உடல் ஆரோக்கியமாக இருக்க பல ஆயத்தங்களை மேற்கொள்கிறோம். இருப்பினும் அதையும் மீறி நம்மை பல நோய்கள் தாக்கவே செய்கின்றன. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், உடலில் நோய் இருந்தால் அது நமக்கே தெரிவது இல்லை. அதற்கு ஓர் உதாரணம் தான் குறைந்த இரத்த அழுத்தம்.
ஹைப்போடென்ஷன் என்றழைக்கப்படும் குறைந்த இரத்த அழுத்தம், ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும், அதற்குப் பின்னும் இரத்தக் குழாய்களின் சுவர்களை எதிர்த்து போராடும் போது, இரத்த அழுத்தம் இயல்பு நிலையை விட குறைவாக இருப்பதால் வருவதாகும். இந்நிகழ்வு உலகத்தில் உள்ள பலத்தரப்பட்ட மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. நம்மில் பலரும் இந்த பிரச்சனையை சந்திப்போம். ஆனால் இது தூக்கமின்மை, நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்.
தொடர்ச்சியாக குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், ஆக்ஸிஜன் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு செல்வதை தடுக்கும். அதனால் பெரும் ஆபத்தாக முடியும். ஏன் உயிரை கூட பறித்து விடும். குறைந்த இரத்த அழுத்தத்தினால் ஏற்பட போகும் பெரிய விபரீதங்களில் இருந்து காக்க, குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட அதிமுக்கியமான காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக குறைந்த இரத்த அழுத்தத்திற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமான சிலவற்றை காணலாம்.
குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியமான 10 காரணங்கள்
1) நீர் வறட்சி :
நீர் வறட்சி என்பது அன்றாடம் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. நீடித்த குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு இவையாவுமே நீர் வறட்சி ஏற்பட காரணமாக இருக்கிறது. இதுமட்டுமின்றி அதிக அளவு உடற்பயிற்சி, அதிகமாக வியர்த்து கொட்டுதல் மற்றும் அதிகப்படியான வெப்பத்தினாலும் இது உண்டாகலாம்.
2) இரத்தப் போக்கு :
இரத்தப் போக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ, எப்படி இருந்தாலும் அது குறைந்த ரத்த அழுத்தத்தில் வந்தடையும். இத்தகைய இரத்தப் போக்கானது விபத்து, அறுவை சிகிச்சை அல்லது வேறு காரணங்களால் ஏற்படலாம்.
3) உறுப்பு வீங்குதல்/அழற்சி :
உடம்பினுள் இருக்கும் உறுப்புகள் வீங்கினாலோ அல்லது அழற்சி வந்தாலோ குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டு விடும். இதற்கும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? உறுப்புகள் வீங்கினால் இரத்தக் குழாய்களை விட்டு திரவம் வெளியேறி பாதிப்படைந்த உறுப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களில் சென்றடையும். இது இரத்தத்தை உறிந்து கொண்டு அதன் அளவை குறைப்பதால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
4) உறுதியற்ற இதய தசைகள் :
உறுதியற்ற இதய தசைகளை கொண்டவர்களா? அப்படியானால் குறைந்த இரத்த அழுத்தத்தினால் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. உறுதியற்ற இதய தசைகள் இதயத்தை செயலிழக்கச் செய்து, இரத்தம் அழுத்த அளவையும் குறைக்கும். உறுதியற்ற இரய தசைகள் ஏற்பட காரணம் லேசான மாரடைப்பு தொடர்ச்சியாக வருவதால் அல்லது சில கிருமிகளால் இதய தசைகள் பாதிப்பு அடைவதால் ஆகும்.
5) இதய அடைப்பு :
மாரடைப்பு மற்றும் தமனித் தடிப்பதால் ஏற்படுவது தான் இதய அடைப்பு. இதய அடைப்பினால், மின்னோட்டத்தை இதயத்துக்குள் அனுப்பும் சிறப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் இதயத்திற்கு வர வேண்டிய சில அல்லது அனைத்து மின்சமிக்கைகளும் நின்று விடும். இது மேலும் இயல்பாக நடக்க வேண்டிய சுருங்குதலையும் நடக்க விடாமல் தடுக்கும்.
6) இயல்பு நிலையற்ற வேகமான இதயத் துடிப்பு இதயத் துடிப்பு :
இயல்பற்ற நிலையிலோ அல்லது மிக வேகமாக துடிப்பதனாலோ, இதயக் கீழறைகளும் இயல்பற்ற விதத்தில் சுருங்கும். இதனால் இதயக் கீழறைகள் சுருங்குவதற்கு முன் தேவையான இரத்த அளவை நிரப்ப முடியாமல் போகும். இதனால் அதிக இதய துடிப்பு இருந்தும், இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறும் அளவும் குறையும்.
7) கர்ப்பம் :
குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறீர்களா? அப்போது இரத்த அழுத்தம் குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கர்ப்பக் காலத்தில் குறைந்த இரத்த அழுத்தம் இருப்பது சகஜம் என்றாலும், சில சிக்கல்களை தவிர்க்க சோதனை செய்து கொள்வது நல்லது.
8) தீவிர தொற்று :
அழுகச் செய்கின்ற காயங்கள் அல்லது தீவிர தொற்றுக்களால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படலாம். இந்த தொற்று ஏற்பட காரணம் நுரையீரல் அல்லது வயிற்று பகுதியில் இருந்து பாக்டீரியா இரத்த ஓட்டத்தில் நுழைந்துவிடும். நுழைந்த பின் இந்த பாக்டீரியாக்கள் நச்சுத் தன்மையை வெளியிடுவதால், இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்யும்.
9) குறைவான ஊட்டச்சத்து :
அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான உடல் நலம் வேண்டுமானால், வளமான ஊட்டச்சத்து உடலில் இருக்க வேண்டும். அதில் சிறு குறைபாடு இருந்தாலும் சிக்கல்களை ஏற்படுத்தி குறைந்த இரத்த அழுத்தம் வர காரணமாகும்.
10) சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகள் :
ஹைப்போ தைராய்டிசம், ஃபாரா தைராய்டு, சிறுநீரகச்சுரப்பி குறைபாடு, குறைந்த இரத்த சர்க்கரை மற்றும் சர்க்கரை நோய் போன்ற உட்சுரப்புப் பிரச்சனைகள் இருப்பதினால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக இத்தகைய நோள்கள் ஏற்படுவதற்கு சுரப்பியிலிருந்து வெளியாகும் ஹார்மோன் சிக்கல்கள் தான் பெரும் காரணம். ஆகவே இத்தகைய நோய்களினாலும் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.