வெள்ளி, 2 அக்டோபர், 2015

திலகமிடுதலின் முக்கியத்துவம் என்ன?

poddu2

திலகமிடுதல் என்பது எமது கலாச்சாரத்துடன் கூடிய ஒரு அம்சமாகும். எனினும் இந்த திலமகிடுதலால் எமக்கு கிடைக்கும் நன்மைகளை அறியாமலும் நாம் கடமைக்காக திலகமிடும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அதன் முக்கியத்தும் உணர்ந்துதான் எமது கலாச்சார நிகழ்வுகளில் திலகமிட்டு விருந்தினர்களை வரவேற்பது முக்கியமாகின்றது.  சந்தனம், குங்குமம், விபூதி முதலியனவற்றை நெற்றியில், புருவங்களுக்கு இடையே உள்ள பகுதியில் அணிவதனை திலகமிடுதல் என்கின்றோம்.  இப்பகுதி நினைவாற்றல், சிந்திக்கும் திறன் ஆகியவற்றின் மையமாக அமைவதால்  யோக சாத்திரத்தில் இது ‘ஆக்ஞா சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது.

திலகத்தினை நெற்றியில் இடும்போது “இறைவன் என் நினைவில் நிறைந்திருப்பாராக. புனிதமான இந்த உணர்வு என் செயல்கள் அனைத்திலும் பரவி நிற்கட்டும். என் செயல்கள் நேர்மையானவையாக இருக்கட்டும்” என்று பிரார்த்திக்கப்படுகிறது. நம் உடல் முழுவதும் மின்காந்த அலைகளாக சக்தியை வெளிப்படுத்துகிறது. நெற்றியும், புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியும் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை. மனம் கவலையுறும் போது தலை உஷ்ணமடைந்து தலைவலி ஏற்படுகிறது.
poddu
நெற்றியில் அணியும் திலகம் நெற்றியை குளிர வைத்து உடல் உபாதையில் இருந்து பாதுகாக்கிறது. நெற்றியும் புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியின் மூலமாக நம்மை மற்றவர்கள் தன்வசப்படுத்தலை தடுக்கிறது. உடலின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது. சில பெண்கள் பிளாஸ்டிக்கினால் ஆன ஒட்டும் பொட்டுகளை பயன்படுத்துகிறார்கள். இவை திலகங்கள் போல பயன் தருபவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும் பீர்க்கங்காய்.

peer4
பீர்க்கங்காய், நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பீர்க்கங்காய் முற்ற முற்றத்தான் நல்லது. பீர்க்கங்காய் முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டொனிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. பீர்க்கங்காயில்; கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாப்பொருள், விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி என அனைத்து வகையான விட்டமின்களும் தாதுப்புக்களும் போதிய அளவில் உள்ளன.
இதனால்தான் சத்துணவு நிரம்பிய காய்கறியாக விளங்குகிறது. பீர்க்கங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் நல்ல மருந்தாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் சில குறிப்பிடும் படியான பெப்டைட்ஸ் என்னும் வேதிப் பொருட்கள் உள்ளன. இவை இன்சுலின் அல்கலாய்ட்ஸ் சோரன்டின் என்பனவாகும். இந்த வேதிப் பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் சிறுநீரில் உள்ள சர்க் கரை அளவையும் குறைக்க உதவுகின்றன.
peer
பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும் மருந்தாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி மூல நோய்க்கும் ஓர் முக்கிய மருந்தாக விளங்குகிறது.இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
peer3
சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்­ணீர் விட்டுக் காய்ச்சி ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர் இரத்த விருத்தி ஏற்படும். கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.

சிறுநீரக கல் பிரச்னையும் அதற்கான தீர்வும்

kidney

இன்று பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக சிறுநீரக கல் பிரச்னை மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கல்சியம், அக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறன. சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பின்னா் வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்தி விடுகின்றது.
சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள் முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, பின்னா் முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும்.   பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பரா தைரொயிட் சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம்.

சிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லீட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும். பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்த நீரை அருந்தலாம். 
வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்தாக வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், . பரங்கிக்காய்  என்பன உள்ளன. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும். 
தவிர்க்க வேண்டியவை:
சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பொப்கோன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் கோப்பி, தேனீா், சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சோஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கொக்கோ, சொக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

எலும்புகளை காக்க 10 கட்டளைகள்

அரை மணி நேரத்துக்கு மேல் ஒரே நிலையில் (Postures) அமரக் கூடாது. உட்காருவதோ, நிற்பதோ, எழுதுவதோ, படம் பார்ப்பதோ, ஓவியம் வரைவதோ எதுவாக இருந்தாலும், அரை மணி நேரத்துக்கு மேல் தொடரக் கூடாது. இடைவெளி விட்டு வேலைகள் செய்வது, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கான முதல் கட்டளை. 
சோம்பலான வாழ்க்கைமுறை, எலும்பு நோய்களுக்கு முக்கியமான காரணம். நடைப்பயிற்சி, மெதுஓட்டம் போன்ற பயிற்சிகளின் மூலம் எதிர் மின்னோட்டம் (நெகட்டிவ் எலக்ட்ரிசிட்டி) உடல் முழுவதும் பாயும். இதனால், கால்சியம் மற்றும் தாதுக்கள் ஈர்க்கப்பட்டு, எலும்புகள் வலுவாகும். மூட்டு, தசை வளைந்துகொடுக்கும் தன்மையைப் பெறும்.
எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி அவசியம் தேவை. சூரிய ஒளி மூலமாகவே வைட்டமின் டியைப் பெற முடியும்.  வைட்டமின் டி மாத்திரைகளைச் சாப்பிட்டாலும், அது முழுமையாகக் கிரகித்து உடலுக்குள் செல்ல, சூரிய ஒளி தேவைப்படுகிறது. தினமும் காலை, மாலை இருவேளையும் சூரிய ஒளி அரை மணி நேரமாவது நம் உடலில் படவேண்டும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில், சர்க்கரை நோய்க்கு முதல் இடம். சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டால், எலும்பு அடர்த்திக் குறைவு வராமல் தடுக்க முடியும்.
எலும்பு தொடர்பான பிரச்னைக்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை, அறிவுறுத்தும் காலம் வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வலி குறைந்ததும் உடற்பயிற்சியை நிறுத்தினால், மீண்டும் பிரச்னைகள் தொடரத்தான் செய்யும்.
மூட்டுகளை வலுவாக்கச் சிறந்த பயிற்சி நீச்சல்தான். தண்ணீருக்குள் இருக்கும்போது, நம் உடல் எடை ஆறில் ஒரு பங்காகக் குறைந்துவிடுகிறது. தண்ணீருக்குள் மூட்டுகளை நன்கு அசைக்கக்கூடிய இலகுத்தன்மை கிடைப்பதால், தசைகள் வலுவடைந்து, மூட்டுக்களின் வளைவுத்தன்மையும் அதிகரிக்கிறது.
எலும்பு தொடர்பான விபத்துகள் ஏற்பட்டால், முழுமையான சிகிச்சையை எடுத்துக்கொள்வது நல்லது. விளையாட்டின்போது ஏற்படும் காயங்களை அலட்சியம் செய்யக் கூடாது. ‘சிறிய அடிதானே, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ போன்ற அலட்சியங்கள், அதிக அளவில் எலும்பு பாதிப்பை ஏற்படுத்தும்.
மூட்டு வலி, முதுகு வலி, கால் வலி, வீக்கம், முட்டியில் சத்தம் வருதல், காலை எழுந்ததும் கை, கால்களை அசைக்க முடியாமல் இருத்தல் போன்ற பிரச்னைகளை, ஆரம்பத்திலேயே கவனித்தால் எளிதில் சரிசெய்யலாம். அறிகுறிகள் தீவிரமானால், சிகிச்சை தேவைப்படும் நாட்களும் அதிகமாகிவிடும்.
எலும்புகளின் உருவ அமைப்புக்குப் புரதம் தேவைப்படுகிறது. புரதம் நிறைந்த உணவுகளைத் தேவைப்படும் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல, எலும்புகள் ஆரோக்கியமாக வைட்டமின் சி, டி, கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். பால், பால் பொருட்கள், கேழ்வரகு, மீன், ஆரஞ்சு, சோயா, அதிக அளவு பச்சைக் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உயரத்துக்குத் தகுந்த எடையைப் பராமரிப்பது, மூட்டுக்களைப் பாதுகாக்கும். அதிக எடையைத் தாங்க முடியாமல், மூட்டுக்கள் தேய்ந்துவிடும் என்பதால், எடை அதிகமாக இருப்பவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், மூட்டுவலி குறைவதை உணர முடியும்.

தசைநார் கிழிவு… தடுப்பது எளிது!

தசைநார் (லிகமென்ட்)
எலும்பு மூட்டுகளைப் பிணைத்திருக்கும் அமைப்புதான் ‘லிகமென்ட்’ எனப்படும் தசைநார். இது கொலாஜனால் ஆனது. நெகிழ்வுத்தன்மை கொண்டது. இது உடலில் உள்ள தசைகளுடன் இணைந்து, எலும்புகளை இணைத்துப் பிடிக்கும். தசைநார்கள் இல்லை எனில், எலும்புகள் இணைந்து இருக்காது. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வோர் எலும்புக்கும் ஏற்றவாறு தசைநார்கள் இருக்கின்றன. இடுப்புப் பகுதியில் இருக்கும் தசைநார் மிகவும் வலுவானது. கை விரல்களில் இருக்கும் தசைநார்  மென்மையானது. இடுப்பு, கழுத்து, மூட்டு, கணுக்கால் என ஒவ்வொரு பாகத்திலும்  ஒவ்வொரு வகையான தசைநார்கள் இருக்கின்றன.
தசைநார் கிழிவு
விளையாட்டு வீரர்கள், விபத்தில் சிக்குபவர்களுக்குத்தான் பெரும்பாலும் தசைநார்கள் கிழியும். சுளுக்கு ஏற்படும் சமயங்களில் தசைநார் கிழிந்துவிடும். நடக்கும்போது, ஓடும்போது, சைக்கிள் ஓட்டும்போது, உடற்பயிற்சி செய்யும்போது என எப்போது வேண்டுமானாலும் கவனக்குறைவு காரணமாக விபத்து நிகழலாம். மூட்டுப்பகுதியில் விபத்து ஏற்பட்டால், தசைநார் கிழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தசைநார் கிழிவதால் மட்டும் அல்ல, தசைநார் கொஞ்சம் அதிகமாக விரிந்தாலும் வலி ஏற்படும்.
தசைநார் கிழிவைக் கண்டுபிடிப்பது எப்படி?
தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை, பாதிக்கபட்ட  இடத்தின் வெளிப்புறத்தில் சோதனை செய்தே கண்டுபிடித்துவிட முடியும். எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் தசைநார் பாதிப்பை அளவிடலாம். தசைநார் பாதிப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. கால் மூட்டுகளில், மூட்டுக்கு உள் பகுதியிலும் லிகமென்ட் இருக்கும். மூட்டுக்குள் லிகமென்ட் கிழிந்தால் மீண்டும் சரிசெய்வது சிரமமான காரியம். எனவே, மூட்டுகளில் வலி இருந்தால், உடனே அதனைக் கவனிப்பது நல்லது.
லிகமென்ட் பிரச்னை சரிசெய்யப்பட்ட பிறகு, மீண்டும் பாதிப்பு ஏற்படுமா?
லிகமென்ட் சிகிச்சை என்பது லிகமென்ட்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதுதான். சிகிச்சையில் கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டாலும், லிகமென்ட் பழைய நிலைக்குத் திரும்பாமல் வலி இருக்கத்தான் செய்யும். எந்தச் செயலை செய்வதால் வலி ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதைத் தவிர்க்கலாம். உதாரணமாக, கால்பந்து விளையாடும்போதோ, நடனம் ஆடிவிட்டு வந்த பிறகோ வலி வருகிறது எனில், அதைத் தவிர்ப்பது நலம்.
பாதுகாப்பு டிப்ஸ்
வார்ம்அப் செய்யாமல் எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்யக் கூடாது. விளையாட்டு வீரர்கள் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்த பின்னர்தான் விளையாட வேண்டும்.
உடல் பருமனாக இருப்பவர்கள் ஆர்வக்கோளாறில் ஜிம்மில் கடினமானப் பயிற்சியில் ஈடுபடக் கூடாது. ஆரம்பக்கட்ட பயிற்சிகள் செய்த பின், பயிற்சியாளர் அறிவுறுத்தினால் மட்டுமே கடினமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
வைட்டமின் டி  சத்து அவசியம். எனவே, தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன், வார்ம்அப் பயிற்சிகள் செய்யாமல் கடினமான வேலைகளைச் செய்யக் கூடாது.
செயற்கையான புரோட்டீன் பானங்களைச் சாப்பிடுவது நல்லது அல்ல. அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அளவான புரதமும் உடற்பயிற்சியுமே தசைகளையும் தசைநார்களையும் வலுவாக்கும்.
தசைநார் கிழிவு நிலைகள்
கிரேடு 1
தசைநார்கள் விரிந்து இருக்கும். பாதிப்பு உள்ள பகுதியில் டேப்பிங்  போடப்படும். பிசியோ
தெரப்பி கொடுக்கப்படும்.

கிரேடு 2
தசைநார்கள் 50 சதவிகிதம் வரை கிழிந்திருக்கும். டேப்பிங், பிசியோதெரப்பி மூலமே குணப்படுத்த முடியும். பாதிப்பைப் பொறுத்து, மாவுக்கட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
கிரேடு 3
தசைநார்கள் முழுமையாகக் கிழிந்துவிடும். மாவுக்கட்டு சிகிச்சை மட்டுமே ஒரே வழி. அதன் பின் பிசியோதெரப்பி கொடுக்கப்படும்.

பஸ்சிம உத்தான ஆசனம்

பொருள்:
பஸ்சிமம் – மேற்கு; இங்கு முதுகுப் பகுதி எனப்பொருள். உத்தானம் – நீட்டுவது.
உடலின் மத்திய பகுதி நன்கு இழுக்கப்படுவதால், இந்த பெயர்.

செய்முறை:

தரையில் அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும்
கைகளை காதோடு சேர்த்து மேலே தூக்க வேண்டும்
மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முன்புறம் குனிந்து, கால் கட்டை விரலை தொட வேண்டும். அப்போது நெற்றி, முழங்காலில் பட வேண்டும்.
இரண்டு முழங்கைகளும் தரையில் பட வேண்டும்; கால்களை தூக்க கூடாது.
சிரமமான ஆசனமாக இருந்தாலும், செய்யச் செய்ய சுலபமாகும்.
பலன்கள்:
1. ஜீரண உறுப்புகளை பலப்படுத்தி, அவற்றை சீராக இயங்க வைக்கிறது
2. மலச்சிக்கல் நீங்கும்
3. மாதவிடாய் பிரச்னை சரியாகும்
4. இன்சுலின் சரியாக சுரந்து, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
5. உடல் எடை குறையும்

குறிப்பு:
 முதுகு வலியுள்ளோர், யோகாசன நிபுணர்களின் ஆலோசனையோடு செய்வது நல்லது.

உப்பின் அளவு

உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடை யே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளுக்கு, ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.
"எலக்ட்ரோலைட் பேலன்ஸ்’ எனப்படுகிற, நமது உடலின் நீர் சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது முக்கியம். நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு, கழிவுகளை வெளியேற்றும் வேலையை திசுக்கள் செய்கின்றன.
அந்தத் திசுக்களின் இயக்கத்தை சரியாகப் பராமரிக்க, பொட்டாசியம் மற்றும் சோடியம் என்கிற இரு உப்புகளுமே தேவை. இந்த இரண்டின் அளவும் சரியாக இல்லாவிட்டால், பிரச்னைகளை சந்திக்கத் தயாராகிறது உடல்.
உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். தொடர்ந்து அதிக உப்புள்ள உணவையே உட்கொள்கிறவர்களுக்கு, அதன் விளைவாக, சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம். உப்பு குறைவதால், குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.
சாதாரண நபர்களுக்கு, ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிராம். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு 2 முதல் 5 கிராம் மட்டுமே அனுமதி. சோடியமும், பொட்டாசியமும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.
உப்புக் கழிவானது, சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியே வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் ஒரு நாளுக்கு, 10 முதல் 15 கிராம் வரை உப்பு வெளியேறினால், அது நார்மல். அதைவிட அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்னையின் அறிகுறி.
சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும், கூடிய வரை கல் உப்பை யே பயன்படுத்தவும்.