ஆக்சிஜன், குளுக்கோஸ் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களுக்கும் கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறது ரத்தம். திசுக்கள் வெளியிடும் கழிவுகளைச் சுமந்து சென்று நச்சுக்கள் உடலில் சேரவிடாமல் வெளியேற்றவும் உதவுகிறது. விஞ்ஞானம் எவ்வளவு வளர்ச்சியடைந்த போதும், ரத்தத்தின் வேலைகளைச் செய்யக்கூடிய ஒரு திரவத்தை, இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
யாருக்கு ரத்தம் தேவை ?
உலகம் முழுவதும் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு ரத்தம் அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும். விபத்தில் மனிதர்கள் உயிரிழப்பதற்கு முக்கியக் காரணம் ரத்த சேதமாகும். உடனடியாக இந்த இழப்பைச் சரிசெய்வதன் மூலம், உயிர் காக்கப்படும்.
அறுவைசிகிச்சை செய்யும்போது ரத்த இழப்பு ஏற்படும். எனவே புதிய ரத்தம் உட்செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.
பிரசவ கால ரத்த இழப்பு (குழந்தை பிறந்த பின் கருப்பை சுருங்காமல் இருப்பது).
தலசீமியா நோயாளிகளுக்கு.
ரத்த சோகை உள்ளவர்களுக்கு.
யார் ரத்த தானம் செய்யலாம்?
18 வயது முதல் 65 வயதுடையவர்கள்.
எடை 45 கிலோவுக்கு மேல்.
ஹீமோகுளோபின் அளவு 12.5 கி/டி.எல் மேல் உள்ளவர்கள்.
ரத்த அழுத்தம் இதயம் விரிவடையும்போது (Diastolic) 100/60 முதல் இதயம் சுருங்கும் போது (Systolic) 150/100 வரை உள்ளவர்கள்.
தொடர்ந்து தானம் செய்யும் கொடையாளர்கள் 3 மாத இடைவெளியில் தானம் செய்யலாம்.
யார் ரத்ததானம் செய்யக்கூடாது?
ஒரு வார காலத்துக்குள் சளி, காய்ச்சல் இருப்பவர்கள்.
ஆறு மாதங்களுக்குள் பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள். மற்றும் மூன்று மாதங்களுக்குள் சிறிய அளவில் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள்.
மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சல் குணமான மூன்று மாதம் வரையிலும் ரத்த தானம் செய்ய வேண்டாம்.
மஞ்சள்காமாலை சிகிச்சை முடிந்து ஒரு வருடத்துக்கு முன்னதாக செய்யக் கூடாது.
பால்வினை நோய், ஹெச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோர்.
மாதவிடாய்க் காலங்களிலும், கருவுற்றிருக்கும் போதும், தாய்ப்பாலூட்டும்போதும் பெண்கள் ரத்ததானம் செய்யக் கூடாது.
சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பகுதியில் ஏற்பட்ட பிரச்னைக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், ரத்த உறைதல் குறைபாடு உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
மது அருந்தியவர்கள்.
சமீபத்தில் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டவர்கள்.
எங்கு ரத்ததானம் செய்ய வேண்டும்?
அரசு ரத்த வங்கிகள்.
அரசு அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகள்.
அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் வங்கிகள் நடத்தும் ரத்ததான முகாம்கள்.
எவ்வாறு ரத்த தானம் பெறப்படுகிறது?
முதலில் கொடையாளியின் பெயர், முகவரி, ரத்த வகை பதிவுசெய்யப்படுகிறது.
கொடையாளியின் மருத்துவக் குறிப்புகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள், தாக்கியுள்ள நோய்கள் முதலியவை கேள்வி,பதில் மூலமாக பதிவுசெய்யப்படுகின்றன.
ரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளியின் எடை, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் அளவு பரிசோதிக்கப்பட்டு, அதன் முடிவுகளைப் பொறுத்தே ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஒவ்வொரு கொடையாளிக்கும் தனித்தனி ஊசி செலுத்தித்தான் ரத்தம் பெறப்படும். எனவே, நோய்த்தொற்று பயம் வேண்டாம்.
ரத்தக் கொடையாளிகளுக்கு ரத்தம் கொடுத்தவுடன், புத்துணர்ச்சி பெற குளுக்கோஸ், குளிர்பானங்கள் வழங்கப்படும். இவற்றை நிச்சயம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு முறை ரத்ததானம் செய்ய,அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.
ரத்த தானம் செய்வதால் என்ன நன்மை?
மாரடைப்பு வருவது குறைகிறது.
புதிய ரத்த அணுக்கள் உருவாகின்றன.
ஒருமுறை ரத்த தானம் செய்வதால், 500 கலோரிக்கும் மேலாக எரிக்கப்படுகிறது.
உடலில் அதிகமாக உள்ள இரும்புச்சத்து வெளியேற்றப்படுகிறது.
ஒருமுறை ரத்த தானம் செய்வதன் மூலம் நான்கு உயிர்களைக் காப்பாற்ற இயலும்.
ரத்த தானம் சில தகவல்கள்
கார்ல் லாண்ட்ஸ்டெயினர் (Karl landsteiner) என்பவர்தான் ரத்தத்தில் ஏ, பி, ஏபி, ஓ என்று நான்கு வகைகள் உள்ளன என்று 1901 ஆம் ஆண்டு நிரூபித்தார்.
ஒரு முறை பெறப்பட்ட ரத்தம், சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டு அணுக்கள், கிரையோ பிரிசிபிடேட் (Cryo Precipitate) என நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டு, நான்கு பயனாளிகளுக்குச் செலுத்தப்படும்.
சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும், தட்டு அணுக்கள் ரத்தம் உறைவதற்கும், பிளாஸ்மா தீக்காய சிகிச்சைக்கும் பயன்படுகின்றன.
ஓ நெகடிவ் ரத்தம்தான் மிகவும் அரிதானது, பி(பாசிடிவ்) பிரிவு ரத்தம் எளிதில் கிடைக்கக் கூடியது.
ரத்த தானம் கொடுப்பதற்கு முன்னும் கொடுத்த பின்னரும் நிறைய சாப்பிடவேண்டும், ரத்த தானத்துக்குப் பிறகு, நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும், எடை தூக்கக் கூடாது, வேலை செய்யக் கூடாது போன்றவை எல்லாம் தவறான நம்பிக்கைகளே.
ரத்த தானம் கொடுத்த மறுநாளே வழக்கமான வேலைகளை தாராளமாக செய்யலாம்.
18 வயதில் ரத்தம் கொடுக்கத் தொடங்கி, 3 மாதங்களுக்கு ஒருமுறை 60 வயது வரை ரத்தம் கொடுத்தால் 500 உயிர்களை ஒருவரால் காப்பாற்ற முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.