செவ்வாய், 3 ஜூன், 2014

அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்


மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் சாப்பிடச் சொல்வார்கள். காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது!
மற்ற காய்கறிகளிலும் பாஸ்பரஸ் இருக்கிறது. குறிப்பாக, வெண்டைக்காயில் உள்ளதைவிட அதிக அளவில் இருக்கிறது. இருந்தாலும், இக்காயை ஏன் சிபாரிசு செய்கிறார்கள்?
உயர்தரமான பாஸ்பரஸுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவரபசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; அத்துடன் அலுபொமினோ அமிலங்களும், எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.
கொலாஸ்டிரலைக் கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும்.
மேற்கண்ட காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது. மரம் போன்ற நார்ப்பொருள், தாவரபசைப்பொருள் ஆகியவற்றால்தான் வெண்டைக்காய்ப் பச்சடி பசை போல் இருக்கிறது. வெண்டைக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட சாம்பார் குழம்பு முதலியவை தண்ணீராய் இல்லாமல் கெட்டியாய் இருக்கின்றன.
வாய்நாற்றம் அகலும்!
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.
நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் அகன்று குடல் சுத்தமாகிறது.
மலச்சிக்கலும், வாய்நாற்றமும் அகல வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லது.
திருமண விருந்துகளில் சாப்பாடு உடனடியாகச் செரிமானம் ஆகத்தான் வெண்டைக்காய்களை மோரில் போட்டு மோர்க்குழம்பு தயாரித்துப் பரிமாறுகிறார்கள். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், இம்பிஞ்சான காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முற்றிய வெண்டைக்காய் வேண்டா!
பிஞ்சு வெண்டைக்காயில் தான் மருத்துவக் குணங்கள் அதிகம். அதனால்தான் பெண்கள் பிஞ்சுக் காயா என அறிய வெண்டைக்காய் நுணியை ஒடித்துப் பார்த்துக் கடைகளில் சேகரிக்கிறார்கள்!
சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டவும் தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.
வெண்டைக்காயைத் தண்ணீர் ஊற்றிச் சமைக்க வேண்டும்; வறுத்துச் சாப்பிடக்கூடாது. வயிற்றுப் போக்கைத் தீவிரமாய் குணப்படுத்தும் தன்மை வெண்டைக்காய் பச்சடிக்கு உண்டு.
வாத நோய்க்காரர்களும், உடல் குண்டாய் உள்ள எல்லா வயதுக்காரர்களும் வெண்டைக்காயைத் தவிர்ப்பது நல்லது.
முதிர்ந்த வெண்டைக்காயில் சத்துக்கள் இல்லை. அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையைகாபிப்பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.
இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
வீக்கம் குறையும்!
கிழக்கத்திய நாடுகளில் கட்டி, வீக்கம் புண் முதலியவை குணமாக வெண்டைக்காய்ச் செடியின் இலைகளையும், இளம் பிஞ்சுகளையும் மெல்லிய துணியில் வைத்து, குறிப்பிட்ட இடங்களில் கட்டுகிறார்கள். இதனால் கட்டி, வீக்கம் முதலியவையும், புண்ணும் விரைந்து குணமாகின்றன.
ஆண்மை பெருகும்!
இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.
ஆண்டு முழுவதும் பயிராகும் இக்காயின் தாயகம் ஆப்பிரிக்காவாகும். கிழக்குக்கோளார்த்தத்தில் தோன்றிய இக்காய் மேற்குக் கோளார்த்தத்தில்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
அமெரிக்கர்களும், இஸ்தான்புல்காரர்களும் வெண்டைக்காய்ப் பிரியர்களாய் இருக்கின்றனர்.
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹிபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ்.
சமைத்தோ, ஊறுகாய் போட்டோ, பதப்படுத்தி டின்களில் வைத்திருந்தோ பல நாடுகளில் இக்காயைச் சாப்பிடுகின்றனர்.
‘புரோடோபிளாசம்’ என்னும் திரவத்தில் நமது உயிரணுக்கள் மிதந்துகொண்டிருக்கின்றன. இந்தத்திரவத்தில் முக்கியமாய் இடம் பெற்றுள்ளது பாஸ்பரஸ். இது இரத்தத்தைத் திரவ நிலையில் வைத்திருக்க உப்புச்சத்துடன் பயன்படுகிறது. உயிரணுக்களையும் குறிப்பிட்ட வடிவமைப்பில் தொடர்ந்து இருக்கவும் பயன்படுகிறது.
எனவே, உயர் தரமான பாஸ்பரஸ் அடங்கியுள்ள வெண்டைக்காய் என்னும் இனிமையான காய்கறிக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுங்கள்; உடல் நலத்துடன் வாழுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.