நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தரியல் கூறுகிறது. இவற்றில் மிக முக்கியமானது பத்து நாடிகளாகும்.
இந்த நாடிகளின் ஊடே பத்து விதமான வாயுக்கள் ஓடுவதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே
பிராணன் - உயிர்க்காற்று
அபாணன் - மலக் காற்று
வியானன் - தொழிற்காற்று
உதானன் - ஒலிக்காற்று
சமானன் - நிரவுக்காற்று
நாகன் - விழிக்காற்று
கூர்மன் - இமைக்காற்று
கிருகரன் - தும்மற் காற்று
தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
தனஞ்செயன் - வீங்கல் காற்று
இந்த வாயுக்கள் நமது நாடிகளின் ஊடே ஓடிக் கொண்டிருப்பதாகவும், அப்படி ஓடும் இந்த வாயுக்கள் நாடிகளின் முடிச்சுகளில் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடங்களையே வர்ம ஸ்தானங்கள் அல்லது வர்ம புள்ளிகள் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரே முடிச்சில் பல வாயுக்கள் சந்திக்கும் போது அவை நுட்பமான வர்ம புள்ளிகளாகின்றன.
இத்தகைய நுட்பமான வர்ம ஸ்தானங்களில் அடி படும் போது அவை உயிராபத்தை விளைவிக்கக் கூடியவை. “படாத இடத்தில் பட்டு பொட்டென போய்விட்டான்” என்கிற பேச்சு வழக்குகள் இந்த நுட்பமான வர்ம ஸ்தானங்களில் படும் அடியினையே குறிப்பிடுகிறது.
இப்படி நுட்பமான வர்ம புள்ளிகளை எந்த ஒரு குருவும் ஆரம்ப நிலையில் கற்றுத் தருவதில்லை. குறைந்தது பன்னிரெண்டு வருட பயிற்சிக்குப் பின்னரே குருவானவர் இதனை அருளுவாராம். அந்த கட்டத்தில்தான் மாணவர் வர்மக் கலைக்குத் தேவையான உடல் லாவகமும், மனவலிமையும், மனப்பக்குவமும் பெற்றவராகி இருப்பாராம்.
இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வாயுக்கள் சந்திக்கும் நுட்பமான வர்ம புள்ளிகளே நோக்கு வர்மத்தில் பயன் படுத்தப் படுகிறது. இந்த புள்ளிகளின் மீது கவனக் குவிப்போடும், தன் முனைப்போடும் பார்வையை செலுத்தும் போது பார்வையின் தீவிரம் பொறுத்து விளைவுகளை உண்டாக்க முடியும் என்கிறார் அகத்தியர்.
பார்வையின் தீவிரம் பொறுத்து ஒருவரை நிலை குலையச் செய்வதில் துவங்கி, அவரை மயக்கமடையச் செய்யவோ அல்லது அவரின் உயிரினை போக்கவோ செய்திட முடியுமாம். இவை தவிர இன்னும் மேம்பட்ட நிலையில் அவரை தன் விருப்பத்திற்கு ஏற்ப இயக்கவும் முடியும் என்கிறார். இதைத்தான் சமீபத்தைய திரைப் படத்தில் காட்சிப் படுத்தியிருந்தனர்.
கீழே உள்ள படத்தில் நமது முகத்தில் உள்ளதாக அகத்தியர் சொல்லும் நோக்கு வர்ம புள்ளிகளை சிவப்புப் புள்ளியால் குறியிட்டுக் காட்டியிருக்கிறேன். இந்த படத்தினை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருத வேண்டுகிறேன். யாரும் ஆர்வ மிகுதியினால் விஷப் பரிட்சைகளில் இறங்கிட வேண்டாம். ஏனெனில் நம்மைப் போன்றவர்களால் இதனை நிச்சயம் கைக் கொள்ள முடியாது. குருமுகமாக முறைப்படியான தொடர் பயிற்சிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளின் ஊடே வளர்த்தெடுக்கப் பட வேண்டியது இந்தக் கலை.
இந்த நோக்கு வர்ம தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் வழிவகைகள் இருக்கின்றனவாம். அவற்றை குருமுகமாகவே அறிவது சிறப்பு என்பதால் அதை இங்கே ஒரு தகவலாக மட்டுமே பதிந்து வைக்கிறேன். தற்போதும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் கேரளத்தின் சில பகுதிகளில் தேர்ந்த வர்மக் கலை ஆசான்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகையவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்வதில்லை. எனவே ஆர்வமுள்ளவர்கள் அவர்களைத் தேடியறிந்து பணிந்து இந்தக் கலையினை பழகிடலாம்.
நம்மிடம் இருக்கும் நூல்கள் நமது தேடலின் பாதையில் வழிகாட்டும் விளக்காக மட்டுமே இருக்க முடியும். அதைத் தாண்டிய நிபுணத்துவத்தை குருமுகமாக மட்டுமே அறியமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.