செவ்வாய், 20 ஜனவரி, 2015

சிறுநீரக கற்கள்


1.பொதுவாக, சிறுநீரகத்தின் பணி என்ன? 
உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று! ரத்தத்தில் உள்ள கழிவுகள், சிறுநீராக வெளியேறவும், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை சம அளவில் வைக்கவும், சிறுநீரகம் உதவுகிறது. இதோடு, உடலில் உள்ள அமிலம், காரம் மற்றும் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. 

2’சிறுநீரக கற்கள்’ உருவாவது எப்படி?
நமது குடிநீரிலும், உணவிலும், பல தாது உப்புகள் உள்ளன. உணவு செரிமானத்திற்குப் பின், இவை சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன. சிலசமயம், ரத்தத்தில் 
‘தாது உப்புக்கள்’ அதிகமாகும் போது, இவை வெளியேற சிரமப்படும். இதனால், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழாய்களில் இந்த தாது உப்புகள் படிந்து, கல்லாக மாறும். மேலும், தவறான உணவு பழக்கம்; கால்சியம், குளோரைடு, பாஸ்பேட், யூரியா உள்ளிட்ட தாது உப்புகள் நிறைந்த தண்ணீர் பருகுதல்; சிறுநீர் அடக்குதல் இவற்றாலும் சிறுநீரக கற்கள் உருவாகும்! 

3’சிறுநீரக கற்கள்’ தரும் பாதிப்புகள்? 
சிறுநீர் ஓட்டம் தடைபடும்; சிறுநீரகத்தில், சிறுநீர் குழாய்களில் சிறுநீர் தேங்கும்; சிறுநீரகம் வீங்கி, சிறுநீரக அழற்சி உண்டாகும்; முறையான சிகிச்சை இல்லாவிடில், உயிருக்கும் ஆபத்தாகும்! 

4சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள்? 

ஆரம்பத்தில் அறிகுறி ஏதும் இருக்காது; ஆனால், சிறுநீரக கற்கள் நகரும் போதும், சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படுத்தும் போதுதான், வலி உண்டாகும்! முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ், கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும்! சில சமயங்களில், சிறுநீர் வெளியேறும் புறவழித் துவாரம் வரை கூட, வலி இருக்கும்! 
5’சோடியம் குளோரைடு’ நிறைந்த உணவு, சிறுநீரக கற்களுக்கு காரணமாகுமா? 

தினசரி உணவில், 2.5 கிராம் ‘சோடியம் குளோரைடு’ இருப்பது போதுமானது! இவை அதிகமானால், அதிக அளவில், ‘கால்சியம்’ வெளியேறிவிடும். இதனால், ஆக்சலேட், பாஸ்பேட் போன்ற தாது உப்புக்களோடு, சோடியம்
குளோரைடு சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும்! 

6சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க…? 

ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, சீத்தாப்பழம், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட பழங்கள்; சிட்ரஸ் பழச்சாறுகள்; வாழைத்தண்டு சாறு; பார்லி தண்ணீர்; நீர்மோர்; இளநீர்; கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை உள்ளிட்ட நார்ச்சத்துள்ள தானிய வகைகளை,
அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது! 

7’சிறுநீரக கற்கள்’ பிரச்னை உள்ளவர்கள், தவிர்க்க வேண்டிய உணவுகள்? 

‘பாஸ்பேட்’ தாது உப்பு மிகுந்த காபி, தேநீர், பிளாக் டீ, கோலி சோடா, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லெட் உள்ளிட்டவை சிறுநீரக கற்களை உருவாக்கும். இவைதவிர, ஆட்டிறைச்சியில் உள்ள புரதம், ரத்தத்தில் உள்ள ‘யூரிக்’ அமிலத்தை அதிகப்படுத்தி, ‘சிட்ரேட்’ அளவை குறைத்து, சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகும்! 

8.சிறுநீரகம் செயலிழக்க, சிறுநீரக கற்கள் காரணமாகுமா? 

சிறுநீரக கற்களால், உடனடியாக சிறுநீரகத்திற்கு பாதிப்பு இருக்காது. ஆனால், நாள் கணக்கில் சிறுநீரக கற்கள், சிறுநீர் பையில் தங்கும்போது, சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். இதனால் ரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாமல், சிறுநீரகத்தில் நோய்த்தொற்று ஏற்படும். நாளடைவில், கொஞ்சம், கொஞ்சமாக சிறுநீரகம் செயலிழந்து போகும்! 

9.சிறுநீரக பாதிப்பு, ரத்தத்தில் சிவப்பணுக்களை குறைக்கும் என்பது…? 

உடலில் சிவப்பணுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும், ‘எத்தோபாய்ட்டின்’ எனும் ஹார்மோன் சுரக்க சிறுநீரகம் உதவுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், இந்த ஹார்மோன் சுரப்பில் குறை ஏற்பட்டு, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும். இதனால், ‘ரத்தசோகை’ உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.