புதன், 31 ஆகஸ்ட், 2016

தினம் ஒரு செவ்வாழை

மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், அடிக்கடி உட்கொள்ளும் ஒரு பழம், வாழைப்பழம். இரவு உணவு உண்ட பின்னால், வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது பலர், கடைபிடித்து வரும் ஒன்று. ஆனால், சாப்பிடுவதற்கு, அரைமணி நேரத்துக்கு பின்னால், பழம் சாப்பிடுவது தான், உண்மையான பலன் தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதில், செவ்வாழைப்பழம் பலரும் விரும்பும் ஒன்று. விலை, கொஞ்சம்
அதிகம் என்றாலும், இருக்கக் கூடிய சத்துகள் ஏராளம். வாழைப்பழங்களிலேயே, செவ்வாழையில், அதிகமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி தாராளமாக உள்ளன. பீட்டா கரோட்டீன், தமனிகள் தடிமனாவதை தடுக்கும் மற்றும் உடலை இருதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது.
இது, உடலுக்குள் செல்லும் போது, வைட்டமின் ஏவாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில், பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். உடலில், கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும். சிறுநீரகப் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவது நல்லது.


செவ்வாழையில், மற்ற வாழைப்பழங்களை விட, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும். இப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும்.


பல்வலி, பல் அசைவு போன்ற உபாதைகளையும், செவ்வாழைப்பழம் விரைவில் குணப்படுத்தும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால், தொடர்ந்து, 21 நாட்கள் செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம். சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.


சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழை பழத்தை தொடர்ந்து, ஏழு நாட்கள் உட்கொண்டு வர, சரும நோய், விரைவில் குணமாகும். எப்போதும்
சோம்பலாய் இருப்பவர்களுக்கு, இப்பழம், சிறந்த அருமருந்து. சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தினம் ஒரு செவ்வாழையை எடுத்துக் கொள்வது நல்லது. அந்த நாளில், உற்சாகம் இருப்பதை, நீங்களே அறிந்து கொள்வீர்கள். சிலருக்கு, நெஞ்செரிச்சல், தீராத உபாதையை கொடுத்து விடும்.
இதை போக்க, செவ்வாழை நல்லது. இதில், இயற்கையாக அன்டாசிட் தன்மை கொண்டதால், இப்பிரச்னை நீங்கும். பழம் எனக்கு பிடிக்காது என்று இருந்தாலும் கூட, செவ்வாழையை உட்கொண்டு வந்தால், இருக்கும் உடல் உபாதைகள் கட்டுக்குள் வரும் என்பதில் ஐயமில்லை.

மணலிக் கீரை-மார்பு சளி நீங்கும்

ஒவ்வொரு கீரைக்கும், ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன. ஆனால், அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. நமக்கு தெரிந்த, சில கீரை வகைகளை தான் தொடர்ந்து உட்கொண்டு வருகிறோம். இதில், மிகவும் சிறப்பு வாய்ந்தது மணலிக் கீரை. மணலிக்கீரை பூண்டு இனத்தை சேர்ந்தது. இது, தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும் கீரை. பஞ்சாப், சிந்து சமவெளி போன்ற இடங்களிலும், வளரக்கூடியவை. சமையலுக்கு பயன்படுத்தும்
கீரைகளில் ஒன்று. இதை மணல் கீரை, நாவமல்லிக் கீரை என்றும் அழைப்பர். இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும், மருத்துவக் குணம் கொண்டவை. முன்னோர்கள், மருத்துவத்துக்கு பயன்படுத்திய கீரைகளில், இதுவும் இடம் பெற்றுள்ளது.
வயிற்றுப் பூச்சி நீங்க: குழந்தைகளின் வயிற்றில் கிருமிகளின் தாக்கம் இருந்தால், மிகவும் சோர்ந்து பலவீனமடைந்து விடுவர். ஏனென்றால், உடலுள்ள சத்துக்களை, கிருமிகள் உறிஞ்சி விடுவதே இதற்கு காரணம். இதை அகற்ற, மணலிக் கீரையை சிறிது அரைத்து, நீரில் கலந்து அதிகாலையில், வெறும் வயிற்றில், மூன்று நாட்கள் குடித்து, மீண்டும் 4 நாட்கள் இடைவெளிக்கு பின், 3 நாட்கள் குடித்து வந்தால், தட்டைப் புழுக்கள் நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க: பொதுவாக, கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை, வாரம் இருமுறை பாசிப்பருப்புடன் கூட்டு செய்து, சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை நீங்கும்.
மார்புச்சளி நீங்கும்: மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக் கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். இக்கீரையை குடிநீரில் கலந்து குடிக்கலாம். அல்லது கீரையை நன்கு அலசிய பின், சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிடலாம் அல்லது கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலும் மார்புச்சளி நீங்கும்.
ஞாபக சக்தி பெருக: ஞாபக மறதி என்பது, அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். பித்தம் அதிகரித்தாலும், மூளைக்கு தேவையான சத்துகள் குறைந்தாலும் ஞாபக மறதி ஏற்படும். இக்குறையை நீக்க, மணலிக் கீரையை, மசியல் செய்து உண்பது நல்லது.
ஈரல் பலம் பெற: ஈரல் பாதிக்கப்பட்டால், உடலின் உறுப்புகளும் பாதிக்கப்படும்; ரத்தம் சீர்கெடும். பார்வை குறையும். ஈரலைப் பலப்படுத்த, மணலிக்கீரை கஷாயம் செய்து தினமும் குடித்தால், ஈரல் பலம் பெறும்.
மார்பு பகுதியில், சளி கட்டிக்கொள்வதால், தொடர்ந்து, இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. மார்பு சளியைப் போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால், நீங்கும் அல்லது மணலிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மார்பு சளியும் காணாமல் போகும்.

நமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை எவ்வித அறிகுறிகள் மூலம் அறியலாம்?

Image result for HIGH BP


பொதுவாக நமது ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இந்த அளவு கூடும்போது, அதாவது 140/90 என்பதை தாண்டும்போது அதை ரத்தக் கொதிப்பு Hyper tension என்பர். இந்த வியாதி உள்ள பலருக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கலாம். எனவே அதை சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடுவர். மற்றும் சிலருக்கு ரத்த அழுத்தம் சிறிதளவு கூடினாலே தலைவலி, தலைச்சுற்றல், தலைபாரமாக இருத்தல், மயக்கம் ஏற்படலாம். ரத்தக்கொதிப்பு கூடும்போது, உடலின் முக்கிய பாகங்களான மூளை, சிறுநீரகம், இருதயம், கண்களில் பெருமளவு பாதிக்கலாம். இதனால் இதற்குரிய அறிகுறிகளான பக்கவாதமோ, நெஞ்சுவலியோ, மூச்சுத் திணறலோ, கண்பார்வை மங்குவதோ, கால்வீக்கம் உட்பட பல வகைகளில் தென்படலாம். இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த வியாதியின் சிகிச்சையே இந்த உள்ளுறுப்பின் பாதிப்பை தவிர்ப்பதே. எனவே எந்த வயதிலும், எந்த நேரத்திலும் ரத்தஅழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இதற்கு முதலில் வாழ்வியல் முறை மாற்றமே அத்தியாவசியமானது. அதாவது மனதை நிம்மதியாக வைத்திருப்பது, உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெயை குறைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி முக்கியமானது.
இவை எல்லாம் செய்தும் ரத்த அழுத்தம் குறையவில்லை என்றால் அவசியம் மருந்து தேவைப்படும். தற்போது ரத்தக்கொதிப்புக்கு பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. எனவே இந்த நோயை பொறுத்தவரை அறிகுறி வரும்வரை தாமதிக்காமல் ரெகுலராக, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து, அதற்கேற்ப நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது முக்கியம்.

Image result for HIGH BP

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் கண்பார்வை இழக்க நேரிடுகிறது?

டயாபடிக் ரெடினோபதி என்ற கண் பார்வை கோளாறைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது பாத்திருப்பீர்கள் அல்லது சந்தித்திருப்பீர்கள். கண்களில் திசுக்கள் வளர்ந்து அதனால் கண்பார்வை இழக்கவும் நேரிடும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு கண்களில் ஒரு சிறிய புரோட்டின் உருவாகி கண்களில் இருக்கும் இரத்தக் குழாயை பாதிக்கச் செய்கிறது. விளைவு கண்பார்வை பறிபோதல்.
உலகளவில் சர்க்கரைவியாதியால் கண்பார்வையற்றவர்கள் 1 சதவீதம் உள்ளார்கள். அதுவும் 40 வயதிலுள்ளவர்களுக்கும் இந்த ரெட்டினோபதியும், கூடவே குளுகோஸ் அளவு ஏற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று அமெரிக்காவிலுள்ள இண்டியான ஆப்தோமெட்ரி பக்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் தாமஸ் கூறியுள்ளார்.
கண்களிலுள்ள சிறிய நாளங்கள் ரெட்டினாவிற்கு ஆக்ஸிஜனை அனுப்புகின்றன. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நாளங்கள் பாதிப்படைந்து, ஆக்ஸிஜனை கசிகின்றன.
இதனால் ரெட்டினாவை சுற்றியுள்ள திரவபகுதிகள் வீக்கமடைந்து பார்வை திறனை குறைக்கின்றன. இதனால்தான் டயாபடிக் ரெட்டினோபதியின் அறிகுறி இருப்பவர்களுக்கு சரியாக படிக்க முடிவதில்லை.
பொதுவாக நாளங்கள் பாதிப்படைந்தால், ஆக்ஸிஜன் போதிய அளவு ரெட்டினாவிற்கு அனுப்பப்படுவதில்லை. ரத்த ஓட்டம் குறைவதால், உடனே VEGF என்ற புரோட்டின்உற்பத்தி ஆகிறது.
இது கண்களிலுள்ள நாளங்களை ரிப்பேர் செய்து, பாதிப்பை சீர் செய்பவை. ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சீர் செய்வதற்கு பதிலாக அந்த புரொட்டின் திசு அங்கேயே தங்கி, வளர்கிறது. இதுவே கண்பார்வையை குறைக்கிறது.’
ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு , கண்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால், VEGF என்ற திசு உற்பத்தி அதிகமாகி, நாளங்களில் வளர்கிறது. இதான் கண்பார்வைத் திறன் இழக்க நேரிடுகிறது.

தாங்க முடியாத வலிகளால் அவதிப்படுகிறீர்களா? இதுதான் காரணம்

Image result for வலி
சிலருக்கு தாங்க முடியாத தலைவலி சிறு வயதிலிருந்தே இருக்கும். சிலர் கால் வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி என எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
பரிசோதனையிலும் ஒன்றுமில்லை என மருத்துவர்கள் சொல்லியிருப்பார்கள்.ஆனாலும் இவை வாழ் நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். இது போன்ற நாள்பட்ட வலிகளுக்கு என்னதான் காரணம்? மரபணு.
நமது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கோ இந்த மாதிரியான வலி இருந்தால்,அது அடுத்த சந்ததியினருக்கும் தொடரும் என ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. இந்த மாதிரியான நாள்பட்ட வலிகளை ஏற்படுத்தும் மரபணு, பெற்றோரிடமிருந்து அடுத்த சந்ததியினருக்கு கடத்திச் செல்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த இரு பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. வலிகள் எதனால் ஏற்படுகிறது. நாள்பட்ட வலிகளுக்கு காரணமென்ன என ஆய்வு செய்தத்தில் இது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவிலுல்ள வாண்டர் பில்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் அமெண்டா ஸ்டோன் என்ற ஆராய்ச்சியாளர் மற்றும் ஓரிகன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்னா வில்சன் ஆகிய இருவரும் இந்த ஆய்வை நடத்தினர்.
அப்பாவோ அல்லது அம்மாவோ நாள்பட்ட வலிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இது கரு உற்பத்தியாகும்போது, அதனையும் சேர்த்து பாதிப்பதால் இந்த மாதிரியான வலிகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது என்று ஆராய்ச்சி சொல்கிறது.
போதிய உடற்பயிற்சிகள் இல்லாதிருப்பது மற்றும் மிகுந்த மன அழுத்தத்தில் வாழ்க்கை நடத்தும் பெற்றோர்கள் தங்களின் வலிகளை தங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். இந்த மாதிரியான வலிகளைக் கொண்ட பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான செயலமைப்பு மரபணுவில் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

சனி, 7 மே, 2016

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க – Improve blood circulation


உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கான எளிய வழிகள்
உடலில் இருக்கும் இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீர்குலைவு பல்வேறு நோய்களுக்கு வித்திடும். இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் இரத்த ஓட்ட குறைபாடுகளால் ஏற்படுகின்றன.
தலைவலி, கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்து போவது, அடிக்கடி ஏற்படும் தசை பிடிப்புகள், கடினமான தசைகள், பலவீனமாக உணர்வது, சலசலக்கும் காதுகள், ஆறாமல் இருக்கும் காயங்கள், நினைவிழப்பு ஆகியன இரத்த ஓட்ட குறைபாடுகளுக்கு அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இந்த அறிகுறிகளை லேசாக உணரும் போது, நாம் சந்தேகிக்க தொடங்க வேண்டும். இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யும் போது, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு சிக்கல்கள், ஆண்மையின்மை, மாரடைப்பு மற்றும் இறப்பு போன்ற மிகவும் தீவிரமான மற்றும் ஆபத்தான விளைவுகள் உண்டாகலாம்.
நம் உடலில் ஒரே சீராக இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த உணவை குறைத்தல், நார் பொருட்களை அதிக அளவில் உட்கொள்ளுதல், வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் இயற்கையான கூடுதல் பொருட்களை எடுத்துக் கொள்வது ஆகியன மிகவும் முக்கியமானவை. இப்போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் சில டிப்ஸ்களைப் பார்ப்போமா!!!

குளியல் 
குளிர்ந்த நீர் குளியல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாகும். பாதிக்கப்பட்ட பகுதியை வெந்நீரில் கழுவும் போதும் அல்லது ஒத்தடம் கொடுக்கும் போதும், உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும். ஒரு உடனடி குளிர் குளியல், உள்ளுறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குளியலின் போது, உடலில் ஏற்படும் நடுக்கம், இரத்தம் சருமம் வழியே பாய்ந்து பிராண வாயுவை விட்டுச் செல்கிறது, என்பதற்கு அறிகுறியாகும். இந்த குளிர் நீர் சிகிச்சை முறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

சிவப்பு மிளகாய் 
சிவப்பு மிளகாய், இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது இதயத்தை பலப்படுத்துகின்றது. தமனிகளின் அடைப்பை நீக்குகின்றது. அத்துடன் எடை இழப்பிற்கும் உதவி புரிகின்றது. 

மூச்சு பயிற்சி 
பெரும்பாலான மக்கள், மோசமான சுவாச பழக்கங்களை கொண்டிருக்கின்றனர். நம்முடைய நுரையீரலில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, நுரையீரலின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். அதற்கு, ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். இது இரத்தம் அதிக அளவு பிராணவாயுவை பெற வழி வகை செய்யும். அத்துடன், கழிவு பொருட்களை நீக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.

மன அழுத்தத்தை தவிர்த்தல் 
மன அழுத்தம், இரத்த ஓட்டத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் மிக முக்கியமான மற்றும் முன்னணி காரணங்களில் ஒன்றாகும். ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆட்படும் போது, முக்கிய உறுப்புகளுக்கு மட்டுமே ,ரத்த செல்லும். மற்ற உறுப்புகளுக்கு செல்லாது. இது மோசமான பின் விளைவுகளை உருவாக்கும். கைகள் மற்றும் கால்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படும். எனவே, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கு, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆழ்ந்து சுவாசிப்பது மற்றும் தியானம் செய்வது போன்ற எளிய நடைமுறைகள், மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

பாதத்தை உயர்த்துதல் 
குறுகிய கால அளவிற்கு பாதத்தை உயர்த்துதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயனுள்ள வழி ஆகும். படுக்கையில் படுத்துக் கொண்டு காலடியில் ஒரு தலையணை வைப்பதன் மூலம் இதை செயல்படுத்தலாம். இது இரத்தம், தலையை நோக்கி பாய்வதற்கு வழி வகுக்கும். இந்த செயல்முறையில், தரையில் படுத்துக் கொண்டு, ஒரு நாற்காலி அல்லது சோபா மீது கால்களை மாற்றி மாற்றி வைக்க வேண்டும். அவ்வாறு செய்வது, இரத்தம் கால்களை விட்டு நீங்குவதற்கு உதவும்.

உடற்பயிற்சி 
உடல் உழைப்பு மட்டுமே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் மிக நிச்சயமான வழியாகும். பெரும்பாலான மக்கள், இன்று எந்த ஒரு உடல் உழைப்புமின்றி உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுகின்றனர். வழக்கமான, உடற்பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் மற்றும் ஓட்டப்பயிற்சி ஆகியன இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனினும், நடை பயிற்சியின் போது, நிலையான வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.


சமச்சீர் உணவு 
உட்கொள்ளும் உணவு, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது கொழுப்பு மிகுந்த உணவை குறைத்துக் கொள்வது தான். இதனால் இரத்த ஓட்டம் உடலில் அதிகரிக்கும். குறைந்த கொழுப்பானது, இரத்தம், சிறிய நாளங்கள் வழியாக எளிதாக செல்ல உதவுகிறது. உணவில் நார்ச்சத்து மிகுந்த உணவை உட்கொள்வது, கொழுப்பை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

பெருகி வரும் சிறுநீரக பாதிப்புகள்!!!!


தற்காத்துக்கொள்ள விரிவான வழிகாட்டி…

‘‘ஒருவர் உயிர் வாழ ஒரு சிறுநீரகமே போதுமானது. ஆனால், இயற்கை ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்களைக் கொடுத்துள்ளது. இருந்தும் அவற்றைச் சரிவரப் பராமரிக்காமல் பிரச்னை களைப் பெற்று, வளரவிட்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலைமை வரை செல்வதற்கு, மக்களின் அறியாமையே காரணம்’’ என்று ஆரம்பித்த டாக்டர் வெங்கடேஷ், அதைப் போக்கும்விதமான தகவல்களை விரிவாகத் தந்தார்.
சிறுநீரகத்தின் முக்கியப் பணிகள்!
 1300-க்கும் மேற்பட்ட ரத்தக் கழிவுகளை வெளியேற்றுவது
 ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது
 ரத்தவிருத்தி
 வெயிலில் இருந்து கிடைக்கும் `விட்டமின் டி’யை முழுவதும் பய னுள்ளதாக மாற்றுவது
 ரத்தத்தில் உள்ள புரதத்தை பாதுகாப்பது
 எலும்பை பலமாக வைப்பது
 சாப்பிடும் உணவு, மருந்துகளில் உள்ள கழிவுகள், விஷத் தன்மையை பிரித்து வெளியேற்றுவது உள்ளிட்ட இன்னும் பல.
சிறுநீரகம்… சில தகவல்கள்!
 சிறுநீரகத்தின் சீரான இயக்கம் நம் கையில்தான் இருக்கிறது. குடிக்கும் தண்ணீர் தொடங்கி உட்கொள்ளும் உணவு, மாத்திரை மருந்துகள் வரை எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
 உடல் நிலை, வாழும் சூழல், சாப்பிடும் உணவுகள், குடிக்கும் தண்ணீரின் அளவு போன்றவற்றைப் பொறுத்து ஒருவருக்கு வெளியேறும் சிறுநீரின் அளவு மாறுபடும். ஒரு நாளைக்கு ஒருவர் தெளிவான, நிறமில்லாத 2 லிட்டர் அளவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும். அதற்குத் தேவையான தண்ணீரைக் குடிக்க வேண்டும். 
 சிறுநீரகப் பிரச்னை ஒரே நாளில் வரக்கூடியது அல்ல. அதேசமயம், ஆரம்பத்திலேயே அதை அறிந்துகொள்வதற்கு அறிகுறிகளும் இருக்காது. சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதற்கான அடிப்படை அறிகுறிகள் தென்படும்போது சிறுநீரக பாதிப்பானது வளர்ந்த நிலையில் இருக்கும். அதனால், வருடத்துக்கு ஒருமுறை சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே பாதிப்புகளைக் கண்டறிந்து சரிசெய்யவேண்டியது அவசியம்.
ஒரு மில்லியன் வடிகட்டிகள்!
ஆரோக்கியமான சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடிகட்டிகள் (nephrons) இருக்கும். கிட்னியின் சீரான இயக்கத்துக்குத் துணிபுரிபவை இந்த வடிகட்டிகள். கிட்னி பாதிக்கப்படும்போது இந்த வடிகட்டிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 45 வயதைக் கடந்தவர்களுக்கு இயற்கையாகவே இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 90 வயதில் 60 சதவிகித  வடிகட்டிகள் மட்டுமே இருக்கக்கூடும். என்றாலும், அந்த வயதின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு அதுவே போதுமானதாக இருக்கும். ஆனால், கிட்னி பாதிப்பு வந்த இளம் வயதினருக்கு அவர்களின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு ஈடுகொடுக்கும் எண்ணிக்கையில் இந்த வடிகட்டிகள் இல்லாதுபோகும்போது, அது நாளுக்கு நாள் பாதிப்பின் அளவை அதிகரித்து உயிரிழப்புவரை அழைத்துச் செல்லக்கூடும்.
சிறுநீரகப் பிரச்னைகள்… யார் யாருக்கு?
ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என பாகுபாடின்றி யாரும் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், 60 வயதைக் கடந்தவர்கள், சுயமாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்துக் கொள்பவர்கள், தேவையான தண்ணீர் குடிக்காதவர்கள்… என இவர்கள் சிறுநீரக பாதிப்புகளுக்கு முதன்மை இலக்காவார்கள். இந்தியாவில் பல லட்சம் பேர் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும், 2:1 என்னும் விகிதத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுநீரகக் கல் பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள்    கூறுகின்றன.
அறிகுறிகள்
 கால் வீக்கம்
 அதிக மற்றும் குறைந்த சிறுநீர் வெளியேறுவது
 இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது 
 மூச்சுவிடுவதில் சிரமம்
 ரத்தசோகை
 உயர் ரத்த அழுத்தம்
 எலும்பு பலமின்மை மற்றும் எளிதில் உடைந்துபோவது
 பசியின்மை
 வாந்தி
 சட்டென தோல் உரிந்துபோவது
 அடிக்கடி விக்கல்
 எடை கூடுவது, குறைவது
 மலட்டுத்தன்மை
 உடலுறவில் நாட்ட மின்மை உள்ளிட்ட இன்னும் பல.
சிறுநீரகக் கல் !
உலக அளவில் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களில் 12% பேர் சிறுநீரகக் கல் பிரச்னையை எதிர்கொள் கிறார்கள். இந்தியாவில் இது 30 – 40% ஆகும்.  குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை ‘ஸ்டோன் பெல்ட்’ என்றும், இங்குள்ள மக்களில் அதிகமானோர் சிறுநீரகக் கல் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 சிறுநீரகக் கல்லானது, ஏற்கெனவே ஏதேனும் வியாதி இருப்பவர்களில் 12% பேருக்கு வரலாம். வயது வித்தியாசம் கிடையாது. ஆனால், வயதுக்கு ஏற்ப சிறுநீரகக் கல் வருவதற்கான காரணங்கள் மாறக்கூடும்.
 சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் பைக்குச் செல்லும் வழியில் 5 இடங்கள் குறுகலாக இருக்கும். பெரும்பாலும் அந்த இடங்களில்தான் அடைப்பு ஏற்படக்கூடும். அதாவது சிறுநீர் செல்லும் பாதையில் அழுக்கான நீர் செல்லும்போது கரைசல்கள் ஆங்காங்கே ஓட்டிக்கொள்ளும். அது தொடரும்போது படிப்படியாக அளவு அதிகரித்து அடைப்பு பெரிதாகி அடைத்துக்கொள்ளும். இதனால் சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகி, சிறுநீரகத்தில் தேங்கி, சிறுநீரகம் வீங்கும். இதனால் சிறுநீரகக் கல் உருவாகும்.
 பெரும்பாலும் சிறுநீரகக் கல் உருவாகக் காரணம் நாம் சாப்பிடும் உணவில் உள்ள உப்புதான். எந்த அளவுக்கு உப்பைக் குறைத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு சிறுநீரகத்துக்கு நல்லது.
 சிறுநீரகக் கல்லை உடனடியாக நீக்கவில்லை எனில், அதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து உயிரிழப்புவரை ஏற்படுத்தக்கூடும். சிறுநீரகக் கல்லை நீக்கிய பிறகு, மீண்டும் வராமல் இருப்பதற்கான மருத்துவ ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும். 
செயலிழப்பில் இரண்டு வகை!
தற்காலிகம், நிரந்தரம் என சிறுநீரகச் செயலிழப்பு இரண்டு வகைகளில் நேரும். வேறு ஏதேனும் ஒரு நோய்க்காக ஒரு மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததன் பக்கவிளைவாக சிறுநீரகம் பாதிக்கப்படுவது, தற்காலிகச் செயலிழப்பு. இதனைச் சரிசெய்துவிடலாம். ஆனால், நாள்பட்ட நிரந்த செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு. சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவது மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க உதவும். இன்று உலகம் முழுவதும் நாள்பட்ட நிரந்த சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 67% சதவிகிதம் பேரில் 40% பேர் சர்க்கரை நோயாலும், 27% பேர் ரத்த அழுத்தத்தாலுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
தற்காப்பு நடவடிக்கைகள்!
 சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்பதால், பாதிப்பு எதுவும் இல்லை என்றிருக்காமல், வருடம் ஒருமுறை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.   
 ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 
 உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும். 
 புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 சுயமருத்துவமாக வலி நிவாரணிகளோ, மற்ற மருந்து மாத்திரைகளோ எடுத்துக்கொள்ளக் கூடாது.
 கால்சியம் உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 விட்டமின்-சி உணவுப் பொருட்கள், திராட்சை, கோஸ், ‘பெரி’ என முடியும் காய்கறி, பழங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 தினம் 2 லிட்டர் தெளிவான, நிறமில்லாத சிறுநீர் வெளியேறும் அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 `மொத்தத்தில், சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டைக் குறைக்கும், கெடுக்கும் விதமான உணவு மற்றும் வாழ்க்கைமுறைப் பழக்க வழக்கங்களைத் தவிர்த்து வாழ்ந்தால், சிறுநீரகங்களும் நீடூழி வாழும் ஆரோக்கியமாக!’’
சுயமருத்து முதல் எதிரி!
உடலின் தேவையில்லாத கழிவு, நச்சுகளை வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணி அல்லது மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, அந்தக் கழிவு, நச்சுகளைத் தொடர்ந்து வெளியேற்றும் செயல்முறையில் சிறுநீரகங்கள் நிச்சயமாக பாதிக்கப் படும். எனவே, சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்துக்கான முதல் எதிரி.
அதிக உப்பு… ரொம்ப தப்பு!
உடல் தேவைக்கும் அதிகமான அளவுக்கு உப்பு சாப்பிடுவதால் கிட்னி பாதிப்பு மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, வாத நோய் உள்ளிட்ட இன்னும் பல பிரச்னைகள் வரக்கூடும். எனவே, ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு என்பதில் கவனமாக இருக்கவும்.