செவ்வாய், 1 ஜூலை, 2014

நோயாளியாவது எப்படி?இப்படித்தான்..

பிறக்கும்போது கூடவே வந்த வியாதிகள்( CONGENITAL DISEASE) போக மற்றைய எல்லா நோய்களும் எம்மை வந்தடைபவைதான்.( ACQUIRED DISEASE)
தாயின் கருப்பையிலிருந்து வெளிவந்தவுடன் குழந்தை இந்த உலகத்தை எதிர்கொள்கிறது.
உலகத்துக்கு பல பரிமாணங்கள்..
அதன் பௌதிக பரிமாணம் குளிர், வெப்பம்,,ஒளி,கதிர்வீச்சு
என்பன; இவை பௌதிகச்சூழல் எனப்படும்.
இது தவிர,அந்தக்குழந்தை மனிதர்களோடு, விலங்குகளோடு, பூச்சிகளோடு, தாவரங்களோடு, கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள்(microbes) என பல உயிர்களை சந்திக்க நேரிடுகிறது. இது உயிர்ச்சூழல்.
அவளுக்கும் அவனுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி என்று சொல்லுபவர்கள் சூழ உள்ள இரசாயன உலகத்தை உணருவதில்லை.  பல இரசாயனங்கள் சூழ;பூச்சினாசினிகள் போன்ற செயற்கை இரசாயனங்கள் முதற்கொண்டு, ஈயம்,இரசம் போன்ற இயற்கையாக காணப்படும் இரசாயனங்கள் வரை என இந்த உலகம் ஒரு இரசாயனச்சூழலும் கூட.

   மேலும் அந்தக்குழந்தை ஒரு செல்வந்தவீட்டில் பிறக்கலாம். அல்லது ஒரு வறுமைக்குள் இன்னொரு வரவாய் இருக்கலாம்.
அல்லது அது ஒரு ஆபத்தான அரசியல் சூழலுக்குள்…ஷெல்வந்த வீட்டில் பிறந்து வளரலாம்.
அதுமாத்திரமா ஒரு சமுகத்துக்குரிய உணவு,பழக்கவழக்கம் வாழ்க்கைமுறைகளுக்கு உள்ளேயும் அந்தக்குழந்தை பிறக்கிறது.
    அந்தக்குழந்தை  இந்த பல பரிமாண சூழலிலிருந்துதான் உணவையும் காற்றையும் பெற்று வளர்கிறது.அதன் மனவளர்ச்சியை அது வாழும் சமூகத்திலிருந்து பெற்றுக்கொள்ளுகிறது..

நோய்களும் இங்கிருந்தேதான் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

உயிர்ச்சூழலை பாருங்கள். சக மனிதர்கள் எங்களை குண்டுபோட்டுக்கொல்லலாம்.
பாம்புகள் கடித்து விஷத்தைப்பாய்ச்சலாம்.
நுளம்புகள் இரத்தம் குடிக்கலாம்.
மேற்படி உயிரினங்களெல்லாம் கண்ணுக்குத்தெரிவனவாக இருப்பதானால் மனிதகுலம் இப்படியான ஆபத்துக்களிலிருந்து தப்புவதற்கான உபாயங்களை கொண்டிருக்கிறார்கள்(தமிழர் தவிர).
 ஆனால் கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் பற்றிய அறிவு  நீண்டகாலம் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது.அப்படி மிகச்சிறிய உயிர்கள் பற்றிய அறிவு நுணுக்குக்காட்டியின் கண்டுபிடிப்பு வரை மறைந்திருந்தது.இந்த நுண்ணுயிர்கள் மிகவும் நுண்ணிய அளவில் உடலுக்கு சேதத்தை உண்டுபண்ணுவன
அம்மை, கொலரா போன்ற நோய்கள் காலத்துக்கு காலம் பரவி பல முள்ளிவாய்க்கால் களை நிகழ்த்தி உயிர்களை காவுகொண்டு வந்தது. கடவுளின் கோபம் என்றுதான் மக்கள் நினைத்தார்கள்.
எமது பகுத்தறிவுக்கு தெரியாமல் இருந்தாலும், உடலுக்கு இந்த நுண்ணிய உயிர்களின் பிரசன்னம் தெரிந்தே இருந்தது.பக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்களோடு உடலின் போராட்டமும் அதன் விளைவுகளையும் தான் நாம் நோயாக உணர்கிறோம்.
அவற்றைத் தொற்று நோய்கள் என்கிறோம்.(INFECTIVE DISEASES)
கிருமிகளின் வெற்றி,உடலின் தோல்வி ..மரணத்தில் முடிகிறது.
உடலின் வெற்றியை குணமடைதல் என்கிறோம்.
இந்த தொற்று நோய்கள் மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.( மனித குலத்தால் இந்த பூமிக்கு அச்சுறுத்தல் என்பதனால்தான் இயற்கை நோய்க்கிருமிகளை வைத்திருக்கிறதோ என்னவோ).

நாம் வாழும் பௌதிக இரசாயனச்சூழல் உடலை சேதப்படுத்துகிறது.சேதம் கண்ணுக்குத்தெரியக்கூடியதாக இருந்தால் அதை காயம் என்கிறோம். ஒரு அசிட்டையோ, கொதிக்கும் எண்ணையையோ, எரியும் நெருப்பையோ,கத்தியையோ எமக்குத் தவிர்க்கத்தெரியும். ஏனென்றால் கண்ணுக்குத்தெரியும் காயத்தை உருவாக்கும் என்பதே. வலியும் அசௌகரியமும் எங்களை காத்துவிடுகின்றன.
ஆனால் இரசாயனங்கள், கதிர்வீச்சுக்கள் கண்ணுக்குத்தெரியாத சேதத்தை விளைவிக்கும்போது அது நமக்கு தெரிவதில்லை,உணருவதில்லை.அதை நாம் காயம் என்பதில்லை.ஆனால் அதன் விளைவுகளை நோய் என்கிறோம். சிகரட்டை எடுத்துக்கொள்ளுங்கள் அது சுவாசக்குழாயின் கலங்களை சேதப்படுத்துகிறது( cellular damage).
சிகரட் குடித்தால் நெஞ்சில் காயம் வரும் என்றால் அது பொருத்தமாக தெரியாது.ஆனால் அந்தச்சேதம் நோயாக பரிணமிக்கும் என்றால் புரியும்.
வெளிப்படையாகத்தெரியாத எதையுமே இவ்வுலகம் ஏற்றுக்கொள்வதில்லை.அதனால்தான் நுண்ணிய அளவில் ஏற்படுகிற உடல் சேதங்களால் நோய் உருவாகும்போது அது புதிராக தெரிகிறது.

இந்தச் சூழலிலிருந்து தான் உடலுக்குத்தேவையானவற்றை பெற்றுக்கொள்கிறோமல்லவா?.உணவு, பானங்கள், காற்று என்பவை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்..உணவிலிருந்து புரதம்,மாச்சத்து,கொழுப்புச்சத்து, விற்றமின்கள், கனியுப்புக்கள், நீர் என்பனவற்றைத்தான் உடல் எதிர்பார்க்கிறது. இவை வேண்டிய அளவில் விகிதாசாரமாக இருந்தால் அதை நிறையுணவு என்கிறோம். இந்த உணவுக்கூறுகள் நாம் உண்ணும் உணவில் இல்லையென்றாலோ போதவில்லையென்றாலோ நோய்கள் உருவாகின்றன. இவற்றை போஷாக்கு குறைபாட்டு நோய்கள்(nutritional) என்கிறோம்.
உணவின் அளவு கூடும்போது அது இரசாயனமாகி ,பௌதிக மாற்றமாகி நோயை உருவாக்குகிறது.ஒரு கெட்ட உதாரணம்:அதிக கொழுப்புணவு, கொலஸ்ட்றோல் படிவுகளை இரத்தக்குழாயில் ஏற்படுத்துகிறது.அது இதயத்துக்கான இரத்தக்குழாயானால் அடைப்பாக மாறும்போது நெஞ்சுவலி வருகிறது.
பல நோய்கள் உருவாவதற்கு மேற்படி காரணிகளில் பல உதவி செய்கின்றன( multifactor).தனியொரு காரணி மாத்திரம் அமையுமானால் அது கட்டுப்படுத்த இலகுவான நோய்.

 நாம் உண்ணும் உணவைத்தீர்மானிப்பது நாமல்ல. எமது சமுகத்தின் பழக்க வழக்கந்தான் அதை தந்திருக்கிறது.  நான் இடியாப்பம் சாப்பிட எனது சமூகம் தான் காரணம்.
சமூகம் தீர்மானித்தாலும் இறுதியில் எங்கள் பொருளாதாரம் எதை வாங்குவது என்பதை தீர்மானிக்கிறது.கால் வயிற்றுக்கஞ்சியாவது கிடைத்தால் போதும் என்ற நிலையைத் தந்திருப்பதும் இந்தப்பொருளாதாரந்தான்.
பொருளாதாரமும் அரசியலும் பின்னிப்பிணைந்தவை.கோதுமை மாவு பிராதான உணவானது மேலை நாட்டின் அரசியலால்தான்.
தேயிலைச்சாயத்தைக்குடிப்பதுவும் அதே அரசியலின் விளைவுதான்.
போஷாக்கில்லாத குழந்தைகளும்,அனுபவித்த தொற்று நோய் மரணங்களும்(செப்டிசீமியா),மன நோய்களும்  பொருளாதாரத்தடை அரசியலின் விளைவு தான்.
   அதனால்தான் இனங்கள் தமக்குரிய சுய அரசியல் பொருளாதாரத்தை அடைய முயலுகின்றன.
. வியாபாரிகள் ஆட்சியைப்பிடித்தால் நாட்டை சந்தையாக்குவார்கள்.பணம் தான் ஆட்சி புரியும் மற்றையவை சீரழியும்.
இனமொழி/மத வெறி ஆட்சி அமைந்தால் மொழி/மத உள் நாட்டு யுத்ததில் நாடு சீரழியும்
நல்லாட்சி நடந்தால் நாட்டில் எல்லாவற்றிலும் சம நிலை பேணப்பட நாடு சிறப்பாக இருக்கும்.
உடலும் ஒரு நாடு போலத்தான்.  நாங்கள் தான் ஆட்சி செய்கிறோம். சமனிலை தான் ஆரோக்கியம். எங்கள் ஆட்சி சீரழிவென்றால் நோய்தான் விளையும்.

நான் மீண்டும் தொடங்கிய கதைக்கு வருகிறேன்.

அவர் கேட்டாரல்லவா?
 ’’என்னை நோயாளியாக்கிவிடுங்கள். இல்லாவிட்டால அவர்கள் என்னைக்கடத்திக்கொண்டு போய்விடுவார்கள்’’
       அதே  நடப்பு அரசியல்தான். மருந்துக்கொம்பனி ஆட்சியப்பிடிக்குமென்றால் எல்லோரும் மருந்து சாப்பிடவேண்டுமென்றுதான் சட்டமியற்றும். ஆரோக்கியமானவருக்குத்தான் ஆபத்து.(சுகாதார அமைச்சர் மருந்துக்கொம்பனி வைத்திருந்தால் நோயைத்தடுக்க சட்டமியற்றுவாரா என்ன?)

மருத்துவர் நோயை உருவாக்கத்தீர்மானித்தார்.

’’சரி இந்த மருந்தை எழுதித்தந்தபடி ஒரு கிழமைக்கு பாவியுங்கள், நீங்கள் நோய் வாய்ப்படுவீர்கள்’’

மருந்துகள் எல்லாம் இரசாயனங்கள். இப்படி மருத்துவத்தினால்,மருத்துவரால்  உருவாக்கப்படும்  நோய் நிலைமைகள் அனேகம் இருக்கின்றன. அவை IATROGENIC CONDITIONS எனப்படும்.

கலைச்சொற்கள்;
Congenital disease
Acquired disease
Disease factor
Multiple factors
Infection
Cellular damage
*********************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.