வெள்ளி, 15 மே, 2015

‘ஹச்’தும்மல்…ஆயுசு நூறு?!

பொதுவாக வெளியில் கிளம்பும்போது, யாரேனும் தும்மினால் ‘அபசகுனம்’ என்று, புறப்பட்ட காரியத்தைத் தள்ளிவைப்பார்கள். குழந்தைகள் தும்மினால், 100 வயது வரை வாழ வாழ்த்துவார்கள். இந்த நம்பிக்கைகளைத் தாண்டி, தும்மல் ஏன் வருகிறது? அப்போது உடலில்  என்ன நடக்கிறது?
‘பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருள் உடலில் நுழைந்திருக்கிறது. இதனால் உடலுக்குக் கெடுதல் என்பதைச் சுட்டிக்காட்டும் ஓர் எச்சரிக்கை மணியே தும்மல். காற்றில் உள்ள தூசு, வீட்டுப் பொருட்களில் படர்ந்துள்ள தூசு, தாவரம் மற்றும் விலங்குகளிடம் இருந்து வரும் தூசுகள், போன்ற தேவை இல்லாதவை சுவாசப் பாதையில் நுழையும்போது, மூக்கில் உள்ள ‘ஹிஸ்டாமைன் (Histamine)’ என்ற ரசாயனம் மூளையைத் தூண்டி, தும்மலை ஏற்படுத்துகிறது. உடனே, நுரையீரலானது வேகம் நிறைந்த அழுத்தமான காற்றை வெளிப்படுத்தி, அந்த தூசுகளை வெளியேற்றுகிறது.  
 சிலருக்குக் காலை எழுந்தவுடன் தும்மல் வரும். பிறகு, சூழலுக்கு ஏற்ப, உடல் பழகிக்கொண்டதும் தும்மல் நின்றுவிடும். கோடை, மழை என வெப்ப நிலை மாறும்போது, சிலருக்குத் தும்மல் வரலாம். காற்றில் இருக்கக்கூடிய ஈரப்பசை மாறும்போது, நம் உடல் அதை ஏற்றுக்கொள்ளாமல் தும்மலாக வெளிப்படுத்துகிறது. இது இயல்புதான். ஏ.சி-யில் தொடர்ந்து உட்கார்ந்திருக்கும் நபருக்கு, அலர்ஜி காரணமாகத் தும்மல் வரலாம். அவர்கள் இருக்கும் சூழலை மாற்றினாலே, தும்மல் நின்றுவிடும். தும்மும்போது சளி வந்தால், அவர்களுக்கு உடலில் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.  தொடர் தும்மல் வந்தால் மட்டுமே, நுரையீரல் பிரச்னை, நிமோனியா போன்ற நோயின் அறிகுறியாக இருக்கலாம். குடல்இறக்க அறுவைசிகிச்சை செய்தவர்கள், வயிறு தொடர்பான அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு தும்மும்போது, அறுவைசிகிச்சை செய்த இடத்தில், தையல் பிரிய வாய்ப்பு உண்டு என்பதால், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தும்மல் வரும்போது, கைக்குட்டை அல்லது துண்டால் மூக்கைப் பொத்திக்கொண்டு தும்முவதே சரியான முறை. இதனால், கிருமிகளும், தொற்றுக்களும் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.