வெள்ளி, 14 மார்ச், 2014

இரத்தம்

இரத்தம் உறைந்து கட்டியாவது
உடலில் காயம் ஏற்பட்டால் அதிக அளவு இரத்தம் வெளியேறிச் சேதமாகாமல் தடுக்கும் பொருட்டு இயற்கையாகவே அமைந்த ஒரு நுட்பம்தான் இரத்தம் உறைந்து கட்டியாதல். உடல் தசையில் எப்போது காயம் ஏற்பட்டாலும் இது நிகழ்கிறது. இரத்தத்தில் மூன்று செல்கள் அதாவது உயிரணுக்கள் உள்ளன. அவை இரத்தச் சிகப்பணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், தட்டையங்கள் (Platelets) என்பனவாகும்

உடலில் காயம் ஏற்பட்டால் இரத்தம் உறைந்து கட்டியாவதற்கு உதவுவது தட்டையங்களே. காயம் ஏற்பட்ட இரத்த நாளத்தின் அருகில் தட்டையங்கள் குவிந்து, இரத்தச் சிகப்பணுக்கள் வெளியேறாமல் தடுக்கின்றன. காயம்பட்ட நாளத்தின் அருகே குவியும் இத்தட்டையங்கள் ஒரு அடைப்பானைப் போலச் செயல்படுவதோடு, ஒரு வகை வேதிப் பொருளையும் வெளியேற்றித் திரவநிலையிலுள்ள இரத்தப் புரோட்டீனை, கரையாத திட நிலைப் புரோட்டீனாக மாற்றுகின்றன. இப்புரோட்டீன், கட்டி நிலையில் ஒரு வலைபோல அமைந்து தட்டையங்களையும், பிற இரத்த அணுக்களையும் வெளியேறாமல் தடுத்துவிடுகிறது.

இரத்தம் சேமிக்கப்படுவது

இரத்தம் உடலுக்கு வெளியே வந்தவுடன் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் உறைந்துபோய்விடும். பிளாஸ்மா புரோட்டீன்களுள் ஒன்றான ஃபைப்ரினோஜென் என்பதை கால்சியம் அயனிகளின் உதவியுடன் கரையாத ஃபைப்ரினாக மாற்றுவதே இரத்தம் உறைதல் ஆகும். எனவே இரத்தம் உறைவதைத் தடுப்பதற்கு இரத்தத்திலுள்ள கால்சியம் அயனிகளை நீக்குவது போதுமானதாகும். அதாவது, இரத்தத்தை ஒருவர் உடலில் இருந்து மற்றொருவர் உடலுக்கு மாற்றும் பொருட்டுச் சேமிப்பதற்கு, இரத்தத்தில் உள்ள கால்சியத்தை நீக்க வேண்டும். இதற்கு சோடியம் சிட்ரேட் சேர்க்கப்பட்டு இரத்தம், கரையும் திரவக் கூட்டுப்பொருளாக மாற்றப்படுகிறது. இரத்த வங்கிகளில் ஒரு அலகு (450மி.லி.) இரத்தம் கிருமிநாசம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொள்கலனில் பாதுகாப்புக் கரைசலுடன் சேர்த்துச் சேமிக்கப்படும்; பாதுகாப்புக் கரைசல் என்பது தூய வடிநீர், சோடியம் சிட்ரேட், சிட்ரிக் அமிலம், சோடியம் பைபாஸ்ஃபேட், சேமிப்பின்போது இரத்த அணுக்களுக்கு ஊட்டம் தரும் சக்கரைப் பொருளான டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை கலந்ததாகும். இரத்தத்தை 50 செ.கி. வெப்பநிலை அளவில் வைத்திருந்தால் 35 நாட்கள் வரை சேமித்து வைக்க முடியும்.

                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.