சனி, 7 மே, 2016

கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படி…


  • முக்கனி என்று அழைக்கப்படும் மா,பலா,வாழை யில் மாம்பழத்திற்கு மயங்காதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை நம் நாவை சுண்டி இழுக்கும்.மேலும் மேலும்சாப்பிட வைக்கும்.
    மாம்பழ சீசன் துவங்கிவிட்ட நிலையில் காணும் இடங்களிலெல்லாம் மாம்பழக்கடைகள் முளைத்துள்ளன. சீசனும் மாம்பழத்தின் மீதான மக்களின் ஆர்வமும் பல இடங்களில் மாம்பழக்கடைக்காரர்களை தடுமாற வைக்கிறது. விற்பனையை
  • அதிகரித்து லாபம் ஈட்ட செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்கவைக்கின்றனர். மாம்பழ ஆசையில் அதை பரிசோதிக்காமல் வாங்கி உண்டுவிட்டு உடல்நிலையை கெடுத்துக்கொள்கிறார்கள் பலர்.
    தற்போது தமிழகத்தின் சராசரி வெப்பநிலையே 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்று சொல்லும் அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடையில் அதிகம் விளையக்கூடிய மாம்பழம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்தான் அச்சுறுத்தலுக்கு உரியது. அதற்கு காரணம், கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயுவின் மூலம் மா, வாழை போன்றவைகளை  12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம்  சாதாரண ஒரு காய் 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும். எனினும்,  அதிக விற்பனையை கருத்திற்கொண்டு பழ வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்.
    இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படும். கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள்  நல்ல கனமாகவும், தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும், தோலை நீக்கிப் பார்த்தால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மக்கள் கண்டறிய முடியும்.
    அவசர உலகத்தில் இதனை கண்டறியும் மனமோ,நேரமோ இல்லாத அப்பாவி மக்கள் ஏமாந்து வாங்கி உண்டு உடலை கெடுத்துக்கொள்கின்றனர்.  ஆனால் வியாபாரிகள் மத்தியில் கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களைப்பற்றி வேறுவிதமாக சொல்லப்படுகிறது.
“அந்தக் காலத்தில் பழங்களைப் பழுக்கவைக்க புகைமூட்டம் போடுவார்கள். அதற்கு அவசியமான காற்றுப் புகாத அறைக்கு வாய்ப்பில்லாததால்  அதற்கு பதிலாகத்தான் நவீன முறையில் கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கிறோம். இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். மருத்துவ ரீதியாக கால்சியம் கார்பைடால் எந்த கெடுதியும் கிடையாது. கார்பைடு பழங்கள் பற்றி வருவதெல்லாம் பெரும்பாலும் வதந்திகள்தான்” என்று மறுக்கின்றனர்.
பழ வியாபாரிகள் மனசாட்சியோடு நடக்கவும், அதனை உண்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் என்று  எண்ணி  இது போன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

தாய்மையின் அடயாளம் கண்டறிவது எப்படி?


கருத்தரித்தல் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து வருகிறது. கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவையெல்லாம், முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சமிக்ஞைகள் ஆகும். கருத்தரித்த ஒருவாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளைகளில் சில அறிகுறிகள் தோன்றும்.
இயல்பான ஹார்மோன் செயல்பாடுகளில் மாறுபாடுகள் உண்டாகும்போது, கருத்தரித்திருப்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
1. மாத விலக்கு வராமை.
2. குமட்டல்,
3. இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
4. புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்.
5. வாசனையைக் கண்டால் நெடி.
6. மார்பகம் பெரிதாவது, தொட்டால் வலி, நரம்புகள் புடைத்துத் தெரிதல், மார்பகக் காம்புகள் கருப்பாக மாறுதல் என மார்பகத்தில் மாற்றங்கள்.
7. மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு.
8. புளி, களிமண், ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஆசை ஏற்படுதல்.
மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கைகால்களும் உருவாகும். இக்காலக்கட்டத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக்குழந்தை பாதிக்கப்படும்.
முதல் அறிகுறிகள்:
முதல் அறிகுறிகள் எப்போதும் தனியாகவோ, பிற காரணிகளுடன் இணைந்தோ தோன்றக்கூடும். இந்த அறிகுறிகளை மட்டும் வைத்து கர்ப்பத்தை முடிவு செய்யாமல், அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. காரணம், இந்த அறிகுறிகள் சிலவேளைகளில் குழப்பத்தையும் உண்டாக்கும்.
உதாரணத்திற்கு சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மாதவிலக்கு நிற்பது
கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு ஆவது என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்காகவதுண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்க நின்றிருக்கும்.
இந்த நிலைகளுக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல்,புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், இரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடற்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குத் தொடராது. ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.
சிலர் கர்ப்பம் தரித்திருப்பார்கள். ஆனால், மாதவிலக்கு வராமல் இருந்தாலும் தங்கள் கருத்தரித்திருப்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள். இவர்களுள் பாலூட்டும் காலத்திலேயே கருத்தரிப்பவர்கள், மாதவிலக்கு வற்றும் காலத்தில் கருத்தரிப்போர் ஆகியோரை உதாரணமாகக் கூறலாம்.

களைப்பு
பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடற்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த பன்னிரண்டாவது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.
பசலை நோய் அல்லது மசக்கை
இதை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னெஸ் என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பல பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் வருகிறது. மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கூறிய அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பலர் உறுதி செய்துகொள்கிறார்கள்.
சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்னைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

பசலை நோய் அல்லது மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?
முட்டையும் அணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படியிருந்தும் சக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
வேறு ஒன்றுமில்லை. தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு வேண்டிய சத்தையும் தாய் பெற வேண்டியுள்ள நிலையிருப்பதே ஆகும். இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகிலிருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.
மார்பகப் பகுதியில் மாற்றங்கள்
முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்திலுள்ள இரத்த நாளங்களும், மொத்தசுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவங்கள் சுரக்கும்.
கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் மேற்சொன்ன மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

மனநிலை மாற்றமும், எடையில் மாற்றமும்
சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்கமுடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.
வயிறு பெரிதாக…
கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக பதினெட்டு முதல் இருபதாவது வாரங்களில் இந்தஅசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.
கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
மேலே குறிப்பிட்டுள்ள கருக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாக இருப்பதையும் நீங்கள்அறிந்திருப்பீர்கள். ஆகவே, இந்த அறிகுறிகளை மட்டும் அடையாளமாகக் கொண்டிராமல், கருவை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
கருவை உறுதிப்படுத்தும் பரிசோதனை முறைகள்
அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது. பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் மூன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும். என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் மூலம் விரைவாகவே கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்துகொள்ளலாம். இவற்றைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீர்ப் பரிசோதனை
முதல் சிறுநீரை எடுத்துப் பரிசோதிப்பதற்காக கிட்டுகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இவை பெரும்பாலும் எல்லா மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். இதிலேயே கருத்தரித்திருப்பதால் அதற்கான அடையாளம் என்ன, கருத்தரியாவிட்டால் அதற்குரிய அடையாளம் என்ன என்பதைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றைக் கண்டு பெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யலாம்.
ஹார்மோன் பரிசோதனை
நம்பகமான பரிசோதனை முறை என்பது மாதவிலக்கு நின்ற நாளிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து செய்யப்படுகிறது. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் பாலியல் முதல் சிறுநீரைப் பிடித்து பரிசோதித்தால் அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்க வில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இப்பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, இரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் மூலம் அறிந்துகொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.
கரு நெளிவுப் பரிசோதனை
கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாதவாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது குயிக்கனிங் பரிசோதனை என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.
இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் கையாளுகிறார்கள்.

திங்கள், 18 ஜனவரி, 2016

ஜாகிங் 10 பலன்கள்!

ஜாகிங் செய்யும்போது மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயனங்கள் சுரந்து, மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால், மனநலம் மேம்படுகிறது.
உடல் எடை குறைகிறது
ஒரு மணி நேரம் ஜாகிங் செய்வதால், உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, ஃபிட்டான தோற்றம் கிடைக்கிறது.
நுரையீரல்
நுரையீரல், மூச்சுக்குழாய் மற்றும் மூச்சு அறைகளைப் பலப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
சீரான ரத்த அழுத்தம்
ஜாகிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றன. இது, ரத்தக் குழாய்கள் ஃபிட்டாக இருக்கவும், ரத்த ஓட்டம் சீராகப் பாயவும் வழிவகுத்து, உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கிறது.
வலிமையான நோய் எதிர்ப்பு மண்டலம்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், தொற்றுவியாதிகள் எளிதில் பாதிக்காது.
எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது
ஜாகிங் செய்யும்போது, உடலில் உள்ள கால்சியம் எலும்புகளால் நன்றாகக் கிரகிக்கிப்படுகிறது. இதனால், எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
உடல் வலிமை  அதிகரிக்கிறது
கால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கிறது. தசைநார்கள் (லிகமென்ட்) வலிமை பெறுகின்றன.
வலுவான மூட்டுக்கள்
எலும்புகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் தசைநார்களை வலிமையாக்குகிறது. இதனால், சாதாரண விபத்துக்களினால் ஏற்படும் எலும்பு முறிதல், மூட்டுப் பிரச்னை போன்றவை தவிர்க்கப்படுகின்றன.
ஆளுமை அதிகரிக்கிறது
ஓட்டப்பயிற்சி மற்றும் ஜாகிங், தனிநபர்களின் ஆளுமையை, தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உங்களை நீங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
சர்க்கரை நோய்கான வாய்ப்புக் குறைகிறது
ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.-

நின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையும்: புதிய ஆய்வில் தகவல்

நின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையும்: புதிய ஆய்வில் தகவல்
உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான் பக்லி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இருக்கைகளில் அமர்ந்தபடி வேலை செய்பவர்களின் உடல் எடை அதிகரித்தது. அதே நேரத்தில் நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறைந்தது. அவர்களின் உடலில் இருந்து ஆண்டுக்கு 3.6 கிலோ எடையுள்ள கொழுப்பு எரிக்கப்படுவதால் உடல் எடை குறைவதாக விஞ்ஞானி பக்லி கூறியுள்ளார்.
இதே கருத்தை பல விஞ்ஞானிகள் ஏற்றுள்ளனர். நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறையும். அவர்கள் குண்டாவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

யோகாசனம் செய்தால் கர்ப்பப்பை பலப்படும்

 YOGAS
உடல், மனம் இரண்டும் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் முக்கியமான ஒன்று மாதவிடாய் பிரச்னை. இந்த பிரச்னையை, யோகா மூலம் எப்படி தீர்ப்பது? வாழ்க்கை முறை மாற்றங்களால் இன்று, பெண்களின் உடல் தசைகளின் இயக்கம் குறைந்து விடுகிறது. தவிர, பலர் பசியைத் தணிக்கவோ, அல்லது போரடிக்கிறது என்றோ ஜங்க் புட்ஸ் எனும், ரெடிமேட் வகை உணவுகைள சாப்பிட பழகி விட்டார்கள். முன் காலத்தில் இடுப்புச் சதைகளுக்கு வலிமை தரும், உளுந்து கலந்த உணவை அதிகமாக சாப்பிட்டார்கள்.
தற்போதோ இடுப்பிலும், உடம்பிலும் சதை போடும் இனிப்பு, ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்ற வறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் இடுப்புப் பகுதியிலும், கர்ப்பப்பையிலும் கொழுப்பு தேங்கி விடுகிறது. இதைக் கரைப்பதற்கென்று தனியாக எந்த வேலையையும் செய்வதில்லை. முன்பு ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றில் இடுப்பை அசைத்துச் செய்யும் வேலைகள் அதிகமாக இருந்தது. இப்போதோ அந்த வேலைகளை கிரைண்டர், மிக்ஸி போன்ற சாதனங்கள் செய்து விடுகின்றன. இதனால் சத்துக்கள் எல்லாம் இடுப்பில் தேங்கி விடுகிறது.
சினைப்பையில் தேங்கும் நீர், கொழுப்பு காரணமாக நீர் கட்டிகள், கொழுப்பு கட்டிகள் உருவாகின்றன. இதனால் ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, மாதவிடாய் பிரச்னைகள் வருகின்றன. அழுகையை அடக்கும் போது டென்ஷன் அதிகமாகி, இடுப்புப் பகுதி தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது. இந்த இறுக்கம் கர்ப்பப்பையை பாதிக்கிறது. இதைத்தான் பெண் மருத்துவர்கள் மருத்துவ ரீதியாக, நாம் அழாமல் இருந்தால், நமது கர்ப்பப்பபை அழும் என்பர். 
இந்த பிரச்னைகள் வராமல் தடுக்கவும், வந்தால் சரி செய்யவும் என்ன செய்ய வேண்டும்? இடுப்பு பகுதியில், இருக்கும் கரத்திற்குப் பெயர், ஸ்வாதிஷ்டானம். இந்த கர திதான், இடுப்புப் பகுதியின் இயக்கத்தையும் மனவலிமையையும் சீராக வைக்கிறது. ஸ்வாதிஷ்டான கர தியை பலப்படுத்தும், மர்ஜரியாசனம், புஜங்காசனம், தனுராசனம், அர்த்தசலபாசனம், பச்சி மோத்தாசனம் போன்ற யோகாசனங்கள் இடுப்பு பகுதியை சீராக இயக்க வைத்து, கர்ப்பப்பையை 
பலப்படுத்துகின்றன. அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரையவும் உதவுகின்றன. இந்த ஆசனங்களை ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியரின் மேற்பார்வையில்தான் செய்யவேண்டும். 

இதற்கான உணவு முறை என்ன?
தினமும், ஏதாவது ஒருவேளை, சமைத்த உணவிற்கு பதிலாக நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால், ஸ்வாதிஷ்டானத்தில் சக்தி அதிகமாகும். இந்த கரம், நீர் ஆதாரத்தைக் கொண்டதால், நீர்ச்சத்து சேரும் போது சக்தி அதிகரிக்கிறது. நார்ச்சத்தோ, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
வாரத்தில் இரண்டு நாளாவது உளுந்து மாவு சேர்ந்த (புளிக்காத) உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் நேரங்களில் உளுந்துக் களியை தினமும் சாப்பிடலாம். இந்த உளுந்து உணவுகள், எலும்பை பலப்படுத்தும். வாயு மற்றும் எண்ணெய் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

பெண் நலம் காப்போம்!

30 வயது என்றதுமே பெண்கள் பலருக்கும், ‘வயதாகுதே…’ என்ற கவலை வந்துவிடுகிறது. குடும்பம், குழந்தைகள், பணிச்சுமை எனப் பம்பரமாய் சுழன்றாலும்,  ஏனோ   வாழ்க்கையில் ஒருவிதப் பிடிப்பின்மையும், இனம்புரியாத சலிப்பும் வந்துவிடுகிறது. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வயது ஒரு தடையே அல்ல. ஆறு வயதானாலும், 60 வயதானாலும் பெண்களின் பலம் ஒன்றுதான். அந்தந்தப் பருவங்களில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களே, அவர்களை மனரீதியாக அவ்வாறு நினைக்கவைக்கிறது. பிரச்னைகளை எதிர்கொள்ள, ஒவ்வொரு பருவத்திலும் பெண்ணுக்குள் நிகழும் மாற்றங்களைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.
 6 வயது முதல்…
பெண், ஆண் என்ற பாலின வேறுபாடு குழந்தைகளுக்குத் தெரிய ஆரம்பிக்கும். தான் ஒரு பெண் குழந்தை என்ற புரிதல் இருக்கும்.
இந்த வயதில்தான் நல்ல தொடுதல் எது… கெட்ட தொடுதல் எது? (குட் டச்… பேட் டச்) என்பதைச் சொல்லித்தர வேண்டும். இந்த வயதில் ஆண் குழந்தைகளுக்கும் தொடுதல் பற்றிய கோணங்கள் வேறுவிதமாக இருக்கும். அவர்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.
மனதளவில் பெண் குழந்தைகளிடம், அவர்களின் வளர்ச்சியைப் பற்றி பெற்றோர் அல்லது பெரியவர்கள் புரியவைக்க வேண்டும். சானிட்டரி நாப்கின் எதற்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும். சுகாதாரத்தின் முக்கியம் போன்றவற்றை எடுத்துரைப்பது நல்லது.
எட்டு வயதுக்கு மேல்  பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படும். 12 முதல் 14 வயதுக்குள் பூப்பெய்துவதுதான் சரி. எட்டு வயதுக்குள் பூப்பெய்திவிட்டால், அதை `பிரிகாஷியஸ் பியூபர்ட்டி’ என்பார்கள்.

மார்பக வளர்ச்சி, பிறப்புறுப்பு மற்றும் அக்குள் பகுதியில் முடி வளர்தல் போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படும். வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னையும் வரலாம். 14 வயதுக்கு மேல் பருவம் எய்தாமல் இருந்தால், மகளிர் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது அவசியம்.
வெளியிடங்களில், வெறும் காலோடு நடப்பதைத் தவிர்க்கலாம்.
ஹுக்வார்ம் போன்றவை உடலில் படர்ந்து, பிரச்னையை ஏற்படுத்தலாம். செருப்பு, ஷூ அணிவது அவசியம்.
16 வயதுக்கு மேல்…
இந்தியா போன்ற நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக இருக்கிறது. இது மேல்தட்டு மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில், அவர்கள் சாப்பிடுவது ஆரோக்கியமான உணவுகள் அல்ல; பெரும்பாலும் துரித உணவுகள். அதனால் பெரும்பான்மையான பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக ரத்தசோகை பிரச்னை ஏற்படுகிறது.
சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளில் இரும்புச்சத்து அதிகம். சைவ உணவு சாப்பிடுபவர்கள், மாதுளை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, கேழ்வரகு, தினை, சாமை, கடலைஉருண்டை, நிலக்கடலை, பொட்டுக்கடலை, வெல்லம் சேர்த்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
வயிற்றுப் பூச்சிகளால்கூட இரும்புச்சத்துக் குறைபாடு வரலாம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பூச்சிகளை அழிக்கும் மருந்தைச் சாப்பிட வேண்டும்.

மாறிய வாழ்க்கைமுறைகளால், இளம் பெண்களில் ஏராளமானோர் சீரற்ற மாதவிலக்கு, குறைவான அல்லது அதிக ரத்தப்போக்கு, கடும் வயிற்றுவலி போன்ற பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு, உடல்பருமனும் முக்கியக் காரணமாக இருக்கிறது.
படிக்கும் பெண்கள் பெரும்பாலும் நடந்து பள்ளிக்குச் செல்வது இல்லை. பஸ், வேன், போன்ற வாகனங்களில் செல்வதால், உடல் உழைப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால், பெண் பிள்ளைகளுக்குக் கர்ப்பப்பையில் கட்டிகள், நீர்க்கட்டிகள் போன்ற பிரச்னைகள் அதிகமாகின்றன.
வயது, உயரத்துக்கு ஏற்ப எடையைப் பராமரிக்க, இதுதான் சரியான பருவம். நீர்க்கட்டிகள் இருக்கும் 90 சதவிகிதம் பெண்கள், அவர்களின் எடையைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்தால் தானாகவே சரியாகிவிட வாய்ப்புகள் அதிகம்.
26 வயதுக்கு மேல்…
கருத்தரித்தல் நிகழ்வதே இன்று பெரும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. கருவுறாமல் குழந்தையின்மை பிரச்னை ஏற்பட்டால், தகுந்த மருத்துவரிடம் சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண்களிடமும் பிரச்னை இருக்கலாம் என்பதால், இருவருமே பரிசோதிப்பதுதான் நல்லது. அதில், யாருக்குப் பிரச்னை என்பது தெரியவந்தால், அடுத்தகட்ட மருத்துவப் பரிசோதனைகளை, சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
உடல்பருமன், சர்க்கரை நோய், இதயம் பலவீனமாக இருத்தல் போன்றவையும் குழந்தையின்மைக்குக் காரணமாகிறது. எனவே, பெண்கள் இந்த வயதில் உடல் நலனில் அதிக அக்கறையோடு, உணவுப் பழக்கங்களைச் சரிபடுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
பாலிசிஸ்ட்டிக் ஓவரி எனும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை இருந்தாலும் கருத்தரிக்கத் தடங்கல் ஏற்படும். காசநோய், குடும்பங்களில் யாருக்காவது இருந்தாலும், மரபியல் காரணங்களால் குழந்தைப்பேற்றில் சிக்கல் உண்டாகலாம். கர்பப்பைவாய் புற்றுநோயைத் தடுக்க, தடுப்பூசி உள்ளது, மருத்துவரை ஆலோசித்து இளம்வயதிலேயே இதைப் போட்டுக்கொள்ளலாம். கர்ப்பப்பைவாய், சினைப்பை ஆகியவற்றைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவ்வப்போது பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இதனால், கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தவிர்க்க முடியும்.
40 வயதுக்கு மேல்…
எப்படி ஆரம்பத்தில் மாதவிலக்குப் பிரச்னை இருந்ததோ, அதேபோல முடியும் தருவாயிலும் தொல்லைகள் கொடுக்கத்தான் செய்யும். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பிரச்னை ஏற்படும். மனதை அமைதிப்படுத்துவதன் மூலமும், பிடித்தமான செயல்களைச் செய்வதன் மூலமும் இந்தப் பிரச்னையில் இருந்து ஓரளவுக்கு வெளியில் வரலாம். சிலருக்கு, மாதவிலக்கு நிற்கும்போது எந்தத் தொந்தரவும் இருக்காது. சிலருக்கு, சீரற்ற ரத்தப்போக்கு, ஃபைப்ராய்டு சிஸ்ட், ஓவேரியன் சிஸ்ட், சிலவகை புற்றுநோய்களும் வரலாம். 40 வயதுக்குப் பிறகு பாப்ஸ்மியர் டெஸ்ட் செய்து, இவற்றை முன்பே அறிந்துகொள்ளலாம். இதனுடன் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க, மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வதும் அவசியம்.
இந்த வயதில் ஹார்மோன்கள் மாற்றம் அடையும். அதன் சுரப்பில் வித்தியாசம் இருக்கும். எனவே, அடிக்கடி மனக்குழப்பங்கள் ஏற்படும். ஹார்மோன்கள் எந்தெந்த வேலைகளைச் செய்ய வேண்டுமோ, அவை சீராக இயங்காததால், உடல் மற்றும் மனம் சார்ந்த தொல்லைகள் ஏற்படும்.
அதீத வியர்வை, படபடப்பு, டென்ஷன், தலைவலி, தூக்கமின்மை போன்ற தொல்லைகள் அதிகமாக இருக்கும்.
தன்னை யாரும் கவனிக்க மாட்டார்களா? என்ற எண்ணம் அதிகரிக்கும். எரிச்சலான உணர்வே எப்போதும் நீடிக்கும். தனக்கு தானே முக்கியத்துவம் தராமல் போய்விட்டோம் எனும் எண்ணங்கள் தோன்றி மறையும். தனிமையாகிவிட்டோம் எனும் மனஉளைச்சல் இருக்கும்.
மேற்சொன்ன பிரச்னைகள் எல்லாம் இந்த வயதுக்கே உரித்தானது என்ற புரிதல் இருந்தால், ஓரளவுக்குப் பிரச்னையில் இருந்து மீண்டு வரலாம்.
60 வயதுக்கு மேல்…
சொட்டுச்சொட்டாக சிறுநீர் கசிதல், குடலிறக்கம், பிறப்புறுப்பில் வறட்சித்தன்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புகள் உள்ளன.
சிறுநீர்த் தொற்று வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், பிறப்புறுப்பைச் சுத்தமாகப் பராமரிக்க, மருத்துவர் பரிந்துரைப்படி கிரீம்களைப் பூசலாம். 60க்கு மேல்தான் அதிகக் கவனம் வேண்டும். ஹார்மோன் செயல்பாடு குறைவதால், சிறுநீர்ப்பையின் செயல்திறன் குறையும். சிரித்தால், அழுதால், தும்மினால்கூட சிறுநீர் வெளியேறும் பிரச்னை இருக்கும்.

ரத்தப்போக்கு தொடர்ந்தால், சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேலும் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் என்பதால், அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.
மனம் சார்ந்த தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். இந்த வயதில் தனிமைஉணர்வு  இருக்கும். வெறுப்பான மனநிலையில் தனக்கு நேரும் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவார்கள். இதனால், ஆரம்பகட்டத்திலேயே குணமாக்கக்கூடிய பிரச்னைகள் அறுவைசிகிச்சை வரை செல்ல நேரிடும் என்பதால் கவனம் தேவை. எந்ததெந்த வயதில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துவைத்துக் கொண்டு, அதற்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோடு, மனதளவில் தயாரானால், என்றும் ஆரோக்கிய வாழ்க்கை நிச்சயம்.

வரும்முன் காப்போம்!
தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யலாம். நடைப்பயிற்சி சிறந்தது.
பெற்றோர் நேரம் ஒதுக்கிப் பயிற்சிசெய்தால், வீட்டில் உள்ள குழந்தைகளும் பயிற்சிசெய்வார்கள்.
எந்த வேலையில் இருந்தாலும் அதற்கு ஏற்ப, உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்.
உடல் சரியில்லாமல்போனால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். நோய்கள் வரும் முன் காப்பதுதான் சரி.
குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், தங்களது உடலை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளலாம்.