கவலை வந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலை இல்லாமலும் கண்ணீர் வருகிறது. உண்மையில் எந்த நேரமும் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இது இயல்பானது. ஆனால் சிலருக்கு சிலவேளைகளில் கண்ணிலிருந்து நீர் அதீதமாக வழிகிறது. இது ஏன்?
கண்ணீரின் கடமைகள்
காரணம் என்னவென்றால், கவலையை வெளிக்காட்டுவதை விட கண்களுக்கு மேலும் பல கடமைகள் உள.
- கண்களை ஈரலிப்பாக வைத்திருப்பது முக்கிய கடமையாகும். கண்கள் ஈரலிப்பாக இருப்பதால்தான் கண்களை நாம் மூடித் திறக்கும்போதும், பார்வையைத் திருப்புதற்காக கண்களை ஆட்டும் பொழுதும் உராய்வு இன்றி வழுவழுப்புடன் அதனால் இயங்க முடிகிறது.
- கண்களுக்கு தேவையான போசணையில் ஓரளவு அதனூடகவும் கிடைக்கிறது.
- தூசி மற்றும் உறுத்தக் கூடிய பொருள்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
- கண்கள் மாசு மறுவின்றி பளிங்கு போல கண்ணீரினால் பேணப்படுவதால்தான் எமது பார்வை தெளிவாக இருக்கிறது.
- கண்ணில் தொற்று நோய்கள் ஏற்படாமல் காப்பதும் கண்ணீர்தான்.
எமது கண்களின் மேல் மடலுக்கு கீழே பல சிறிய கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. அவற்றிலிருந்து நாசிக்கு அருகே கண்களில் இருக்கும் நுண்ணிய துவாரங்கள் ஊடாகவே கண்ணீர் வருகின்றது.
இந்தக் கண்ணீரின் ஒரு பகுதி ஆவியாகி மறைந்துவிட, மீகுதி கண்ணீர்க் குழாய்களுடாக நாசியினுள் வழிந்து விடும். இது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழமையான செயற்பாடு. இக் குழாய் அடைபடுவதாலும் கண்ணீர் அதிகமாக வழியலாம்.
திடீரென அதிகமாக கண்ணீர் வடிதல்
ஆனால் நாம் உணர்ச்சி வசப்படும்போதும், கண்களுக்குள் ஏதாவது விழுந்து உறுத்துப்படும்போதும் அதிகமாகக் கண்ணீர் வடிகிறது. இது வித்தியாசமான செயற்பாடு. இது கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து வெளியேறுகிறது. இது தற்காலிகமாக நடைபெறுவதாகும்.
தொடர்ந்து ரீ.வீ பார்க்கும்போது அல்லது கணனியில் வேலை செய்யும்போது கண்ணீர் வடிகிறது எனப் பலர் சொல்வதைக் கேட்கிறோம். இதற்குக் காரணம் என்ன?
வழமையாக எமது கண்கள் அடிக்கடி இமைக்கிறது. அதாவது தானாகவே வெட்டி மூடுகிறது. இச் செயற்பாட்டின்போது மேலதிக கண்ணீர் கண்ணீர்குழாய் ஊடாக வெளியேறிவிடுகிறது.
ஆனால் தொடர்ந்து உற்றுப் பார்க்கும்போது கண்களை வெட்டி மூடும் செயற்பாடு குறைகிறது. இதனால் கண்ணீர் குழாய் ஊடாக வடிவது குறைந்து தேங்குவதாலேயே கண்ணீராக வடிகிறது.
கண்ணில் கிருமித்தொற்று (Conjuntivitis) ஏற்படும்போதும் கண்களிலிருந்து நீர் போல வடிவதுண்டு.
தொடர்ச்சியாக கண்களிலிருந்து நீர் வழிதல்
ஆனால் இதைத் தவிர நீண்டகாலத்திற்கு தொடரும் அதிக கண்ணீர் சுரப்பதைchronic epiphora என்பார்கள்.
இவ்வாறான நீண்டகாலம் தொடரும் கண்ணீர் சுரப்பதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
தொடர்ந்து கண்ணீர் வழிதலின் காரணங்கள்.
- சூழல் காரணமாகலாம். இரசாயனப் பொருட்கள், புகை, வெங்காய மணம் போன்ற கண்களை உறுத்தக் கூடிய ஏதாவது ஒன்று காரணமாகலாம்.
- ஓவ்வாமை காரணமாகலாம். சுழலிலுள்ள தூசி, மகரந்தம் போன்றவற்றால் ஏற்படும் ஒல்வாமை (Kernal Conjunctivitis)காரணமாகலாம். குளுக்கோமா போன்ற ஏதாவது கண் நோய்களுக்கு தொடர்ந்து கண்களுக்கு ஊற்றும் துளி மருந்துகள் கூட சிலருக்குக் காரணமாகலாம்.
- கண்நோய் எனப்படும் கண்களில் ஏற்படும் கிருமித் தொற்று infective conjunctivitis மற்றொரு காரணமாகும். வைரஸ் கிருமித் தொற்று எனில் நீர்போலவும், பக்றீரியா தொற்று எனில் சற்றுத் தடிப்பாக பூளையாகவும் வரும். காலையில் கண் விழிக்கும்போது அதனால் கண்கள் ஒட்டிக்கொண்டிருக்கும்.
- ஓரிரு இமை முடிகள் உட்பக்கமாக சிலருக்கு வளர்வதுண்டு. Entropionஎன்பார்கள். இதுவும் மற்றறொரு காரணமாகும்.
- வரட்சியான கண்கள் முக்கிய காரணமாகும். வயதாகும்போது பொதுவாக ஏற்படும் பிரச்சனை இதுவாகும். அடிக்கடி கண்களை வெட்டி மூடுதல், கடுமையாக காற்று வீசுமிடங்களைத் தவிர்த்தல், புகைத்தலை நிறுத்தல் போன்றவை உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.