செவ்வாய், 17 மார்ச், 2015

குறைந்த இரத்த அழுத்தம்



உடல் ஆரோக்கியமாக இருக்க பல ஆயத்தங்களை மேற்கொள்கிறோம். இருப்பினும் அதையும் மீறி நம்மை பல நோய்கள் தாக்கவே செய்கின்றன. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், உடலில் நோய் இருந்தால் அது நமக்கே தெரிவது இல்லை. அதற்கு ஓர் உதாரணம் தான் குறைந்த இரத்த அழுத்தம். 

ஹைப்போடென்ஷன் என்றழைக்கப்படும் குறைந்த இரத்த அழுத்தம், ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும், அதற்குப் பின்னும் இரத்தக் குழாய்களின் சுவர்களை எதிர்த்து போராடும் போது, இரத்த அழுத்தம் இயல்பு நிலையை விட குறைவாக இருப்பதால் வருவதாகும். இந்நிகழ்வு உலகத்தில் உள்ள பலத்தரப்பட்ட மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. நம்மில் பலரும் இந்த பிரச்சனையை சந்திப்போம். ஆனால் இது தூக்கமின்மை, நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்.

தொடர்ச்சியாக குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், ஆக்ஸிஜன் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு செல்வதை தடுக்கும். அதனால் பெரும் ஆபத்தாக முடியும். ஏன் உயிரை கூட பறித்து விடும். குறைந்த இரத்த அழுத்தத்தினால் ஏற்பட போகும் பெரிய விபரீதங்களில் இருந்து காக்க, குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட அதிமுக்கியமான காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக குறைந்த இரத்த அழுத்தத்திற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமான சிலவற்றை காணலாம்.



குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியமான 10 காரணங்கள்


1) நீர் வறட்சி : 

நீர் வறட்சி என்பது அன்றாடம் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. நீடித்த குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு இவையாவுமே நீர் வறட்சி ஏற்பட காரணமாக இருக்கிறது. இதுமட்டுமின்றி அதிக அளவு உடற்பயிற்சி, அதிகமாக வியர்த்து கொட்டுதல் மற்றும் அதிகப்படியான வெப்பத்தினாலும் இது உண்டாகலாம்.

2) இரத்தப் போக்கு :

இரத்தப் போக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ, எப்படி இருந்தாலும் அது குறைந்த ரத்த அழுத்தத்தில் வந்தடையும். இத்தகைய இரத்தப் போக்கானது விபத்து, அறுவை சிகிச்சை அல்லது வேறு காரணங்களால் ஏற்படலாம்.

3) உறுப்பு வீங்குதல்/அழற்சி : 

உடம்பினுள் இருக்கும் உறுப்புகள் வீங்கினாலோ அல்லது அழற்சி வந்தாலோ குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டு விடும். இதற்கும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? உறுப்புகள் வீங்கினால் இரத்தக் குழாய்களை விட்டு திரவம் வெளியேறி பாதிப்படைந்த உறுப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களில் சென்றடையும். இது இரத்தத்தை உறிந்து கொண்டு அதன் அளவை குறைப்பதால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

4) உறுதியற்ற இதய தசைகள் : 

உறுதியற்ற இதய தசைகளை கொண்டவர்களா? அப்படியானால் குறைந்த இரத்த அழுத்தத்தினால் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. உறுதியற்ற இதய தசைகள் இதயத்தை செயலிழக்கச் செய்து, இரத்தம் அழுத்த அளவையும் குறைக்கும். உறுதியற்ற இரய தசைகள் ஏற்பட காரணம் லேசான மாரடைப்பு தொடர்ச்சியாக வருவதால் அல்லது சில கிருமிகளால் இதய தசைகள் பாதிப்பு அடைவதால் ஆகும்.

5) இதய அடைப்பு : 

மாரடைப்பு மற்றும் தமனித் தடிப்பதால் ஏற்படுவது தான் இதய அடைப்பு. இதய அடைப்பினால், மின்னோட்டத்தை இதயத்துக்குள் அனுப்பும் சிறப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் இதயத்திற்கு வர வேண்டிய சில அல்லது அனைத்து மின்சமிக்கைகளும் நின்று விடும். இது மேலும் இயல்பாக நடக்க வேண்டிய சுருங்குதலையும் நடக்க விடாமல் தடுக்கும்.

6) இயல்பு நிலையற்ற வேகமான இதயத் துடிப்பு இதயத் துடிப்பு : 

இயல்பற்ற நிலையிலோ அல்லது மிக வேகமாக துடிப்பதனாலோ, இதயக் கீழறைகளும் இயல்பற்ற விதத்தில் சுருங்கும். இதனால் இதயக் கீழறைகள் சுருங்குவதற்கு முன் தேவையான இரத்த அளவை நிரப்ப முடியாமல் போகும். இதனால் அதிக இதய துடிப்பு இருந்தும், இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறும் அளவும் குறையும்.

7) கர்ப்பம் : 

குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறீர்களா? அப்போது இரத்த அழுத்தம் குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கர்ப்பக் காலத்தில் குறைந்த இரத்த அழுத்தம் இருப்பது சகஜம் என்றாலும், சில சிக்கல்களை தவிர்க்க சோதனை செய்து கொள்வது நல்லது.

8) தீவிர தொற்று : 

அழுகச் செய்கின்ற காயங்கள் அல்லது தீவிர தொற்றுக்களால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படலாம். இந்த தொற்று ஏற்பட காரணம் நுரையீரல் அல்லது வயிற்று பகுதியில் இருந்து பாக்டீரியா இரத்த ஓட்டத்தில் நுழைந்துவிடும். நுழைந்த பின் இந்த பாக்டீரியாக்கள் நச்சுத் தன்மையை வெளியிடுவதால், இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்யும்.

9) குறைவான ஊட்டச்சத்து : 

அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான உடல் நலம் வேண்டுமானால், வளமான ஊட்டச்சத்து உடலில் இருக்க வேண்டும். அதில் சிறு குறைபாடு இருந்தாலும் சிக்கல்களை ஏற்படுத்தி குறைந்த இரத்த அழுத்தம் வர காரணமாகும்.

10) சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகள் : 

ஹைப்போ தைராய்டிசம், ஃபாரா தைராய்டு, சிறுநீரகச்சுரப்பி குறைபாடு, குறைந்த இரத்த சர்க்கரை மற்றும் சர்க்கரை நோய் போன்ற உட்சுரப்புப் பிரச்சனைகள் இருப்பதினால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக இத்தகைய நோள்கள் ஏற்படுவதற்கு சுரப்பியிலிருந்து வெளியாகும் ஹார்மோன் சிக்கல்கள் தான் பெரும் காரணம். ஆகவே இத்தகைய நோய்களினாலும் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும்

நரம்பு தளர்ச்சி குணமடைய!



நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு 


செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்
.

வெள்ளி, 13 மார்ச், 2015

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!!


நாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் நிறையத் தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது. ஆனால், சுடுநீரைக் குடிப்பதால் அதைவிட அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வாருங்கள். அது ஏற்படும் மாற்றத்தை நீங்களே கண்கூடாகக் காண்பீர்கள். இப்போது வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.

தொண்டை, மூக்கடைப்புக்கு நல்லது

கடும் குளிர் காலத்தில் நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரக் கூடும். மூக்கு அடைபடும்; தொண்டை கட்டும். இந்தச் சமயத்தில் இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனைகள் உடனடியாகச் சரியாகும்.

நச்சுக்கள் அகலும்

வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

பருக்கள் நீங்கும்

டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெரும்பாலான பெண்களையும், சில ஆண்களையும் பருக்கள் படாத பாடு படுத்தும். எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். பருக்கள் அகலும்; முகமும் பொலிவடையும்.

முடி வளர்ச்சிக்கு சிறந்தது

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.

இரத்த ஓட்டம் சீராகும்

நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் வெந்நீரில் கரைந்து விடும்.

குடல் இயக்கம் அதிகரிக்கும்

இரத்த ஓட்டத்தைப் போலவே குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மலச் சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான சுடுநீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும்.

எடை குறையும்

இன்றைய காலக்கட்டத்தில் அதிக உடல் எடை என்பது பெரும்பாலானவர்களுக்கு சர்வ சாதாரணமாக ஏற்படும் ஒரு குறையாகும். தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான் சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து, எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.

மாதவிடாய் பிரச்சனை குறையும்

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.

மெதுவாகவே வயதாகும்

இந்தக் காலத்தில் சிலருக்கு வேகமாகவே வயதாகி விடும். உடலிலும் சருமத்திலும் தேவையில்லாமல் இருக்கும் நச்சுப் பொருட்கள் தான் இதற்குக் காரணம். வெந்நீர் குடிப்பதால் அத்தகைய நச்சுப் பொருள்கள் விரைவில் வெளியேறிவிடும். இதனால் வேகமாக வயதாவது குறையும்.

வெள்ளி, 6 மார்ச், 2015

வெறும் கால் நடை



வெறும் கால் நடை பழக்கம் கால் வலி மற்றும் பிற வலிகள் நீங்க எவ்வாறு நமக்கு உதவுகிறது என்று பார்ப்போம்.

உங்கள் பாதத்தின் அடியில் உங்கள் உடல் உறுப்புக்களின் உணர்ச்சி நரம்புகள் முடிகின்றன. நீங்கள் இந்த புள்ளிகளை மசாஜ் செய்தால் வலி நிவாரணம் கிடைக்கும். உதாரணமாக இதயத்தில் வலி இருந்தால் இடது காலில் மசாஜ் செய்ய வேண்டும். பொதுவாக இந்த புள்ளிகள் மற்றும் அதை இணைக்கும் உறுப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் அக்குபஞ்சர் பற்றிய ஆய்வுகள் அல்லது உரைநூல்களில் காணக் கிடைக்கின்றன.

கடவுள் மிகவும் அற்புதமாக நம் உடலை வடிவமைத்துள்ளார். அவர் நாம் எப்போதும் இந்த புள்ளிகள் தரையில் படுமாறு நம்மை நடக்க செய்துள்ளார். இவ்வாறு நடக்கும் போது நம் உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்படைகின்றன.

அதிகாலையில் வெறும் காலில் நடப்பது நம் எலும்புகளுக்கும் உடம்பிற்கும் நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, வெறும் காலில் நடக்கும் போது கால் தசைகள் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.



வெயில் காலங்களில் அதிகாலையில் புல்வெளியில் அல்லது இலை தழைகளின் மேல் நடக்கும் போது உடல் குளிர்ச்சி அடைகிறது.

இயற்கை எழில் மிக்க பூங்காக்களில் நடக்கும் போது கால் வலி நீங்க துணைபுரிவதோடு மனமும் இலேசாகிறது.

எனவே தினமும் நடப்போம்!

குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்வது?

ht2316


மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள் சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள்.

சில சமயங்களில் சாய்ச்சல் கூட வரும். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள். பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை,

இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.

தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து 1ஸ்பூன் அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும். துளசி இலைகளை பறித்து நசுக்கி அப்படியே சாறு எடுத்து மருந்துக்கு கொடுப்பார்கள். இப்படி செய்வது தவறு. ஏனெனில் துளசி இலையில் உள்ள மெல்லிய சுனைகள் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சளி ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது.

குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின் உடலையும், காதுகளையும் மூடவேண்டும். குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும்.

பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.

அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும். எனவேபாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அழகான தோற்றம் தரும் கேரட்!

carrots



பழங்களை விரும்பாதவரை காணமுடியாது. எத்தனையோ பழங்கள் இருந்தாலும் கேரட்டிற்கு இருக்கும் மதிப்பே தனிதான். கேரட் கண்களுக்கு நல்லது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். உடம்பின் அனைத்து உட்குழிவுகளிலும் உள்ள சளிப்படலத்தை ஆரோக்கிய நிலையில் வைத்திற்கும்.

பெண்கள் கேரட் விதைகளை தங்களுடைய கர்பத்தின் தொடக்ககாலத்தில் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பப்பையின் சுவர்களில் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்திகருச்சிதைவுக்கு காரணமாகும். நாம் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்றுத்தின்றால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும்.

இதைத்தின்றால் உமிழ்நீர்சுரப்பு அதிகரிக்கும் சீரனத்தை துரிதப்படுத்தும். கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும் எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். கேரட் சூப் வயிற்றுப்போக்கை குனப்படுத்தும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையுடம், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பேருகும்.

புற்றுநோய், ஏலும்புருக்கி, சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட்சாறுடன் பாலும்தேனும் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடேக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் உடல் பொலிவடையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர். பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும்.

குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும்.

ஞாயிறு, 1 மார்ச், 2015

கல்லீரல்



உடல் என்பது அற்புதமாக சிருஷ்டிக்கப்பட்ட பொருளாகும். பல கோடி நரம்புகள், தசைகள், எலும்புகள், இரத்த நாளங்கள் என பிண்ணிப் பிணையப்பட்டதே மனித உடலாகும். உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் தமது பணியைச் சிறப்பாக செய்வதுடன், பிற உறுப்புகளுடன் இணைந்து முழு உடலையும் செயல்படுத்தும் தன்மை மிகவும் சிறப்பானதாகும்.

ஆனால் இன்று பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதனதன் செயல்களை செய்வதில் குறைபாடு ஏற்பட்டு அதனால் உடலானது பல வகைகளில் பாதிக்கப்படுகிறது. இந்த உறுப்புகளின் செயல்பாடுகளையும், அதனால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் கல்லீரல் பற்றி அறிந்து கொள்வோம்.

கல்லீரல்

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 1/4 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் உதரவிதானத்திற்கு கீழே அமைந்துள்ளது.

கல்லீரல் செல்களினால் (Hepatic cells) ஆனது. பல இரத்தக் குழாய்கள் சூழ்ந்துள்ள இதனை சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு இரசாயனத் தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம்.

நாம் உண்ணும் உணவு செரித்து அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் சென்றடைவதற்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களே வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை உற்பத்தி செய்வது கலலீரல்தான்.

பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் அங்கங்கே படிந்து இரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்துவிடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான இரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

பித்த நீர்

பித்த நீர் காரத்தன்மை கொண்டது. கசப்புச் சுவையுடைய இதில் மூன்று வகையான பொருட்கள் உள்ளன.

தண்ணீர் (Water)

பித்த உப்பு (Bile salt)

பித்த நிறமிகள் (Bile pigments)

பித்த நிறமிகள்தான் மலத்திற்கு நிறத்தை தருகின்றன. மலத்தின் நிறம் மாறினாலே உடலில் நோயின் தாக்கம் இருக்கும்.

பித்த உப்பு, கொழுப்பு சத்துக்களை செரித்ததும், செரித்த உணவுச் சத்தை உறிஞ்சி உறுப்புகளுக்கு கொடுப்பதற்கும் (Absorption) உதவுகிறது.

பித்த உப்பானது கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ச்,ஞீ,ஞு - ஓ மற்றும் கால்சியம், செரித்தலுக்கும் உதவுகிறது.

பெருங்குடலைத் தூண்டி சிரமம் இல்லமல் மலம் வெளியேறவும், ஒரு முறை சுரந்த பித்த நீர் தன் வேலையைச் செய்து முடித்தவுடன் மீண்டும் பித்த நீர் சுரக்க கல்லீரல் செல்களைத் தூண்டுவதும் பித்த உப்புகள்தான்.

உணவில் உள்ள மாவுச் சத்துக்கள், புரதச் சத்துக்கள் மற்றும் கொழுப்புச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்குப் பித்த நீர் உதவுகிறது.

உண்ட உணவானது நேரடியாக அதே நிலையில் சிறுகுடலுக்கு சென்று பித்த நீரால் செரிக்கப்பட்டு சத்தாக மாற்றி திசுக்களுக்குச் சென்றடைவதற்குள் அவை பல மாறுதல்களைப் பெற்று இறுதியாக குடலுறுஞ்சிகளால் உறிஞ்சப்படுகிறது. உதாரணமாக மாவுச்சத்துள்ள உணவை நாம் சாப்பிடும்போது அது குளுக்கோஸ் (Glucose) ஆக மாறுகிறது. அந்த குளுக்கோஸ் தேவைக்கு அதிகமாக உள்ளபோது சர்க்கரை நோய் வர வாய்புள்ளது. எனவே தேவைக்கு அதிகமான உள்ள குளுக்கோஸை கல்லீரல் கிளைக்கோஸைனாக மாற்றி தன்னுள் சேமித்து வைத்துக் கொள்கிறது.

பிளாஸ்மா புரதங்களை தயாரிக்கிறது.

உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை உற்பத்தி செய்கிறது. இரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், இரத்த நாளங்களுக்குள் இரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.

இரும்புச் சத்து, வைட்டமின் பி 12, வைட்டமின் ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்கிறது.

நோய்த் தொற்றுதலை எதிர்த்துப் போர்புரிகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

இவ்வாறு உடலுக்கு ஊக்கமும், செயல் வேகமும், கொடுக்கும் கல்லீரல் சில காரணங்களால் பாதிக்கப்படுகிறது.

கல்லீரல் வீக்கம் உருவாக காரணங்கள்

முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், நேரம் தவறி உண்பது, அளவுக்கு அதிகமாக உணவு அருந்துவது.

மது அருந்துவது, புகையிலை, பான்பராக் போடுவது புகை பிடிப்பது. ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது முதலியவற்றால் கல்லீரல் வீக்கமடைகிறது. மேலும் மன அழுத்தம், மனக்கிளர்ச்சி இவைகளாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு வீக்கம் உண்டாகிறது.

கல்லீரலைத் தாக்கும் நோய்கள்

வைரல் ஹெப்பாடிட்டீஸ் (Viral Hepatitis) ஏ, பி, சி, டி, இ என்று பல வகைகள் உள்ளன. இதில் வைரல் ஹெப்பாடிட்டீஸ் பி அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. சைக்ரோஸ் (Cirrhosis of Liver), Cholelithesis, Cholecystitis, Carcinoma of liver, Hepatomegaly.

கல்லீரல் நோயின் பொதுவான அறிகுறிகள்

உடல் களைப்பு, பசியின்மை, அஜீரணக் கோளாறு, குமட்டல், வாந்தி, தலைவலி, மூட்டு வலி (Joint pain), வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். சிறுநீர் சிவப்பு மஞ்சள் நிறமாகவும், மலம் நிறம் மாறியும் வெளியாகும். மலச்சிக்கல் அல்லது பேதி போன்றவை உண்டாகும்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

· அசைவ உணவுகள்,

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள்,

· சோடா உப்பு கலந்த உணவுகள்,

· எளிதில் சீரணமாகாத உணவுகள்,

· வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகள்.

கல்லீரல் பாதிப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

· முறையான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.

· நன்கு சுத்தமான நீரை அருந்தவேண்டும். தினமும் போதிய அளவு நீர் அருந்துவது நல்லது.

· மது, புகைப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

· தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

· மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தும் மூலிகைகள்

கீழாநெல்லி - Phyllanthus amarus

வில்வம் - Aegle marmelos

அத்தி - Ficus racemosa

வேப்பிலை - - - Azadirachta indica

நெல்லி - Emblica officinalis ்

தும்பை - Leucas aspera

துளசி - - Ocimum sanctum

அருகம்புல் - Cynodon dactylon

கல்லீரல் பாதிப்õல் உண்டாகும் காமாலை நோயை குணமாக்க,

நீர்முள்ளிப் பூ,

வேப்பம் பூ,

நெருஞ்சில்,

திரிபலா

சிவதை வேர்

சம அளவு எடுத்து நீரில் இட்டு குடிநீராக காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் கல்லீரல் பாதிப்பினால் உண்டான காமாலை குணமாகும்.

கீழாநெல்லி - 1 கைப்பிடி

சுக்கு - 5 கிராம்

மிளகு - 5 கிராம்

சீரகம் - 5 கிராம்

சோம்பு - 5 கிராம்

இவற்றை எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்ட காமாலை நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும்.

உணவு

உப்பு, புளி நீக்க வேண்டும். அதிக அளவு கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பழங்கள்

பப்பாளி, வாழை, பேரீட்சை, திராட்சை, மாதுளை, கோதுமை, பார்லி கஞ்சி உட்கொள்ளலாம்.

இளநீர், பதநீர், பனை நுங்கு, கரும்புச் சாறு, தேங்காய் பால் அருந்தலாம்.

மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தி, கல்லீரலைப் பலப்படுத்த இந்திய மருத்துவ முறையில் பல மருந்துகள் உள்ளன.

கல்லீரல் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோமாக.