மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.
மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.
செரிமானம் எப்படி ஏற்படுகிறது?
முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது ஆரம்பமாகிறது. பிறகு உணவு வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும்.
வயிற்றிலுள்ள உணவு, அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு, சிறு குடலுக்குச் செல்கிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மை அதிகமாகும்போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.
சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத்தன்மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன் கலந்து, உணவு அமிலத்தன்மை இழந்து, நடுநிலை ((நெரவசயட)) அடைகிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன.
பெருங்குடலில் இக்கழிவுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:
1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.
3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.
4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.
5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.
6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.
மலச்சிக்கலுக்கு அக்குபிரஷர் சிகிச்சை:
அக்குபிரஷர் முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.
பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.
வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.
இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால் ‘நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.
மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.
நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.