செவ்வாய், 3 ஜூன், 2014

அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்


மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் சாப்பிடச் சொல்வார்கள். காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது!
மற்ற காய்கறிகளிலும் பாஸ்பரஸ் இருக்கிறது. குறிப்பாக, வெண்டைக்காயில் உள்ளதைவிட அதிக அளவில் இருக்கிறது. இருந்தாலும், இக்காயை ஏன் சிபாரிசு செய்கிறார்கள்?
உயர்தரமான பாஸ்பரஸுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவரபசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; அத்துடன் அலுபொமினோ அமிலங்களும், எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.
கொலாஸ்டிரலைக் கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும்.
மேற்கண்ட காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது. மரம் போன்ற நார்ப்பொருள், தாவரபசைப்பொருள் ஆகியவற்றால்தான் வெண்டைக்காய்ப் பச்சடி பசை போல் இருக்கிறது. வெண்டைக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட சாம்பார் குழம்பு முதலியவை தண்ணீராய் இல்லாமல் கெட்டியாய் இருக்கின்றன.
வாய்நாற்றம் அகலும்!
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.
நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் அகன்று குடல் சுத்தமாகிறது.
மலச்சிக்கலும், வாய்நாற்றமும் அகல வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லது.
திருமண விருந்துகளில் சாப்பாடு உடனடியாகச் செரிமானம் ஆகத்தான் வெண்டைக்காய்களை மோரில் போட்டு மோர்க்குழம்பு தயாரித்துப் பரிமாறுகிறார்கள். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், இம்பிஞ்சான காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முற்றிய வெண்டைக்காய் வேண்டா!
பிஞ்சு வெண்டைக்காயில் தான் மருத்துவக் குணங்கள் அதிகம். அதனால்தான் பெண்கள் பிஞ்சுக் காயா என அறிய வெண்டைக்காய் நுணியை ஒடித்துப் பார்த்துக் கடைகளில் சேகரிக்கிறார்கள்!
சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டவும் தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.
வெண்டைக்காயைத் தண்ணீர் ஊற்றிச் சமைக்க வேண்டும்; வறுத்துச் சாப்பிடக்கூடாது. வயிற்றுப் போக்கைத் தீவிரமாய் குணப்படுத்தும் தன்மை வெண்டைக்காய் பச்சடிக்கு உண்டு.
வாத நோய்க்காரர்களும், உடல் குண்டாய் உள்ள எல்லா வயதுக்காரர்களும் வெண்டைக்காயைத் தவிர்ப்பது நல்லது.
முதிர்ந்த வெண்டைக்காயில் சத்துக்கள் இல்லை. அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையைகாபிப்பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.
இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
வீக்கம் குறையும்!
கிழக்கத்திய நாடுகளில் கட்டி, வீக்கம் புண் முதலியவை குணமாக வெண்டைக்காய்ச் செடியின் இலைகளையும், இளம் பிஞ்சுகளையும் மெல்லிய துணியில் வைத்து, குறிப்பிட்ட இடங்களில் கட்டுகிறார்கள். இதனால் கட்டி, வீக்கம் முதலியவையும், புண்ணும் விரைந்து குணமாகின்றன.
ஆண்மை பெருகும்!
இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.
ஆண்டு முழுவதும் பயிராகும் இக்காயின் தாயகம் ஆப்பிரிக்காவாகும். கிழக்குக்கோளார்த்தத்தில் தோன்றிய இக்காய் மேற்குக் கோளார்த்தத்தில்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
அமெரிக்கர்களும், இஸ்தான்புல்காரர்களும் வெண்டைக்காய்ப் பிரியர்களாய் இருக்கின்றனர்.
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹிபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ்.
சமைத்தோ, ஊறுகாய் போட்டோ, பதப்படுத்தி டின்களில் வைத்திருந்தோ பல நாடுகளில் இக்காயைச் சாப்பிடுகின்றனர்.
‘புரோடோபிளாசம்’ என்னும் திரவத்தில் நமது உயிரணுக்கள் மிதந்துகொண்டிருக்கின்றன. இந்தத்திரவத்தில் முக்கியமாய் இடம் பெற்றுள்ளது பாஸ்பரஸ். இது இரத்தத்தைத் திரவ நிலையில் வைத்திருக்க உப்புச்சத்துடன் பயன்படுகிறது. உயிரணுக்களையும் குறிப்பிட்ட வடிவமைப்பில் தொடர்ந்து இருக்கவும் பயன்படுகிறது.
எனவே, உயர் தரமான பாஸ்பரஸ் அடங்கியுள்ள வெண்டைக்காய் என்னும் இனிமையான காய்கறிக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுங்கள்; உடல் நலத்துடன் வாழுங்கள்.

வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு


கிழங்குவகைகளுள் அதிகமான மாவுச்சத்தைக் கொண்டவை, சேப்பங்கிழங்குகள் தான், உருளைக் கிழங்கைவிட எளிதில் வேகக்கூடியவை; செரிமானம் ஆகக்கூடியவை. உருளைக் கிழங்கைவிட, இனிப்புச் சுவை அதிகம் கொண்டவை.
சேப்பங்கிழங்கில் வெண்மை, கருமை என இரு நிறவகை உண்டு. ஐரோப்பாவில் 13 வகைகள் உள்ளன.
100 கிராம் சேப்பங்கிழங்கில் கிடைக்கும் கலோரி அளவு 97 ஆகும். அதில் மாவுச்சத்து 21 சதவிகிதமும், புரதம் சதவிகிதமும், ஈரப்பதம் 73 சதவிகிதமும் உள்ளன.
குழந்தைகள் அறிவுடனும் உடல் உறுதியுடனும் வளர….
சேப்பங்கிழங்கு வெட்டை நோயைக் குணமாக்கும். இருசாராரின் மலட்டுத் தன்மையையும் நீக்கும். இரத்த விருத்தியை அதிகரிக்கச் செய்யும். காய்ச்சல் நேரத்திலோ, தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வரும் காலத்திலோ இக்கிழங்கைச் சாப்பிட்டால் அது மருந்தை முரிக்கும். வாதம், இருமல் ஆகியன உள்ளவர்களும் தவிரிக்க வேண்டிய கிழங்கு இது. மற்றபடி எல்லா வயதுக்காரர்களும் நனகு சாப்பிட வேண்டிய கிழங்குகளுள் இதவும் ஒன்றாகும். கண்பார்வைத் திறனை அதிகரிக்கும்.
ஹாவாயிலும் மற்ற பசிபிக் தீவுகளிலும் சேப்பங்கிழங்கும், சேப்பங்கீரையும் முக்கிய உணவாக உள்ளன. தென்னமெரிக்காவில் டாஸீன் என்று இதற்குப் பெயர்.
வேகவைத்த கிழங்கைக்கொண்டு சூப்பு, குழம்பு, கேக் முதலியன தயாரிக்கிறார்கள். இக்கிழங்கிலிருந்து குழந்தைகளுக்கான சத்துணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான மற்ற சத்துணவுப் பொருள்களில் முக்கிய மூலப் பொருளாகவும் இக்கிழங்கு மாவு பயன்படுகிறது. வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’ போன்றவையும் இக்கிழங்கில் அதிக அளவு உள்ளன. இதனால் குழந்தைகள் புத்திக்கூர்மையுள்ளவர்களாய் வளர்கின்றனர்.
மேற்கண்ட நன்மைகளை இக்கிழங்கை வேகவைத்துப் பொரியல் செய்து சாப்பிட்டாலே பெறலாம். சேப்பங்கிழங்கும், கீரையும் சற்றுக் கசப்பாய் இருக்கும். இதைப் போக்கப் புளிசேர்த்துச் சமைக்க வேண்டும்.
கிழங்கைப் போலவே கீரையும் சத்து மிகுந்தது. 100 கிராம் சேப்பங்கீரையில் 56 கலோரி வெப்பம் உடலுக்குக் கிடைக்கிறது. ஆனால், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ முதலியவை அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் சேப்பங்கீரையில் உள்ளன.
சேப்பங்கீரையைத் தண்டுடன் சேர்த்துச் சமைத்தால் சத்துகள் அதிகமாய்க் கிடைக்கும். வாடிய கீரையையும் சமைத்துண்ணலாம். இது இக்கீரைக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும். வளரும் குழந்தைகளுக்குக் கால்சியமும், பாஸ்பரஸும் மிக அவசியமானவையாகும். 100 கிராம் உலர்ந்த சேப்பங்கீரையில் 1500 மில்லிகிராம் கால்சியமும், 308 மில்லிகிராம் பாஸ்பரஸும் கிடைக்கின்றன.
சேப்பங்கிழங்கின் இலைகள் முக்கோணவடிவில் பெரிய அளவில் இருக்கும்: பார்க்க மிகவும் அழகானவையாகவும் இருக்கும்.
சிறந்த உணவான சேப்பங்கீரையை வேகவைத்த தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் வயிற்றுவலி, மலச்சிக்கல் முதலியவை உடனே குணமாகும்.
சேப்ப இலையின் சாறு வெட்டுக்காயங்களை உடனே ஆற்றும். வெட்டுக்காயத்தின்
மீது சில துளிகள் விட்டால் போதும்.
மூல நோய்க்கு மிகச்சிறந்த உணவு மருந்து, இக்கீரை. காதுவலி, காதில் சீழ் வடிதல் முதலியவை குணமாக சேப்பங்கீரைச் சாற்றினை துளியளவு காதில் விட்டால் போதும்! காதுவலி குறையும் குணமாகும். காதில் உள்ள சீழ் நீங்கும்; அதனால் ஏற்பட்ட புண்ணும் உடனே குணமாகும்.
பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரைச் சாற்றைப் பூசினால் நஞ்சு இறங்கிவிடும்; வலியும் குறையும்.
புளி சேர்த்துச் சமைத்துண்பதால் சேப்பங்கீரை இரத்தக் கடுப்பை குணமாக்குகிறது. தாது விருத்தியை அதிகரித்து குழந்தைப் பேறு கிடைக்கவும் வழி செய்யப்பயன்படுகிறது.
சேப்பங்கிழங்கின் தாயகம் ஐரோப்பாவும் மேற்கு ஆசியாவும் ஆகும்.
சேப்பங்கிழங்கின் மாவுச்சத்து, கீரையின் மருத்துவக்குணங்கள் முதலியவற்றிற்காக இந்தியா உட்பட பல நாடுகள் சேப்பங்கிழங்கு உற்பத்தியில் அதிகம் ஈடுபாடு காட்டிவருகின்றன.
வீட்டுத் தோட்டங்களில் சேப்பங்கீரையை உணவிற்காக வளர்ப்பது இந்தியாவின் அதிகரித்துள்ளது. இது சிறந்த மூலிகையாகும்.
மூலநோய் குணமாகவும், மூளைவளர்ச்சி அதிகரிக்கவும் சேப்பங்கிழங்கு, சேப்பங்கீரை முதலியவற்றை உணவில் அடிக்கடி இடம் பெறச் செய்யுங்கள்.

திங்கள், 2 ஜூன், 2014

இரத்த சோகைக்கு தீர்வு என்ன?

    எந்தக் காரியத்தையும் உங்களால் ஒழுங்காக ஒருங்கிணைக்க முடியவில்லையா?       

       சோம்பலாக இருக்கிறீர்களா?
       காலை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாமல் ஆட்டிக்கொண்டே இருக்கிறீர்களா?
       உங்களுக்கு ரத்த சோகை இருக்கலாம். உடனடியாக மருத்துவரைச் சந்தியுங்கள்.

       ரத்தசோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இதில் இரும்புச்சத்து இருக்கும். இதுதான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது.
       இன்று இந்தியாவில் 64 சதவிகித பெண் குழந்தைகள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான உணவுகள் இன்றி வளர்கின்றனர். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது அவர்கள் போதிய சத்தின்றி உடல்நலம் குன்றி காணப்படுகின்றனர். இதனால் அவர்கள் பூப்பெய்தியவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
       இரும்பு சத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சோர்வடைந்துவிடுகிறது. மேலும் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.
       ஒரு வீட்டில் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த வீட்டில் அனைவரும் நலமாக இருக்க முடியும். ஆனால், பெண் பிள்ளைகள் பிறந்தவுடன் கள்ளிப்பால் கொடுத்து சாகடித்தனர். அப்படியும், தப்பிய பெண் குழந்தைகளுக்கு சரியான உணவு கொடுக்காமல் அவளை உடலாலும் உள்ளத்தாலும், பாதிப்படையச் செய்தனர். அந்த பெண் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக் கூடியவள் என்பதை அனைவருமே மறந்தனர். அந்நேரத்தில் பெண்களே பெண் குழந்தைகளுக்கு எதிராக இருந்தனர். தானும் ஒரு பெண்தான் என்பதை மறந்து பெண் பிள்ளைகளை சுமையாக நினைத்தனர்.
       இன்று இந்தியாவில் ஆண் பெண் விகிதாசாரம் 1000 ஆண்களுக்கு 971 பெண்கள் தான் உள்ளனர். இன்னும் சில மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
       கல்வியில் முதலிடம் பெறும் கேரளாவில் மட்டும்தான் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.
       உணவுப் பற்றாக்குறை காரணமாக வளரும் நாடுகளில் இருப்பவர்கள்தான் இந்தக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்பவர்களும் பாதிக்கப்படவே செய்கிறார்கள். ரத்த சோகைக்கான காரணம் ரத்தசோகை ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ரத்தம் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அவை:
இரத்த சோகை ஏற்பட காரணங்கள் :
      இரத்த சிவப்பணுக்களின் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் இரத்தச் சோகை உண்டாகும்.
      வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்தச் சோகை உண்டாகும்.
      இரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் இரத்தச் சோகை ஏற்படும்.
      இரத்தம்அதிகம் வெளியேறுவதால்
      இரத்தம் மாசுபடுதல்
      வயிற்றில் அல்சர்
      வயிற்றில் கட்டி
      வயிற்றில் வீக்கம்
      வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்று நோய் காரணமாக சில சமயம் தொடர்ந்து ரத்தம் உள்ளே கசியும்.
      வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், அவை காலப்போக்கில் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம்.
      குழந்தை பிறப்பின் போது ஏற்படும் ரத்த இழப்பு போன்ற காரணங்களால் இரத்தச் சோகை பெண்களுக்கு ஏற்படுகிறது.
       மேலும் இவர்கள் குழந்தை பேறுக்குப்பின் உடல் பலம் இழப்பதால், கை, கால், மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுகிறது. மேலும், மலத்தையும், சிறுநீரையும் பெண் குழந்தைகள் அடக்குவதால் மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்பாகிறது. இதனால் ஈரல் பாதிக்கப் பட்டு பித்தம் அதிகரித்து ரத்தத்தில் கலந்து உடலை நோய் எதிர்ப்பு சக்தியின்றி ஆக்குகிறது.
இரத்தச் சோகையின் அறிகுறிகள்
      மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.
      சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு.
      உணவு செரிமானமாகாமல் இருத்தல்.
      உடல் வெளுத்துக் காணப்படல்
      முகத்தில் வீக்கம் உண்டாதல்
      நகங்களில் குழி விழுதல்.
      குழந்தைகளுக்கு கண்குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல்
      உடல் நலம் சரியில்லாதது போன்ற உணர்வு
      மூச்சுவிடுவதில் சிரமம்.
      இதயம் வேகமாகத் துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது.
      குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை
       இதெல்லாம் போக, தலைவலி, நாக்கு உலர்ந்து போவது, சுவையுணர்வு பாதிக்கப்படுவது, முழுங்கச் சிரமமாக இருப்பது, உடல் வெளுத்துப் போவது, நகம் உதிர்வது, வாயின் ஓரங்களில் புண் ஏற்படுவது, அதிகம் வியர்ப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, கை கால்களில் வீக்கம், வாந்தி போன்ற அறிகுறிகளும் சிலருக்கு அரிதாக ஏற்படும்.
       சாதாரணமாக, ஒரு ரத்த சிவப்பணு 110-120 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். அதற்குப் பிறது சிதைந்துவிடும். ஆனால் நடக்கும்போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அப்படி எலும்பு மஜ்ஜைகளால் அந்த அளவுக்கு ரத்த செல்களை உருவாக்க முடியாவிட்டால், ஹீமோலிசிஸ் என்ற ரத்தசோகை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு, நோய்த்தொற்று, சில மருந்துகள், நச்சுப் பொருள்கள் ஆகியவற்றால் ஹீமோலிசிஸ் ஏற்படலாம். ரத்தசோகையின் அறிகுறிகள்.
       ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோர்வும் சோம்பலும் ஏற்படும். சோர்வு என்பது உடல் ரீதியானது. சோம்பல் என்பது மன ரீதியானது. ஒருவர் உடல்ரீதியாக சோர்வாக இருந்தால் அவரது மன நலன் பாதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இவை போக மேலும் சில அறிகுறிகள் இருக்கின்றன.
பரிசோதனை
       ரத்தசோகை இருப்பது சாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலமே தெரிந்துவிடும். ஒருவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாகத் தெரிந்தால், அவருக்கு ரத்தசோகை இருப்பதாக அர்த்தம். நோயாளியின் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அவருடைய ரத்த சிவப்பணுக்கள் சிறியதாகவும் வெளுத்துப் போயும் காணப்படும். வைட்டமின் குறைபாடு இருந்தால், அவர்களது ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாகவும் பெரியதாகவும் இருக்கும். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 11 -15 கிராம் ஹீமோ குளோபின் இருக்கும்.
இரத்த சோகையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்:
பிரசவம்: கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்குப் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின்போது பொதுவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்தசோகை நோய் இருந்தால், ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும். தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
சோர்வு : ரத்த சோகை நோயாளிகளின் வாழ்கை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த சோகை தீவிரமாக இருந்தால், வேலை பார்ப்பதே அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். தங்களுடைய தினசரி வேலைகளையே அவர்களால் கவனிக்க முடியாமல் போகக்கூடும். இந்த நீண்ட கால சோர்வின் காரணமாக ஒருவர் தீவிர மன அழுத்த நோயாளியாகும் வாய்ப்பும் இருக்கிறது.
நோய்க்குள்ளாகும் வாய்ப்பு :
       ஆரோக்கியமானவர்களைவிட, ரத்தசோகையுடன் கூடியவர்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். ரத்தசோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்துச் செல்லப்படும் ஆக்ஸிஜனின் அளவுகுறைவதால், அதிக ஆக்ஸிஜனுக்காக இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில் இருதயம் செயலிழக்கக்கூடும். ரத்தசோகையின் காரணமாக வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதமடையும் வாய்ப்பு இருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 போதுமான அளவில் உடலில் இருப்பது அவசியம்.
இரத்த சோகைக்கான மருத்துவம்: இரும்புக் குறைபாடு - உடலில் தேவையான அளவு இரும்புச் சத்து இருப்பதை உறுதி செய்வதற்காக இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை யின் பேரில் சாப்பிடலாம்.
உணவுப் பழக்கம்: நோயாளி இரும்புச் சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால், இரும்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.
       வலி நிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளாலும் ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தைச் சரி செய்ய வேண்டும். இத்தகைய ரத்தச் சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச் சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, ஆரைக் கீரை, அரைக்கீரை, புதினா கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, ரத்தச் சோகை நீங்கும்.
       மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை நீங்கும்.

அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி: ஆய்வில் தகவல்

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), "ஜங்க் புட்' குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது."ஜங்க் புட்' எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது. நான்கு வயதுக்குக் குறைந்த நாலாயிரம் குழந்தைகளிடம் அவர்களின் நுண்ணறிவுத் திறன் ஆய்வு செய்யப்பட்டது.அவர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகளுக்கு ஏற்ப, நுண்ணறிவுத் திறன் குறைவது கண்டறியப்பட்டது. சராசரியாக, 1.67 சதவீதம் இயல்பு நிலையில் இருந்து குறைவது தெரியவந்தது. இந்த இழப்பை சரி செய்ய முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது.


இதுகுறித்து நார்த்ஸ்டோன் கூறியதாவது:பிரிட்டனில் குழந்தைகள், மோசமான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகளவில் உள்ள உணவுகளை மட்டுமே பெருமளவில் உண்பதால், எட்டரை வயதில் அவர்களின் நுண்ணறிவுத் திறனில் பெரும் குறைபாடு நிகழ்கிறது.ஆனால், ஆரோக்கியமான உணவு முறை, நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கிறது. இந்த வயதில், நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளைக் கொடுத்தால் அவர்களின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.இவ்வாறு நார்த்ஸ்டோன் தெரிவித்தார்.

ஞாயிறு, 1 ஜூன், 2014

சுண்டைக்காய்



சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
 சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
 சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும். சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்





உடல் பலம் பெற

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.

இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

வயிறுப் பொருமல் நீங்க

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை
 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

புகைச்சல் இருமல் நீங்க

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

மந்தம்

பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

சுவாசகாசம், இருமல் நீங்க

காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமம் - 252 கிராம்
 ஆடாதோடைச் சாறு - 136 கிராம்
 இஞ்சி ரசம் - 136 கிராம்
 பழரசம் - 136 கிராம்
 புதினாசாறு - 136 கிராம்
 இந்துப்பு - 34 கிராம்

சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.

1. மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.

2. ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.

3. ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

4. ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.

5. ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

6. சோர்வு நீங்க ஓமத்தண்­ர்

நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா? ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா? தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம்.

ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.

7. வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து.

8. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.

9. ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.

வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.

நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.

மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம்

பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.

வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.

ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.

சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.

10. தொப்பையை குறைக்க

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.

11. ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"

" ஓமம், சீரகம் கலவை " வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. " ஜெலூசில் " போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க்க விளைவுகளும் கிடையாது.

செய்முறை :

ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து 'மிக்சியில்' போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.

மந்த வயிற்றுக்கான அறிகுரி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக "கல்யாண சமையல் சாதம் " சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும் !

ஒழிக ஜெலுசில் !

12. இடுப்பு வலி நீங்க:

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

கிருமிகளை அழிக்கும் பலா!




முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் 
பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் 
செய்து பயன்-படுத்தப்-பட்டு வருகிறது. பல வழிகளில் மருத்துவக் 
குணங்களும் இப்பழத்திற்கு உண்டு. குற்றாலக் குறவஞ்சி மற்றும் தமிழ் 
இலக்கியங்களிலும் பலா பற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.

தாயகம்: பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை, இந்தியா, மலேசியா, 
பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. 
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், 
உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில்
 பயிராகிறது.

பலாவின் தாவரவியல் பெயர்: "ஆர்ட் டோ கார்பஸ்ஹைட்டிரோஃபில்லஸ்" (
Artocarpus heterophyllus). அர்ட்டிக்-கேசிய தாவர குடும்பத்தைச் சார்ந்தது.

தமிழில் வேறு பெயர்கள்: பலாவிற்கு தமிழில், ஏகாரவல்லி, சக்கை, பலவு, 
பலாசம், வருக்கை, பனசம் முதலிய வேறு பெயர்களும் உள்ளன.

பல்மொழிப் பெயர்கள்: ஆங்கிலத்தில் "ஜாக் ஃபுரூட்" (Jack fruit) என்று பெயர். 
இந்தியில் பனஸ், மலையாளத்தில் சக்கே, தெலுங்கில் பனஸபண்டு, 
கன்னடத்தில் பேரளே, குஜராத்தியில் பனஸி, காஷ்மீரியில் பனஸ்சு 
என்று பெயர்.

சத்துப் பொருட்கள்: நாம் சாப்பிடும் நூறு கிராம் பலாச்சுளையில் உள்ள சத்துப்
 பொருட்களின் அளவு கீழ்கண்டவாறு உள்ளன. புரதம் 2.1 கிராம், கொழுப்பு 0.2 
கிராம், மாவுப்பொருள் 19.8 கிராம், நார்ப்பொருள் 1.4 கிராம், சுண்ணாம்பு சத்து
 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 41 மில்லிகிராம், இரும்புச் சத்து 0.7 மில்லிகிராம்,
 தயாமின் 0.04 மி.கிராம், ரைபோஃபிளோவின் 0.15 மி.கிராம், நியாசின் 0.4 மி.
கிராம் வைட்டமின் "சி" 7.1மி. கிராம், மெக்னீசியம் 27 மில்லிகிராம், 
பொட்டாசியம் 19.1 மில்லிகிராம், சோடியம் 41.0 மில்லிகிராம், தாமிரம் 0.23
 மில்லிகிராம், குளோரின் 9.1 மில்லிகிராம், கந்தகம் 69.2 மில்லிகிராம், 
கரோட்டின் 306 மைக்ரோகிராம். இத்தனை சத்துப் பொருட்கள் உள்ள 
பலாச்சுளையை, "சத்துப்பேழை" என்று சிறப்பாகச் சொல்லலாம்.

எப்படிச் சாப்பிடலாம்: கொட்டையை நீக்கிவிட்டு, பலாச்சுளைகளை அப்படியே
 சுவைத்துச் சாப்பிடலாம். பலாக்கூழ், பலாப்பழ கீர், பலாப்பழ ஜாம், பலாப்பழ 
ஜெல்லி முதலியன செய்தும் சாப்பிடலாம். பலாப்பழத்தை பயன்படுத்தி 
பலவகை இனிப்புப் பண்டங்கள் தயார் செய்து உண்ணலாம்.

முக்கிய குறிப்பு: பலாப் பழச்சுளையை அப்படியே தின்னும்போது, முக்கியமாக
 கடைப்பிடிக்க வேண்டியதைத் தெரிந்து கொள்வோம். பலாப் பழத்திலுள்ள சில
 கேடு பயக்கும் தன்மையை நீக்கி, பழத்தின் முழு சத்துப் பொருட்களும் 
கிடைக்க, பலாச்சுளையுடன் சிறிது வெல்லம், கருப்பட்டி, தேன் இவைகளில்
 ஏதாவது ஒன்றைச் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது. இது எளிய
 வழிமுறைதான்.


மருத்துவப் பயன்கள்:

* பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக 
இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.

* சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு.

* பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் சீராகச் சாப்பிட 
வேண்டும்.

* உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில்
 இருக்கிறது.

* எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என
 ஜெர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள்
 தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.

* பலாப்பழ பானகம் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையது.

* உடலில் உள்ள தசைகளை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு
 உண்டு.

* தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் 
உரிய அளவு இருக்கிறது.
* பலாப்பழ கீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் 
அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.

* பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, 
'களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.

* பலாப்பழத்துடன் சிறிது கசகசாவை மென்று தின்றால், குடல் அழற்சி நீங்கும்.

* பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள

 கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி, நலன் பயக்கும்.


எச்சரிக்கை:

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது. வெறும் 
பலாப்பழத்தை அதிகம் தின்றால் அஜீரணம் ஏற்படும். ஆஸ்துமா நோயை 
அதிகரிக்கும்.