புதன், 4 நவம்பர், 2015

டெங்கு காய்ச்சல்...



டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி ?

தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவில்லை என்றே சொல்லலாம்.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி?

வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.

இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர். ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும். அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம்.


சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாகவும், வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம். அரசு இயந்திரங்களை நம்பாமல், பொதுமக்கள் சுகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்
.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

நோக்கு வர்ம செயல்பாடு!




நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தரியல் கூறுகிறது. இவற்றில் மிக முக்கியமானது பத்து நாடிகளாகும்.

இந்த நாடிகளின் ஊடே பத்து விதமான வாயுக்கள் ஓடுவதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே

பிராணன் - உயிர்க்காற்று
அபாணன் - மலக் காற்று
வியானன் - தொழிற்காற்று
உதானன் - ஒலிக்காற்று
சமானன் - நிரவுக்காற்று
நாகன் - விழிக்காற்று
கூர்மன் - இமைக்காற்று
கிருகரன் - தும்மற் காற்று
தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
தனஞ்செயன் - வீங்கல் காற்று

இந்த வாயுக்கள் நமது நாடிகளின் ஊடே ஓடிக் கொண்டிருப்பதாகவும், அப்படி ஓடும் இந்த வாயுக்கள் நாடிகளின் முடிச்சுகளில் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடங்களையே வர்ம ஸ்தானங்கள் அல்லது வர்ம புள்ளிகள் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரே முடிச்சில் பல வாயுக்கள் சந்திக்கும் போது அவை நுட்பமான வர்ம புள்ளிகளாகின்றன.

இத்தகைய நுட்பமான வர்ம ஸ்தானங்களில் அடி படும் போது அவை உயிராபத்தை விளைவிக்கக் கூடியவை. “படாத இடத்தில் பட்டு பொட்டென போய்விட்டான்” என்கிற பேச்சு வழக்குகள் இந்த நுட்பமான வர்ம ஸ்தானங்களில் படும் அடியினையே குறிப்பிடுகிறது.

இப்படி நுட்பமான வர்ம புள்ளிகளை எந்த ஒரு குருவும் ஆரம்ப நிலையில் கற்றுத் தருவதில்லை. குறைந்தது பன்னிரெண்டு வருட பயிற்சிக்குப் பின்னரே குருவானவர் இதனை அருளுவாராம். அந்த கட்டத்தில்தான் மாணவர் வர்மக் கலைக்குத் தேவையான உடல் லாவகமும், மனவலிமையும், மனப்பக்குவமும் பெற்றவராகி இருப்பாராம்.

இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வாயுக்கள் சந்திக்கும் நுட்பமான வர்ம புள்ளிகளே நோக்கு வர்மத்தில் பயன் படுத்தப் படுகிறது. இந்த புள்ளிகளின் மீது கவனக் குவிப்போடும், தன் முனைப்போடும் பார்வையை செலுத்தும் போது பார்வையின் தீவிரம் பொறுத்து விளைவுகளை உண்டாக்க முடியும் என்கிறார் அகத்தியர்.

பார்வையின் தீவிரம் பொறுத்து ஒருவரை நிலை குலையச் செய்வதில் துவங்கி, அவரை மயக்கமடையச் செய்யவோ அல்லது அவரின் உயிரினை போக்கவோ செய்திட முடியுமாம். இவை தவிர இன்னும் மேம்பட்ட நிலையில் அவரை தன் விருப்பத்திற்கு ஏற்ப இயக்கவும் முடியும் என்கிறார். இதைத்தான் சமீபத்தைய திரைப் படத்தில் காட்சிப் படுத்தியிருந்தனர்.

கீழே உள்ள படத்தில் நமது முகத்தில் உள்ளதாக அகத்தியர் சொல்லும் நோக்கு வர்ம புள்ளிகளை சிவப்புப் புள்ளியால் குறியிட்டுக் காட்டியிருக்கிறேன். இந்த படத்தினை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருத வேண்டுகிறேன். யாரும் ஆர்வ மிகுதியினால் விஷப் பரிட்சைகளில் இறங்கிட வேண்டாம். ஏனெனில் நம்மைப் போன்றவர்களால் இதனை நிச்சயம் கைக் கொள்ள முடியாது. குருமுகமாக முறைப்படியான தொடர் பயிற்சிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளின் ஊடே வளர்த்தெடுக்கப் பட வேண்டியது இந்தக் கலை.

இந்த நோக்கு வர்ம தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் வழிவகைகள் இருக்கின்றனவாம். அவற்றை குருமுகமாகவே அறிவது சிறப்பு என்பதால் அதை இங்கே ஒரு தகவலாக மட்டுமே பதிந்து வைக்கிறேன். தற்போதும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் கேரளத்தின் சில பகுதிகளில் தேர்ந்த வர்மக் கலை ஆசான்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகையவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்வதில்லை. எனவே ஆர்வமுள்ளவர்கள் அவர்களைத் தேடியறிந்து பணிந்து இந்தக் கலையினை பழகிடலாம்.

நம்மிடம் இருக்கும் நூல்கள் நமது தேடலின் பாதையில் வழிகாட்டும் விளக்காக மட்டுமே இருக்க முடியும். அதைத் தாண்டிய நிபுணத்துவத்தை குருமுகமாக மட்டுமே அறியமுடியும்.


மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்.



* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில்வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக்குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்யவேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரைகாத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மனஅழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ்தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டேஇருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்துமகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம்கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்றதூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்கஎழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரியநண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச்செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்துசெயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்துபிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பதுநிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொருவேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைபுத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனேநடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதைஇலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக்காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

பித்தத்திலிருந்து விடுபட!

piththam
பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது.
உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது.
தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் – தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச்சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை:-
  1. பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், இதனிடம் நெருப்பின் குணம் அதிகமாக இருப்பதாலும், நீரின் குணங்கள் குறைவாக இருப்பதாலும், தன் திரவகுணத்தை விட்டுவிட்டு தன்னைச் சார்ந்த வாயு, ஈரத்தன்மை இவற்றின் காரணமாக உடலுக்கு உதவி புரிகிறது. அதாவது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி’ என்று அழைக்கப்படுகிறது. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன்னிருக்கையிலிருந்து கொண்டே, ஊட்டமளிக்கிறது.
  1. ரஞ்சக பித்தம்: இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு அங்குள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது.
  1. ஸாதக பித்தம்: இது இதயத்தை தங்கு மிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தந்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவைகளைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது.
  1. ஆலோசக பித்தம்: இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது.
  1. ப்ராஜக பித்தம்: சருமத்தை உறைவிடமாகக் கொண்டு சருமத்திற்கு ஒருவித ஒளியைக் கொடுத்து அதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இது எண்ணெய் குளியல், நீராடுதல், மேற்பூச்சு இவற்றைப் பக்குவப்படுத்தி ஊட்டமளித்து ஒளியை வெளிப்படுத்துகிறது.
காரம், புளி, உப்புச்சுவை, புலால் உணவு வகைகளில் மீன், கோழி, நண்டு வகையறா, எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், காபி, டீ, பேல்பூரி, பாணிப்பூரி, சமோஸா, பாஸ்தா, நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், கையேந்தி பவனில் விற்கப்படும் சூப், சுண்டல், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்குக் காரணமாகி சுமார் 40 வகையான பித்த நோய்களை ஏற்படுத்துகின்றன. அவை: வருமாறு:-
உடல் முழுவதும் நெருப்பின் அருகில் உள்ளது போன்ற வியர்வையுடன் கூடிய எரிச்சல். உடலில் ஒரு பகுதியில் வியர்வை ஏற்படாமல் உஷ்ணம் தோன்றுதல், உடலில் காட்டுத் தீ போன்ற எரிச்சல், , கண் முதலிய பொறிகளில் எரிச்சல், முகம், உதடுகள்,
வாயின் மேல் பாகம் இவற்றில் எரிச்சல் , உடலின் உள் எரிச்சல், தோலில் தோன்றும் எரிச்சல், தோளில் எரிச்சல், புகைவது போல ஏப்பம் விடுதல், புளித்த ஏப்பம், கடுமையான உஷ்ணம், அதிகமாக வியர்த்தல், உடல் நாற்றம், புலன்களின் அழற்சி, இரத்தம் கருத்து நீற்றுப் போதல், மாமிசம் கருநிறமடைந்து கெட்ட நாற்றம் வீசுதல்,
தோல், அதனுள் உள்ள மாமிசம் இவற்றின் பிளவு, தோலின் உள்ளும், புறமும் வெடிப்பு, இரத்தக்கட்டி, எரிச்சலுள்ள இரத்தக் கொப்புளம், தோலின் மேல் உண்டாகும் வட்டமான தடிப்பு, இரத்த பித்தம், உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல், உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல், ரத்தம் நீல நிறமாக மாறுதல்,
கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம், மஞ்சள் காமாலை, வாயில் கசப்புச் சுவை, வாயில் இரத்தத்தின் நாற்றம், வாயில் கெட்ட நாற்றம், தாகம் அதிகரித்தல், உணவில் போதும் என்ற எண்ணம் தோன்றாமை, வாய் வேக்காடு, தொண்டைக்குள் வேக்காடு, கண் நோய்.
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

திங்கள், 5 அக்டோபர், 2015

நமக்கு நாமே எதிரி



மூளைக்குள்ளே ஓர் உலகம் 
உடலுக்குள்ளே ஓர் ஆலை
தோல் போர்த்திய தேகத்துள்ளே
தொடர்ந்து ஓடும் குருதியோட்டம் 
உருவம் முழுதும் செல்கள் தொகுப்பு
உணர்ந்து பார்த்தால் உருவம் போலி
அழகாய்த் தோன்றும் உருவம் பொய்
அற்புத உடலின் உயிரோட்டம் மெய்
உடலே உயிரை நிதமும் காக்கும் - இதைப்
புரியா துடலை மனிதன் 
உருக்குலைத்து சீரழிப்பான் உண்மை


கருவினுள் உருவாகும் குழந்தை தேடும் உணவை கருத்துடன் தாயும் பகிர்ந்தளிப்பாள். எம்மைக் காக்கவே உடலும் தன்னைத் தயார்படுத்தும். உறுப்புக்களும் தேவைக்கேற்றாற் போல் உருவாக்கப்பட்டிருக்கும். செல்களினாலான உறுப்புக்களும் வௌ;வேறு விதமாகப் படைக்கப்பட்டிருக்கும். 

             சுருங்கிவிரியும் பகுதி மென்மையான செல்களாலும் இதயம் போன்ற பகுதிகள் கடுமையான செல்களாலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. உடல் முழுவதும் தன் ஆட்சியை மேற்கொள்ளும் செல்கள். கண்ணுக்குத் தெரியாது எம்மில் முழுவதுமாகக் காணப்படுகின்றது.

 

உடலில் ஓர் இடத்தில் காயம் ஏற்பட்டால், இரத்தமாய்க் கொட்டிக் கொண்டேயிருக்கும் காயம் நாட்செல்ல குருதிச் சிறுதட்டுக்களால் சுகமாகி மீண்டும் அப்பகுதி வழமை நிலைக்குத் திரும்புகின்றதே. அடிபட்ட இடத்தில் இறந்த செல்களுக்குப் பதிலாக வேறு செல்கள் பிரிவடைந்து உடனடியாக காயம் முழுவதையும் மூடிக்கொள்ளும். மூடிக் கொண்டதும் உடல், செல்களுக்கு பிரியும் வேலையை நிறுத்தும்படி உத்தரவிட செல்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வேலையை நிறுத்தும் காயமும் மாறிவிடும். ஆட்டி வைப்பவனும் ஆடுபவனும் உடலுள் இருக்க  நாமோ வெளியே மருத்துவம் தேடி ஆடிக் கொண்டிருக்கின்றோம். 75 முதல் 100 டிரில்லியன் செல்கள் எமது உடலுள் ஆட்சி செய்கின்றன.    எமது செல்களில் கிட்டத்தட்ட 3000 விதமான புரோட்டீன்கள் உண்டு. இவை இரத்தத்தில் கலக்கக் கூடாது. அப்படிக் கலந்தால், இரத்தத்திலுள்ள புரோட்டீன்கள் சமீபாடடையாது. இந்நிலையில் செல்கள் தமக்குள் இருக்கும் புரொட்டின் உடலினுள் சேரவிடாது தற்கொலை செய்து கொள்ளும். 

ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா. ஆனால் இதுவே உண்மை. 



மூக்கினுள் நுழைய எத்தனிக்கும் கிருமிகளை மணிக்கு 100 மைல் வேகத்துடன் உடல் வெளியகற்றும். இதன் மூலம் 100,000 கிருமிகள் உடலிலிருந்து வெளியேறும். ஆனால் நாமோ வெட்கப்பட்டு மூக்கை மூடுகின்றோம். ஆனால் தும்மலைத் தடுத்தால் உயிர் போகும் ஆபத்தும் உண்டு. அதனாலேயே ஒருவர் தும்மினால், 100 என்று தமிழரும் Gesundheit   என்று ஜேர்மனியரும் God bless you என்று ஆங்கிலேயரும் சொல்கின்றார்கள். 

பழுதடைந்த உணவுகளை நாம் உட்கொண்டுவிட்டால் உடலானது வாந்தியாக வெளியகற்றிவிடும்.
தேவையான உணவுகளை நாம் உட்கொண்டால் அதை சத்தாக மாற்றி தேவையான உடலுறுப்புக்களுக்கு அனுப்பும். இக்கரிசனை எம்முடலுக்கிருக்க நாமோ எதிலும் அக்கறையின்றி  சாக்கடையினுள் அழுக்கைப் போடுவதுபோல் கண்டதையும் உண்டு உடலைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றோம்.

                     பேரிடிபோல் சத்தம் வரவே எம் கைகள் எமையறியாது காதுகளை ஏன் இறுகப் பொத்துகின்றன.








காதுவழி செல்லும் ஒலி செவிப்பறையைத்தாக்குவதுடன் அதனூடு சென்று உடலுக்கும் ஊறு விளைவிக்கின்றது. அத்துடன் இதயநரம்புகள் சார்ந்த இதயப்பாதிப்பும் ஏற்படுகின்றது. ஓரே ஒரு தடவை எட்டுமணி நேரத்துக்கு மிகையான சத்தம் கூடிய கூடிய சூழ்நிலையில் இருந்தால், இரத்தஅழுத்தமானது அழுத்தத்தில் ஐந்து முதல் பத்து புள்ளிகள் கணிசமான ஏற்றத்துடன் அயர்வு ஏற்படும். அத்துடன் நரம்புகள் இறுகவதால் இரத்த அழுத்தமும் கூடுகின்றது. இதனால், இதயக்கோளாறுகள் ஏறபடுகின்றன.  ஆனால், சிந்திக்கின்றோமா? களியாட்டங்கள், வைபவங்கள், கொண்டாட்டங்கள் அனைத்திலும் காதுகிழிய ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிட்டு இதுவே மகிழ்ச்சி என்று ஆரவாரம் செய்கின்றோம். 


                 எம்மைச் சுற்றி, எம்மை நோக்கி வரத் துடிக்கும் நோய்க்கிருமிகள் உடலினுள் புகுந்துவிட்டால் உடலிள்ளே வாள், கத்தி ஏந்தி போருக்கு நிற்கும் இரத்தஅணுக்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எம்மைக் காக்க எமக்குள்ளே ஓர் நண்பன் இரத்த அணுக்களினுள் வெண்குருதி சிறுதுணிக்கையே இத்தொழிலை எமக்கடிமையாய்ச் செய்கின்றது. முதலில் உள்வராமல் தடுக்கும். வந்துவிட்டால் உடலைத் தாக்காமல் பாதுகாக்கும். அது ஏந்தும் வாள், கத்தி யாதென்று தெரியுமா? முதலில் "பகோசைட்". இவை பக்டீரியா முதலில் இரத்தத்தால் பக்குவமாக்கும். பின் அழிக்கும். இரத்தத்தால் பக்குவமாக்கும் பொருள் யாதென்று தெரியுமா? அதுவே ஆப்ஸனின்.  பார்த்துப் பார்த்து பணி செய்ய பக்குவமாய் உடல் எமக்குள் தொழிலாளியாய் இருக்க நாமோ சூழலைக் கெடுக்கின்றோம். ஆலைகள் அமைக்கின்றோம். இயந்திர மயத்தில் இ.றப்பதற்கு வழி தேடுகின்றோம். 
               
             எங்கிருந்தோ ஆபத்து வரும்போது முதலில் நம் தலையைத் தானே இரு கரங்களினாலும் பொத்திப் பிடிக்கின்றோம். எம்மை அறியாமலே அதன் அவசியத்தை நாம் உணர்கின்றோமா இல்லையா? 

மூளையே நமது தலைமையகம். அதன் ஆட்சியில்தான் அனைத்தும் அடக்கம். மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இரத்தஓட்டம் தேவையான அளவு ஒட்சிசனை மூளைக்குக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் மூளையும் தொழிற்படமுடியும். நாமென்ன செய்கின்றோம். இரத்தோட்டம் அதிகரிக்கச் செய்யும் உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்கின்றோமா? கணனி முன் இருந்து காலத்தைக் கழிக்கின்றோம். 
           
                         மூளையின் அவசியம் கருதி ஒரு பாதுகாப்புக் கவசத்தினுள்ளேயே அது அமைக்கப்பட்டிருக்கும். இக்கவசத்திற்கும்  மூளைக்குமிடையே ஒரு நீர்த் தன்மை (Cerebrospinal Fluid) பரவி இருக்கும். இது ஓடுகின்ற போதும் நடக்கின்ற போதும் அதிர்வு ஏற்படாமல் பாதுகாக்கும். மூளை தொழிற்படும் போது ஏற்படுகின்ற இரசாயணக்கழிவுகளை இந்த Cerebrospinal Fluid ஏ உறக்கத்தின்போது மூளைச் செல்களினூடாக ஊடுருவிப்போய் வெளியகற்றுகின்றது. பிற உறுப்புக்களுக்காகத் தொழிற்படும் மூளை தனக்காக ஓய்வெடுத்து தன்னிலுள்ள நச்சுத் தன்மையை வெளியகற்றும் நேரம் உறக்கமல்லவா? ஆனால், நாம் என்ன செய்கின்றோம்.  இரவிரவாகக் கண்விழித்து தூக்கத்தைக் கெடுத்து chat  பண்ணுகின்றோம். Party கொண்டாட்டங்கள் தொலைக்காட்சி என்று உறங்கும் நேரத்தைத் தொலைக்கின்றோம். 

                             ஏதும் பறந்தாலோ, கையை யாரும் முன்னே அசைத்தாலோ, மனதைக் கெடுக்கும் காட்சி ஏதும் கண்டாலோ முதலில் மூடுவது எம் கண் இமைகளே. கண்ணையும் கருத்தையும் பாதுகாக்க கண்இமை கைகொடுக்க கண்ணீர் துணையாக, நாமென்னவோ பார்க்கக் கூடாதவற்றைப் பார்த்து கணனி ஒலியின் பாதிப்பை உணர்ந்தும் அதற்கேற்ப சொல்லப்பட்ட தூரத்தில் கணனியை வைத்து வாசிக்காது, கண் இமைத்து வாசிக்காது, கண்களை காயவைத்து கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றோம். 

             செய்வதெல்லாம் செய்து விட்டு நேர்த்திக்கடனென்றும் நேர்மையற்ற மருத்துவரென்று, போதாத காலமென்றும், பொல்லாத உலகென்றும் அடுத்தவரைக் குறைகூறி அழிவது நாமே. 
                
                  இப்போது சொல்லுங்கள் எமக்கு யார் எதிரி?

எச்சரிக்கை ரிப்போர்ட்.. – ஒய்ட்னர் தரும் போதை



அன்றாடம் அலுவலகங்களில்,அவ்வப்போது வீடுகளில் பயன்படும் பொருளை இளைஞர்கள், பள்ளிக்கூடச் சிறுவர்கள் போதைக்காக எடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.


இந்த பகீர் தகவலின் பின்னணியில் இருக்கும் அந்தப் பொருள்... ‘ஒயிட்னர்’. எழுத்துக்களில் தவறு இருந்தால், அவற்றை அழிக்கப் பயன்படுவதுதான் இந்த ‘ஒயிட்னர்.’...


‘‘பொதுவாக பதின்மூன்று வயதுக்கு மேற்பட்ட வளர் இளம் பருவத்தினர் நண்பர்கள் மூலம் இதனைத் தெரிந்துகொள்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு போதை உணர்வு பற்றியெல்லாம் தெரியாது. மாறாக, மூக்கருகே வைத்து முகரும்போது,ஒருவித மயக்கம் வருவது போல் தோன்றும். அவ்வளவுதான்.

நகங்களில் போடும் ‘பாலிஷ்’ கெட்டியாக ஒட்டிக் கொண்டால், அதன்மீது ‘ஒயிட்னர்’ வைத்தால் போதும். ஒரு சில நொடிகளில் ‘பாலிஷ்’ காணாமல் போய், நகங்கள் பளப ளக்கும். இதற்கு ‘ஒயிட்னரி’ல் இருக்கும் ‘டொலீன்’ என்கிற ரசாயனம்தான் காரணம். அதோடு ‘டிரை குளோரோ எதிலீன், ‘புரோமோ புரோபேன்,’’ ‘மெதில் பென்ஸீன்’ என் கிற சேர்மங்களும் சேர்ந்துகொள்வதால், ‘ஒயிட்னர்’ கொடிய விஷமாக மாறுகிறது. மூக்கருகே கொண்டு செல்லும்போது மயக்கம், போதை வருவதற்கும் இதுதான் அடிப்படை. அந்த மயக்கம் சில மணிநேரம் வரை நீடிக்கும் ஆபத்து உண்டு!’’ என்று சொல்லும் அந்த சமூக ஆர்வலர், அதனால் பள்ளிச் சிறுவர்களை பெற்றோர் கண் காணிப்பது அவசியம்குறைந்த விலை,எளிதில் கிடைப்பது உள்ளிட்ட காரணங்களால், பயன்படுத்துபவர்கள் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வராது. அன்றாடம் வீட்டுப் பாடங்கள் எழுதும்போது தவறுகள் வந்தால் எளிதில் அழிப்பதற்குத் தேவை. அதனால் ‘ஒயிட்னரை’ தவிர்க்கவும் முடியாது.

‘‘சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் இளைஞர்களிடம் இத்தகைய பழக்கம் அதிகரித்து வருவது உண்மை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு முறை ‘ஒயிட்னரை’ முகரும் எண்ணம் வரும். தொடர்ந்தால் போச்சு. அடிமையாகிடுவாங்க. சிலர் பெட்ரோல், காபித்தூள், தேயிலை மாதிரி பொருட்களை முகர்வது உண்டு. அதனால் வரும் பாதிப்புகள் குறைவு. ஆனால் ‘ஒயிட்னர்’ அப்படி அல்ல. முகரும்போது நேராக மூளை செல்களைத்தாக்கும். அதனால் போதை ஏற்படும். இந்த வகை பாதிப்பு ஏற்பட்டவர்கள் பலரும் என்னிடம் சிகிச்சைக்காக வருவது உண்டு!’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல மனநல மருத்துவ நிபுணர் லட்சுமி விஜயகுமார்.

சரி. ஒயிட்னர் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் வரும்? பொது மருத்துவர் செல்வராஜனிடம் கேட்டோம்.

‘‘ஒயிட்னரில் ‘ஆல்கஹால்’ உண்டு. போதை ஏற்பட அதுதான் காரணம். மூச்சுத் திணறல் முதல் மூளை செயலிழப்பு வரை பாதிப்புகள் வரும் ஆபத்து உண்டு!’’ என்கிறார்.

சிறுவர்களிடம் ஒயிட்னர் பயன்படுத்தும் பழக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?என்பது குறித்து பிரபல குழந்தை மருத்துவர் பிரேம் சேகரிடம் கேட்டோம். ‘‘நீண்டநாட்கள் பயன்படுத்தினால் நரம்புமண்டலம் பாதிக்கும். உறுப்புகள் செயலிழக்கும்!’’ என்கிறார் எச்சரிக்கை கலந்த குரலில்!.

பாதிப்புகள் என்னென்ன?

நுரையீரல் அழற்சி, ஞாபகசக்தி குறையும்,, பேசுவதில் சிரமம்.முகர்ந்தால் ஆபத்து,ஒருமுறை ‘ஒயிட்னரை’ முகர்ந்தால் சுமார் நான்கு முதல் பத்து மணி நேரம் வரை போதை இருக்குமாம். பைக்குள் வைத்து எளிதில் மறைத்து எடுத்துச் செல்ல முடியும் என்பதால், பெற்றோர் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம் -Thanks : Kumudham.

எனவே வீட்டில் இருக்கும் பெற்றோர் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகளின் நடவடிக்கைகளை எப்போதும் கண்கானைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.கஷ்டப்பட்டு பிள்ளைபெறுவதைவிட இன்றுபிள்ளைகள் வளர்ப்பு மிகப்பெரிய சுமையாகத்தான் தோன்றும். ஆனால் இதைப் பார்த்தால் நம் குடும்பம வீனாகித்தான் போகும். எனவே பேறுகாலத்தில் பெரும் கஷ்டத்தை கொஞ்சம் நினைத்தால் இது ஒரு பெரிய விசயமில்லைங்க.

சர்க்கரை என்கிற ஓர் இனிய எதிரி


போதை பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இவற்றின் ஒரே வித்தியாசம் சர்க்கரை அங்கீகரிக்கப்பட்ட பொருளாக உள்ளது.

சர்க்கரை உடலில் அதிகமாக சேர்ந்து பின்னர் இன்சுலின் சுரப்பு பாதிப்பால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த சர்க்கரை வியாதி 2000 ஆம் ஆண்டில் உலகளவில் 17 கோடி பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் என எச்சரிக்கப்படுகிறது. இதுவே இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் 3 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 2030 ஆம் ஆண்டில் 8 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

சராசரியாக ஒரு மனிதன் வருடம் ஒன்றிற்கு 80 கிலோ அளவிற்கு சர்க்கரையை எடுத்து கொள்கிறான். மனிதனின் வாழ்க்கையில் மெல்ல ஆக்ரமிக்கும் இந்த சர்க்கரை எவ்வாறு ஹெராயின் போன்ற போதைபொருளோடு ஒத்து போகிறது என பார்ப்போம். பாப்பி என்ற ஒரு வகை செடியில் இருந்து ஓபியம் என்ற பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. அது பின்னர் மார்பின் ஆக மாற்றப்படுகிறது. மேலும் அது சுத்திகரிக்கப்பட்டு ஹெராயின் என்ற போதைபொருளாக மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் இது வலி நிவாரணி ஆக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் அது படிப்படியாக போதைபொருள் பயன்பாட்டுக்கு உலகை கொண்டு சென்று விட்டது.

சர்க்கரையும் அதுபோல தான். கரும்பில் இருந்து பெறப்படும் சாறு பின்னர் மொலஸ்ஸஸ் என்ற பொருளாக மாற்றப்படுகிறது. பின்னர் மேலும் மேம்படுத்தப்பட்டு பிரவுன் சுகர் மற்றும் வொய்ட் சுகர் என்ற இரு வேறு பொருள்களாக பெறப்படுகிறது. இந்த வெண்மை நிற படிக வடிவம் பெற்ற சர்க்கரை (வொய்ட் சுகர்) மனிதனுக்கு வேண்டிய எந்தவித சத்துள்ள பொருளையும் தன்னுள் கொண்டிருப்பதில்லை. இது உடலுக்குள் செல்லும் போது அதனை எவ்வாறு எடுத்து கொள்வது என்பதில் வயிற்றுக்குள் சிக்கலான போராட்டமே நடைபெறுகிறது.

பழக்கவழக்கத்திற்கு அடிமையாதல்


போதை பொருளான ஹெராயின் எடுத்து கொள்ளப்பட்ட உடனேயே அது தீவிரமாக செயல்பட ஆரம்பிக்கிறது. அதன் துகள்கள் உட்கொண்ட பின் விரைவாக செயல்புரிந்து கிளர்ச்சி நிலையினை அடைய செய்கிறது. சர்க்கரை உட்கொள்ளும் போது அது மெதுவாகவே செயல்புரிகிறது. உடலில் கொழுப்பு சத்து தேவைப்படும் வரை கல்லீரலில் சர்க்கரை பொருள் சேமித்து வைக்கப்படுகிறது. மற்ற போதைபொருள் போன்றே இதுவும் நம்மை அந்த பழக்கத்திற்கு அடிமையாக செய்கிறது. சுமார் 95 சதவீத மக்கள் சர்க்கரை பயன்பாட்டில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் என திட்டமதிப்பீடு செய்துள்ளனர்.

உறுப்புகளின் பாதிப்பு

ஹெராயின் போதைபொருள் நுரையீரல் மற்றும் இதயம் ஆகியவற்றை விட மூளையையே அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. பெரும்பாலானவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயன்று மேலும் அதிகமாக அடிமையாகும் நிலையே காணப்படுகிறது. சர்க்கரை மெதுவாகவே தன் வேலையை செய்கிறது. ஆனால் அதன் பாதிப்பின் தன்மை மிக அதிகமாகவே காணப்படுகிறது. சற்று அதிகமாக எடுத்து கொண்டால் அதன் பாதிப்பு உடலில் பலமாகவே எதிரொலிக்கிறது. இத்தகைய தன்மையினால் ஹெராயினை காட்டிலும் அதிக தீமை வாய்ந்ததாகவே இது கருதப்படுகிறது.

மிக அதிக அளவாக 8 தேக்கரண்டி சர்க்கரை எடுத்து கொள்ளுதல் போதுமானது என பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் சர்க்கரையின் அளவு எப்பொழுதும் அதிகமாகவே காணப்படுகிறது. காலையில் குடிக்கும் காபி, மதியம் எடுத்து கொள்ளும் சாக்லேட் மற்றும் இரவில் ஒரு வெண்ணிலா ஐஸ் கிரீம் என நம்மை அறியாமலேயே அளவுக்கதிகமான சர்க்கரையை மறைமுகமாக எடுத்து கொள்கிறோம்.

பதப்படுத்தப்பட்ட சர்க்கரையில் சுக்ரோஸ் என்ற வேதிபொருள் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. இந்த சர்க்கரை பொருள் உடலின் செயல்பாட்டுக்கு அவசியமில்லாத போது வயிறு, தொடை, மார்பு போன்ற இடங்களில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் அந்த இடங்கள் நிரப்பப்படும் போது அவை கல்லீரல் மற்றும் இதயம் போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளில் சேர ஆரம்பிக்கின்றன. மேலும் அது இரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.
எனவே இன்சுலின் சுரப்பு அதிகரிக்கப்படுகிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடலின் பி.எச். சமன்பாட்டினை (அமில மற்றும் கார நிலைகளின் சமன்பாடு) வெகுவாக பாதிக்கிறது. மேலும் அமில நிலையை உடலில் அதிகரிக்கிறது.

குறிப்பாக உற்பத்தி செய்யப்படும் பைருவிக் அமிலம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாகும். இது நம் உடலின் அடிப்படை அமைப்பான செல் அமைப்பை பாதிக்கிறது. அளவுக்கதிகமான அமில தன்மை உடலின் எடையை அதிகரிக்க செய்கிறது. மற்றும் உடலில் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்த அமில தன்மையை சமன் செய்ய உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம் என்ற வேதிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பற்களில் பாதிப்பு, வலு குறைந்த பற்கள் மற்றும் எலும்பு தொடர்பான ஆஸ்டியோபோரசிஸ் போன்ற வியாதிகள் ஏற்பட ஏதுவாகின்றன.