்ப்பால் தரவேண்டும். குழந்தையின் உணவில், வைட்டமின் மற்றும் தாதுக்கள் கிடைக்க, தோல் நீக்கி, வேகவைத்து, மசிக்கப்பட்ட காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பழங்கள், எண்ணெய், மீன், முட்டை, பால் சார்ந்த பொருட்கள் இருக்க வேண்டும். இரண்டாவது வயதில், தாய்ப்பாலை உணவுக்குப் பிறகும் மற்ற நேரங்களிலும் தரவேண்டும்.
 1 வயது முதல் மூன்று வயது வரை
ஒரு வயது நிறைந்த குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை அதிகம் தரக் கூடாது.  ஒருமுறை மட்டுமே பழரசம் கொடுக்கலாம். நாம் சாப்பிடும் உணவுகளைக் குழந்தைக்குத் தரலாம். கட்டாயப்படுத்திச் சாப்பிடவைக்கக் கூடாது. ஒரே மாதிரியாகச் செய்யாமல், விதவிதமாக செய்து தரவேண்டும். உணவில் தினமும் கீரை நல்லது. கீரையில் ஒரு நாள் கூட்டு, மறுநாள் மசியல், மறுநாள் பருப்பு கடைசல் என வெரைட்டியாகச் செய்துதந்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்.
எந்த உணவையும் முதலில் சிறிது கொடுத்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். எடுத்தவுடன் திணிக்கக் கூடாது.
இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கி. கலோரி, 1.2 கிராம் புரதம் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிறப் பழங்களைக் கொடுக்கலாம்.
கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் உணவில் அவசியம் சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக்கு நல்லது. காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் தரலாம்.
இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை தரலாம். மதிய உணவில் ஒரு முட்டை/மீன்/மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும். வெண்ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும்.
குழந்தைகளுக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளைவிட சுட்ட, வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகளைக் கொடுப்பது, குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஃபாஸ்ட் புட் உணவுகளைக் கூடிய மட்டும் தவிர்த்துவிடுங்கள். கடைகளில் விற்கப்படும், இனிப்பு சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களைக் கொடுக்கவே கூடாது.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம்.
சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

 

  அம்மைத் தடுப்பு ஊசி போட்ட இடத்தில் புண் ஆகாமல் இருக்க, வேப்பிலையுடன், பசு மஞ்சளை சேர்த்து அரைத்துத் தடவினால், விரைவில் தழும்பு ஆறிவிடும்.
  சுக்கு, சித்தரத்தை, ஜாதிக்காய், மாசிக்காய் இவற்றைப் பாலில் போட்டு வேகவிட்டு, நிழலில் உலர்த்தவும். பச்சிளம் குழந்தைக்குத் தலைக் குளிப்பாட்டும்போது பாலில் வேகவைத்த சாமான்கள், கட்டிப் பெருங்காயம், இவற்றை சந்தனக் கல்லில் ஒருமுறை இழைத்து தாய்ப்பால் சேர்த்துப் புகட்டலாம். சுக்கு, பெருங்காயம் வாயுவைக் கலைக்கும். சித்தரத்தை சளி வராமல் தடுக்கும். ஜாதிக்காய் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மாசிக்காய் வயிறு பிரச்னை இல்லாமல் செய்யும்.
 சளி
  குழந்தை பிறந்து ஐந்தாவது நாள் வெற்றிலைச் சாறு, தாய்ப்பால், ஒரு கடுகு அளவு கோரோஜின் கலந்து புகட்டினால், சளி வெளியேறிவிடும்.
  கற்பூர வல்லி இலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளி கரையும்.
  ஆறு மாதம் முடிந்த குழந்தைகளுக்கு நொச்சி இலை, நுணா இலை, ஆடாதோடா இலை இந்த மூன்றையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளி கரையும்.
  கண்டங்கத்திரி இலையை நீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். தூதுவளை இலையை நீர் விட்டுக் கொதிக்கவைத்து, தேன் கலந்து வடிகட்டிக் கொடுத்தால், சளி கரையும்.
 வயிறு
  பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தைக்கு, ஒரு சொட்டு விளக்கெண்ணெயில் சிறிது தாய்ப்பால் சேர்த்து நன்றாகக் குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவுங்கள்.  குழந்தையின் வயிற்றில் தங்கியிருக்கும் கறுப்பு மலம் வெளியேறிவிடும்.
  ஏழாம் நாள் தாய்ப்பாலுடன் ஒரு சொட்டு துளசிச்சாறு கலந்து புகட்டினால், சளி கரையும்.
  கொய்யா இலையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால், பேதி நின்றுவிடும்.
  வயிற்றுவலியால் அழும் குழந்தைக்கு நாமக் கட்டியை இழைத்து, தொப்புளில் தடவலாம்.
 வசம்பை உப்புத் தண்ணீரில் நனைத்து, நல்லெண்ணெய் ஏற்றிய விளக்கில் சுட்டு வைத்துக்கொள்ளவும். குழந்தை வயிற்று வலியால் அழும்போது, சந்தனக் கல்லில் ஒரு இழை இழைத்துத் தாய்ப்பால் கலந்து ஒரு பாலாடை புகட்டலாம். சுட்ட வசம்பின் சாம்பலை ஒரு வெற்றிலையில் சிறிது தேன் கலந்து, குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினாலும் வயிற்று வலி சரியாகும்.


 குழந்தைக்கு வயிறு மந்தமாக இருந்தால், வெற்றிலை, ஓமம், பூண்டு, உப்புக்கல் சேர்த்து அரைத்து வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்துப் புகட்டினா,ல் வயிறு மந்தம் சரியாகிவிடும்.
 வயிற்றில் பூச்சி இருந்து குழந்தை அழுதால், வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து சுடுநீர் விட்டு அரைத்து, வடிகட்டிக் கொடுத்தால், வயிற்றில் பூச்சி இருக்காது.
செல்லக்குழந்தையிடம் நீங்கள் காட்டும் அக்கறையான கவனிப்பே... ஆரோக்கியம் காத்திடும்.  வாழ்த்துகள்!

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

Hypertension in Teenagers - Food Habits and Nutrition Guide in Tamil
இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'ரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.
இந்நோய் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?
1732-ல் 'ஸ்டீபன் ஹேல்ஸ்' என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண 'மானோ மீட்டர்' என்ற கருவியை வைத்து அளந்தார். 1896-ல் 'சிவரோசி' என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் 'ஸ்பிக்மோ மேனோ  மீட்டரை' கண்டு பிடித்தார். 1905-ல்தான் ரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன் பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.
உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?
மருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை 'ரத்த அழுத்த நோயாளி' எனக் கூறலாம்.
ரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
1. கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வரை.
2. 106 முதல் 115 வரை.
3. 115-க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
எதனால் ரத்த அழுத்தம அதிகமாகிறது?
1. காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.
2. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.
இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந்நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.
ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?
முதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். 'ஈ.சி.ஜி.' என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய 'எக்ஸ்ரே' பரிசோதனை உதவும். 'எக்கோ', 'ஆஞ்சியோகிராம்' போன்ற பரிசோதனைகளைக்கூட செய்து பார்க்கலாம்.
கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?
கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் 'பிரி-எக்லாம்சியா' என்பதாகும். இது முதன் முறையாக கர்ப்பமடைபவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட குழந்தையே பெறாமல் முதல் முறையாக கர்ப்பமடைந்த பெண்களுக்கு 6 முதல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவர்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக-கால்வீக்கம், ரத்தக்கொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளியேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருந்துவத்தின் மூலம் சரி செய்யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்து விடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கிறார்கள்.
ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை:
நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத்தாவிடில் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகள் வீங்க வைக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை சாப்பிடாதீர்கள். கொழுப்பு சத்து ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக் கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் அழுத்தத்தையும் குறைக்கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்துங்கள். புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பும் நேரிடும்! . உடல் எடையை குறையுங்கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.
 இவை எல்லாம் வாழ்க்கை முறை நோய்களாகிப் போனதால் உடற்பயிற்சி, உணவு, உறக்கம் ஆகியவற்றிலும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டும்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?



குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு.

நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது.

‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.]

படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?

சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?

சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?

குழந்தைகள் மீதான வன்முறை :

குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட “சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு” என்று திட்டுவோம். ஆக “சேட்டை” என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.

அடுத்து, குழந்தை தன்னையோ, மற்றவரையோ, மற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே “விதிகளை” சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களா? இல்லையா?

அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? கண்டிப்பாக என்பது “இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது” சில குழந்தைகள் “நான் உன் கூட பேசமாட்டேன்” என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல் என்கிறீர்களே? குழந்தைக்கு என்ன உரிமை? குழந்தை உரிமை என்றெல்லாம் இருக்கா?

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்கு சந்தேகம் உள்ளது. உதாரணமாக ஒரு 8 மாத குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறுஊட்டும் போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத்தாய் எப்படியாது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப் போதுதான் அந்தத்தாய்க்கு மனநிறைவு. மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறுநிறைய சோறு ஊட்டி விட்டதாகத் திருப்தி. ஆனால் அந்தக் குழந் தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிறு நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில் ‘பார் பிடிவாதத்தை. அப்படியே அது அப்பனை கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.

இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்குமீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப் போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக்குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, அடிபட்டதால் அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.

மற்றோர் வன்முறை அதிகாரத்தால் நிகழக்கூடியது. ஒரு குடும்பத்தில் குடித்துவிட்டு வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை கடைக்கு அனுப்பித் தனக்கு சாப்பாடு வாங்கிவரச் சொல்கிறார். அந்த குழந்தை, தன் தகப்பன் கேட்ட உணவு கடையில் தீர்ந்துவிட்டால், கடையில் இருப்பதை வாங்கி வருகிறான், இதற்காக மகனை கண்மண் தெரியாமல் விளாசித் தள்ளுகிறார் தந்தை. இது அதிகாரத்தினால் நடக்கும் வன்முறை. தகப்பன் குடித்தது முதல் தவறு. தன் குழந்தைகளுக்கு தான் குடித்ததாக காட்டியது இரண்டாவது தவறு. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தூக்கத்தை அர்த்தமில்லாமல் கெடுத்தது மூன்றாவது தவறு. அவனை அடித்தது மிக மோசமான தவறு. ஆகிய இத்தனை தவறுகளும் விளைவதற்கு காரணம் அதிகாரம். என்னால் என்னமும் செய்யமுடியும் என்கிற போக்கு, நான்தான் இந்த வீட்டில் முடிவெடுக்கும் நபர் என்ன எண்ணத்தில் எழும் சிந்தனை. இம்மாதிரி குழந்தைகளுக்கு அனுதினமும், நிறைய நேரங்களில், எல்லா நபர்களாலும் குழந்தைகளுக்கான வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதெல்லாம் வன்முறையா? நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் குழந்தையை ஒழுங்காகவும் நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று? இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துப் பார்த்து செய்ய முடியுமா?

கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.

நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்து தான் செய்யவேண்டும். நிலத்தில் விதையைத் தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லா? குழந்தைகள் விதையை விட முக்கியமானவர்கள். நல்ல பலன் தரும் விதைகளாக, விருட்சங்களாக வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்கவேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து, பேசி வளர்க்கவேண்டும்.

குழந்தைகளை திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?

சரி குழந்தைகளை அடிக்க கூடாது, திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்’ என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.

இப்படியெல்லாம் இருக்கா? சரி நாம் கண்டிக்காம விட்டுட்டா ரொம்ப அதிகமாகப் பேசி அனைவரின் மத்தியிலும் கெட்ட பேரெடுக்குமே?

திரும்பத்திரும்பச் சொல்கிறேன், கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது. உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கிய பின்னும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும்.

யாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் ‘எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும். விளக்க வேண்டும். ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதுதான். நாம் என்ன செய்கிறோம் என்றால் இருட்டுக்குள் போனால் பிரச்சனையாகிவிடும். ஆகவே இருட்டுக்குள்ளே போகவே கூடாது என்பதைத்தான் நாம் கற்றுக்கொடுக்கிறோம். மாறாக இருட்டுக்குள்ளே போய் பிரச்சனை வந்தால் எவ்விதம் பாதுகாத்துக்கொள்வது, எப்படி தப்பிப்பது என்பதை சொல்வதில்லை. இதற்குப்பெயர் தான் ‘மதிப்பீட்டுக்கல்வி’ (வேல்யூ எஜீகேசன்) என்று சொல்வார்கள்.

உங்களது அடுத்த கேள்வி அதிகமாப் பேசி கெட்ட பெயரை குழந்தைகள் எடுப்பார்கள் என்பதுதானே. நாம் பேசும் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கிறதா? வாய் தவறிப் பேசும் சில பேச்சுக்கள் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் ‘இது தவறு’ ‘இது சரி’ என்று எங்கே நாம் திருத்திக்கொண்டோம்? ஒவ்வொரு முறையும் நாம் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைக்குப் பின்புதானே.

அந்த அனுபவத்தைக் கொண்டு குழந்தைகளைப் பேசவிட்டுப் புரியவைக்கவேண்டும். கருத்து சுதந்திரமே நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுத்ததில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கொடுத்ததே இல்லை. குழந்தைகள் பேசும் அளவிற்கு வந்ததும் பெரியவர்களாகிய நாம் அமைதி காத்து, பேச்சைக் குறைத்து குழந்தைகளைப் பேச அனுமதிக்கவேண்டும். பேசும்போதே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. ரூசோவின் வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘உன் பேச்சு சுதந்திரத்திற்காக என் உயிரையும் தரத்தயாராயிருக்கிறேன்’ என்கிறார், அவர் எதிரிகளைப் பார்த்து, எதிரிகளின் பேச்சு சுதந்திரத்திற்காக தன் உயிரையும் தரத்தயாராயிருந்தபோது நாம் நம் குழந்தைகளின் பேச்சு சுதந்திரத்தைப் போற்றவேண்டும்தானே.

பெண் குழந்தைகளைப் பேச அனுமதிப்பதில்லையா? அவர்கள்தானே நிறையப் பேசுகிறார்கள்? அப்படியே பேசினாலும் கண்டிப்பது தாய்க்குலங்கள் தான்.

ம்ம்ம். தாய்குலங்களுக்கு, எங்கே தங்கள் குழந்தைகள் வளர்ந்து உரிய வயதில் திருமணமாகிப் போகிற குடும்பங்களில் இப்படிப் பேசி, அந்த வீட்டில் ‘வளர்த்திருக்கிறதைப் பார்’ என்று தங்களைத் திட்டுவார்களோ என்ற ஐயத்தினால் இப்போதிருந்தே அடக்கி ஒடுக்கி வளர்க்கிறார்கள். தங்கள் வளர்ப்பைப் பற்றின விமர்சனத்திற்கு பயந்து இப்போதே பேசவிடாமல் தடுப்பது எந்தவகையைச் சார்ந்தது?

கருத்து சுதந்திரம் இல்லாததால்தான் தன் மீது நடக்கும் வன்முறைகளைக் கூட, மௌனமாக ஏற்றுக்கொள்ளும் போக்கினை குழந்தைகள் பெற்று எவ்வித எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள். இதுவே நாளடைவில் சமூகத்தில் நடைபெறும் பலவிதமான கேடுகளை எதிர்க்கத் திராணியற்று வன்முறைகளை வளர்க்கும் போக்கிற்கு மௌனமாக ஒத்துழைக்கிறார்கள். அதனால், வீடுகளில் நடக்கும் வன்முறைகளுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது.

என்ன? வன்முறையா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களா? பெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்? வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?

சரி. நான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன். இது வன்முறையா? இல்லையா என்று பாருங்கள்.

பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கரூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊட்டி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடந்து வருவதாக சமூக நலத்துறை பட்டியலிட்டிருக்கிறது. புள்ளவிபரங்கள் வெளியிட்டிருந்தால் எங்கே பிரச்சனையாகுமோ என்று வெளியிடவில்லை. இது ஒரு வன்முறையில்லையா?

குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 மாதக் குழந்தை விற்கப்பட்டுள்ளது. இதற்காக பெறப்பட்டுள்ள தொகை அரிசி, மஞ்சள் கிழங்கு. (தினமணி 10-5-05) இது போன்ற பல செய்திகளைச் செய்திதாள்களில் காணமுடியும் இது வன்முறையில்லையா?

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தரக் குடும்பங்களில் 1 கோடி கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை என்பதால் இவை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த உலகத்தில் ஆண்குழந்தைகள் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தாக்கத்தால் எழுந்து இந்த வன்முறை. இவை வன்முறையில்லாமல் வேறென்ன?

ஒரு வருடத்திற்குத் திருட்டுத்தொழில் செய்ய 50 ஆயிரத்திற்கு பெற்ற மகனை விற்ற செய்தி (தினத்தந்தி 27-10-05) எதை வெளிப்படுத்துகிறது.? குழந்தை தனது சொத்து என்ற அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு வன்முறையில்லையா?.

குழந்தைகளை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து. ஆனால் பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நடக்கும் நிகழ்வுகள் ஏராளம். இவைகளை வன்முறை என்று சொல்லலமா? கூடாதா?

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 6 முதல் 7 லட்சம் சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இவை வன்முறைதானா? இல்லையா?

ஆக, குழந்தைகளுக்கு அங்கிங்கெணாதபடி எல்ல இடங்களிலும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் அடிப்படையான காணத்தைத் தோன்டும் போதுதான் சங்கிலித்தொடர் போன்று சமூகப் பிரச்சனையாகவும், அரசியல் பிரச்சனையாகவும் வடிவமெடுக்கின்றன. பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான சாதிய அடுக்குமுறைகளும் இதற்குக் காரணமாகின்றன என்று புலப்படுகிறது. இவற்றைக் களைய வேண்டும் என்றால் பல கட்டங்களில் நம் போராட்டம் தொடரவேண்டும்.

ஒட்டு மொத்தமாக குடும்பத்தில் உள்ள வன்முறைகளை சொல்கிறீர்கள்? ஆனால் எங்கள் வீட்டில் அவ்வாறு நடப்பதில்லை…

எவ்வளவு ஆழமாக நம்புகிறீர்கள். பெரியவர்கள் வீடுகளில் சண்டை போடுவது கூட குழந்தைகளின் மனநிலையை மிக ஆழமாக பாதிக்கிறது. நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குழந்தையிடம் படம் வரையச்சொன்னேன். தன் அப்பாவும் அம்மாவும் சண்டையிடுவதால் தனக்குப் படிப்பும் வரவில்லை, இருக்கவும் பிடிக்கவில்லை என்று குழந்தை சொல்வதான கார்ட்டூன் அது. அந்தக் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்று தெரிந்தது.

“யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான். எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும். அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன். தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும். நெஞ்சுவலிக்கும். நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். நிறைய தடவை நினைப்பேன். சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?… என்று. அப்புறம் உடனே சாமிகிட்ட மன்னிப்பும் கேட்பேன். நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும்.

அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும். நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன். என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க. எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும். பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும். அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும். கோபமா இருக்கும்போது அவங்களைப் பாத்தாலே எனக்கு பயம். இதனால சரியாவே படிக்க முடியலை. பள்ளிக் கூடத்திலே டீச்சரும் படிக்காட்டி அடிப்பாங்க. எங்கம்மாவும், எங்கப்பாவும் கையில அடிச்சாங்கன்னா எங்க டீச்சர் குச்சியில அடிப்பாங்க. எல்லா பிள்ளைகளும் சிரிக்கும். சிரிக்கிறப்ப செத்து போகலாம்னு இருக்கும். ஏன் பொறந்தோம்னு இருக்கு. நான் யாருக்கும் பிரயோசனமில்லை. ஒண்ணு சுனாமில நா செத்திருக்கணும்” என்று கேவிக்கேவி அழுதாள் அந்தக் குழந்தை.

மனசே தாங்கவில்லை. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விசயங்கள் கூட அந்தக் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது. ஒரு வார்த்தையைக் கூட தாங்க முடியாத அளவு அவ்வளவு மெல்லியதா இவர்கள் உள்ளம்? பூ என்று சொல்வார்களே, அதைப்போன்றதா? எங்களின் சொல்லும் செயலும் உங்களை அவ்வளவாகவா பாதிக்கிறது? எங்களின் நடவடிக்கை உங்களை உட்சுருக்கி சுக்குநூறாக நொறுக்கி விடுகிறதா? என் போன்றோர் திருந்தாத வரையில் ஒட்டுமொத்த பெற்றோர்கள் சார்பாக உங்களிடம் மன்னிப்பு மட்டும் தான் கேட்கமுடிகிறது என்னால். ஆனால் இதை வாசிக்கும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாகத் திருந்துவார்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.

யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?

மனதுக்கு துயரமாகத்தான் உள்ளது. ஆனால், இவ்வளவு பெரியவர்களாகிய நமக்கே சுதந்திரம் கிடைக்கலை. யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?

இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்து என்னென்ன சுதந்திரங்கள் உள்ளன? (பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி கற்க, இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக போய்வர… இப்படி கொஞ்சம் தெரியும். ஆனா எங்க…. (!?) இதெல்லாம் இருந்தும் நம்மால் செய்ய முடிகிறதா என்ன?)

உங்கள் ஆதங்கமா இது? சரி, சுதந்திரம் என்பதை இப்படியாகப் புரிந்துகொள்ள வேண்டும். குடைபிடித்துப் போவது சுதந்திரம் என்றால் அந்தக் குடையின் கம்பி அடுத்தவரது கண்ணைக் குத்தாதவரை என்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். எல்லா சதந்திரமும் அனுபவிக்க முடியாதவரை நம்மைத் தடுப்பது எது? என்பதை நாம் யோசிக்கவேண்டும். நமது கல்வி அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.

விஞ்ஞானத்தைப் படித்தவர்கள் அந்தப்படிப்பின் தன்மையும் பயனும் உண்மைகளும் தெரிவதற்கு பதிலாக பாம்புப் பால்குடிக்கும் என்று புத்துக்கு பால்வார்ப்பது, போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில் பெரும்பாலும் முன்னணியில் நிற்கும் அளவிற்கு தான் கல்வி முறைகள் உள்ளன.

கல்வி என்பது தீயவற்றை எதிர்க்கும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், மனிதம் வளர்க்கும், மனம் வளர்க்கும், உடல் வளர்க்கும், சுதந்திரமான, அடிமைத்தனம் அற்ற, மனித ஆளுமைகளை வளர்க்கிற கல்வியாக இருக்கவேண்டும்.

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்ளாதவரை நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது நிச்சயம். ஒவ்வொரு குழந்தைக் கல்வியாளர்களிடமும் கேட்டுப் பாருங்கள். தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதாகத்தான் அவர்களின் எண்ணம் இருக்கும். ஆனால் வெளிப்படுத்தும் விதம்தான் மாறுபடுகிறது. மாணவர்களைத் ‘திருத்துவது’ என்பது அடித்து திருத்துவது, தண்டித்து திருத்துவது, பிற மாணவர்கள் மத்தியில் மனம் புண்படுகிறவரை திட்டித் திருத்துவது அல்ல.

அதன் விளைவு எதுவாக இருக்கும்? ஒரு மாணவன் எந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ஈடுபாட்டில் ஆசிரியர்கள் யோசித்தார்களோ அந்த நிலை மாறி அம்மாணவன் தன் ஆசிரியரை ஒரு எதிரியாகப் பாவிப்பான். வகுப்பில் சரியாகக் கவனிக்காத மாணவனை ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்கள் மத்தியிலும் சத்தம் போட்டு திட்டி ‘வெளியே போ” என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அம்மாணவன் மிகச் சாதாரணமாக வகுப்பை விட்டு வெளியேறினால் ஆசிரியரின் நோக்கம் வீணாகிவிடும். மாறாக, அம்மாணவனைத் தனியாக அழைத்து நேரத்தின் முக்கியத்துவத்தையும், அவன் வீட்டில் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கிறார்கள் என்பதையும், வகுப்பு நேரத்தில் கவனிப்பு எந்த அளவிற்கு பிரயோசனமானது என்பதையும் உணர்த்தினால் நிச்சயமாக சிறிதளவு பயன் இருக்கும். அம்மாணவனின் உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் எண்ணமும் உயரும். ஏனென்றால் நாம் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பிறர் ஏற்கவேண்டும் என்றால் கேட்பவர் மத்தியில் கருத்து சொல்பவர்களைப் பற்றிய மதிப்பீடு சிறந்த முறையில் இருக்கவேண்டும்.

சொன்னபடி கேட்காத பிள்ளையை என்ன செய்வது?

கொஞ்சநாளாக நானும் குழந்தைகளை அடிப்பதை நிறுத்தினேன். எவ்வளவு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்று என்னைக் கட்டுப்படுத்தினேன். ஆனால் என் மகன் சொன்னபடியே கேட்பதில்லை. இவனை என்ன செய்யலாம்?

அதை உங்கள் குழந்தையிடமே கேட்டுப்பாருங்கள். பலன் கிடைக்கும். நான் உன்னை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீ இப்படி செய்தால் கண்டிப்பாக அடிப்பேன். உனக்கு அடி கொடுக்கட்டுமா? என்று கேட்டுப்பாருங்கள்… குழந்தைகள் எப்போதும் நிறைய விசயங்களை உள் வாங்குகிறார்கள். உங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உட்கார்ந்து பேசினால் போதும். நாம் நம் குழந்தைப்பருவத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்பது அவசியம்.

நாம் நம் சிறுவயதில் என்னவெல்லாம் செய்திருப்போம். எப்போது பார்த்தாலும் தெருவில் ஆடிக்கொண்டிருக்கவில்லையா? வெயிலும், மழையும், பனியும் நம்மை பாதிக்குமா? எப்போது பார்த்தாலும் ஒரே துள்ளல்தான். இந்த நிலையை நாம் நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா? எப்போது பார்த்தாலும் படிப்பத்தான். விளையாடுவது கூட அடைக்கப்பட்ட கூண்டுக்குள் தான். போதாதற்கு டி.வி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்முடைய குழந்தைப் பருவம் எவ்வளவு நன்றாக இருந்தது? இப்போதுள்ள குழந்தைகளைப் பாருங்கள். எவ்வளவு இன்பத்தை இழக்கிறார்கள்? இவர்கள் பெரியவர்களானதும் இதைவிட இன்னும் இறுகலாகி இயந்திரங்களைப் போல ஒரு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். விளையாட்டு என்ற பதமே நம் அகராதியிலிருந்து இல்லாமல் போய்விடும்.

பெரியவர்களுக்குத்தான் எதையும் எளிதில் சொல்லிப் புரியவைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு உதாரணம் வேண்டும். அதை விளக்கிச்சொல்ல வேண்டும். காரணம் சொல்லவேண்டும்.

குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது.

குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

முதுகு வலி... தப்பிக்க என்ன வழி?



இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமேமுதுகு வலியும் இருக்கிறது.

உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?

சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள்ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாகப்பிணைத்துவைக்கப்பட்டதுதான் 'முதுகெலும்புத் தொடர்’. இதில்,எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க்எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இரு சக்கரவாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக்அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது.

துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பானநிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள்அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளைகடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவடநரம்புகள்தான். முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்துஇந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும்.இதைத்தான் முதுகு வலி என்கிறோம்.''

முதுகு வலி வருவதற்கான காரணங்கள்:


உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதுதான் பலருக்கும் முதுகு வலிவருவதற்கான முக்கியக் காரணம்.

வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தேஇருக்கக்கூடிய சூழல்.

தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல்.உடல் எடை கூடுதல்.

கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல்
போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு,முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும்தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்புஅமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டுவலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப்பாதிப்புகளாலும் முதுகு வலி வரும்.

எலும்புகளில் தோன்றும் பிரச்னைகள்:

எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத்தின்பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின்அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவாக இருக்கும்.ஆனால், வயது கூடும்போது இந்த கால்சியத்தின் அளவும் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைந்து எலும்பு மெலிந்து, மிருதுத்தன்மையைஅடைந்துவிடும். இதை 'எலும்பு மெலிதல்’ (Osteoporosis) என்கிறோம்.நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயேஅடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது.வெயிலில் கிடைக்கும் 'வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல்போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில்தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணிநேரமாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளைமாற்றிக்கொள்வது நல்லது.

முதுகு வலித் தொல்லையில் இருந்து விடுபட, கால்சியம் நிறைந்தஉணவுகளைச் சாப்பிட்டால் போதுமா?

'பாலில் கால்சியம் சத்து உண்டு. எலும்பின் ஆரோக்கியத்துக்கு இதுநல்லது’ என்று நினைத்து நிறைய பேர் பால் குடிக்கிறார்கள். ஆனால்,பாலில் உள்ள கால்சியத்தைப் பிரித்தெடுக்கும் ரெனின் என்சைம் (Rennin Enzyme) குழந்தைகளின் (குறிப்பிட்ட வயது வரை) உடலில் மட்டுமேசுரக்கிறது. பெரியவர்களுக்கு இந்த வகை என்சைம்கள்இயற்கையாகவே உடலில் சுரப்பது இல்லை. எனவே, எவ்வளவுதான்பால் குடித்தாலும் அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்குகிடைக்காது.

அடுத்ததாக, கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளில் பாஸ்ஃபோரிக் அமிலம் (Phosphoric Acid)சேர்ப்பார்கள். இதுஉடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதைத் தடை செய்யும். எனவே,இதுபோன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதாரணமாகநாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத்தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்புகிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழிஉடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள்தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும்

எலும்பின் ஆரோக்கியம் காக்க எந்த வகை உடற்பயிற்சிகள்செய்யலாம்?

நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சிஅளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள்நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும்யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது

குடைமிளகாய் - பயன்கள்





குடைமிளகாயை பயன்படுத்துங்கள்.. உடலுக்கு மிகவும் நல்லது..

குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது இதனை பெரும்பாலானோர் பயன்படுத்தத் துவங்கி உள்ளனர்.

குடமிளகாயில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதனைப் பார்ப்போம்..

தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.

கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்டவிடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.

குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.

ஊசி மிளகாய், குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும்.

காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு எலுமிச்சை பிழியவும். அருமையான சாலட் தயார்.

குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.

சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

அன்னாசிக்கு தொப்பையை கரைக்கும் சக்தி உண்டு.

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.

இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கு

முகத்தில் உள்ள தழும்புகளைப் போக்கும் சில எளிய வழிமுறைகள்..!


முகத்தில் உள்ள தழும்புகளைப்
சமையல் செய்யும் போது எண்ணெய் முகத்தில் பட்டாலோ அல்லது குக்கரை தூக்கும் போது கைகளை சுட்டுக் கொண்டாலோ, முதலில் அவை காயமாகி, பின் அவை தழும்புகளாக சருமத்தில் தங்கிவிடும். பருக்களால் பலருக்கு முகத்தில் கருமையான தழும்புகள் படிந்து, முகத்தின் அழகே பாழாகி இருக்கும்.
இத்தகைய தழும்புகளானது நிரந்தரம் அல்ல. அவற்றை ஒருசில பொருட்கள் மற்றும் பராமரிப்புக்களின் மூலம் போக்கிவிடலாம்.
அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிமையாக நீக்கிவிடலாம். தழும்பை போக்க சில இயற்கை வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றைப் பின்பற்றி தழும்புகளைப் போக்கி, அழகுடன் திகழுங்கள்.

* பொதுவாக கற்றாழை ஜெல் அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைக் கொடுக்கும்.
அதிலும் தினமும் இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு, மற்ற பிரச்சனைகளும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

பேக்கிங் பவுடரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளானது மறைந்துவிடும்.

* தேன் உடலுக்கு மட்டும் நன்மையைக் கொடுப்பதுடன், சருமத்திற்கும் நன்மையை வழங்க வல்லது. அதற்கு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம். எனவே தினமும் தேன் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள்.

மஞ்சள் தூளை நீரில் கலந்து, அதனை சருமத்தில் தினமும் தடவி ஊற வந்தால், அது சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதுடன், மற்ற சரும பிரச்சனைகளையும் போக்கிவிடும்.

பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகளானது மறையும்.

*அனைவருக்குமே எலுமிச்சை தழும்புகளை மறைக்க உதவும் பொருட்களில் ஒன்று என்பது தெரியும்.
ஆனால் அதனை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவை இரண்டிலும் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் அது தழும்புகளை மறைத்துவிடும்.