ஞாயிறு, 24 மே, 2015

மன அழுத்தம்


குடும்பம், குழந்தை, வேலை, பொறுப்பு, பொருளாதாரச் சிக்கல் போன்ற பல பிரச்னைகள் பல கோணங்களிலிருந்து நம்மைத் துரத்துகின்றன. பெட்ரோல் இல்லாத வண்டியைப் போலவும், பேலன்ஸ் இல்லாத மொபைல் போன் போலவும் நம்மை மாற்றிவிடுகின்றன. இந்த 10 கட்டளைகளைக் கடைப்பிடித்தால் பறந்துவிடும் மன அழுத்தம்.
உங்களால் மட்டுமே மகிழ்ச்சியை உருவாக்க முடியும். அது எந்த வகையில், எப்படி என்கிற விடையும் உங்களுக்குத் தெரியும். விளையாட்டு, பயணம், ஒவியம், இசை, தோட்டம், வாசிப்பு, குழந்தைகள் என, எதில் உங்கள் மகிழ்ச்சியின் சாவி மறைந்து உள்ளது எனக் கண்டுபிடியுங்கள்.
செய்யும் வேலை, தங்கியிருக்கும் வீடு, உடன் வாழ்பவர்கள், எதிர்கொள்ளும் நபர்களை முதலில் புரிந்துகொண்டு, நல்ல சூழலை உருவாக்கிட முயற்சி எடுங்கள். எதிர்மறை சிந்தனையாளர்களைத் திருத்துவது, உங்களின் வேலை இல்லை. விரும்பத்தகாத சூழலையும் நபர்களையும் விட்டு விலகுவது, பல விதங்களில் நன்மைகளைத் தரும்.
மறதி, சில நேரங்களில் நல்லது. உங்களின் பிரச்னையை மறக்க, மறதிக்கு அனுமதி கொடுங்கள். பிரச்னைகளை நினைத்து, அடிக்கடி சிந்தித்தால், அவை வலுப்பெறும். பிரச்னைக்கான தீர்வுகளை அலசுவதே புத்திசாலித்தனம்.
மாறுபட்ட சிந்தனைகளும், விசாலமான இதயமும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் முன்பு, நம்மிடம் உள்ளதா எனச் சரிபார்த்து, திருத்திக்கொள்ளுங்கள்.
உங்களை அழுத்தும் சூழலையும் நபர்களையும் சகிப்புத்தன்மைகொண்டு விரட்டலாம். முடியாத பட்சத்தில், சிரிப்பு, புன்னகை, தைரியம், பொறுமை, தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள், அறிவு போன்ற மகத்தான ஆயுதங்களைக் கொண்டு, அந்த சூழலை வீழ்த்தலாம்.
இலக்கை எட்டும் பயணத்தில் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்திக்க நேரிடும். இதில், தோல்வியைக் கண்டு துவண்டுபோகாமல், அடுத்து வரப்போவது மாபெரும் வெற்றி என்ற நேர்மறை எண்ணத்தை மனதில் விதையுங்கள்.
மனதை லேசாக்க வேடிக்கையான வீடியோக்களைப் பாருங்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பாருங்கள். நேசிக்கும் மனிதர்களோடு நேரத்தைச் செலவழியுங்கள். பிடித்தமான உணவை ரசித்து ருசிக்கையில், மகிழ்ச்சி தரும் உணர்வுகள் உருவாகும். மணம் கமழும் நறுமணங்கள் நிறைந்த சூழலில் சில மணி நேரம் செலவழியுங்கள். அடிக்கடி பயணம் செய்யுங்கள்.
எந்த நேரத்திலும் தாழ்வு மனப்பான்மை, தேவையற்ற சிந்தனை, குழப்பம், கோபம், எரிச்சல், பயம், குற்றஉணர்ச்சி, சந்தேகம் போன்ற சிந்தனைகளை உங்களுக்குள் தோன்ற அனுமதிக்காதீர். நிறைய உடற்பயிற்சி செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் விளையாடுங்கள்.
தனிமையை இனிமையாக்குவது, சோகத்தைச் சுகமாக்குவது, பயத்தை எதிர்கொள்வது போன்ற வற்றுக்கு, தன்னம்பிக்கைதான் மூலாதாரம். உங்களால் எதையும் செய்ய முடியும், செயல்படுத்த முடியும், மாற்ற முடியும் என்பதை முதலில் நம்புங்கள். அதற்கான முயற்சிகளை எடுங்கள்.

எளிமையாகச் செரிக்கக்கூடிய உணவுகளுக்கு முன்னுரிமை தரலாம். எந்த உணவைத் தின்றாலும் நன்கு மென்று தின்னும் பழக்கத்தால், ஹார்மோன்கள், நொதிகள், உள்ளுறுப்புகளின் வேலை சுலபமாகும். ஆதலால், எதிர்வினைகளான டென்ஷன், பதற்றம், கோபம், எரிச்சல் உணர்வு, மன அழுத்தம் போன்றவை வராமல் தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.