ஞாயிறு, 7 ஜூன், 2015

வெரிக்கோஸ் பிரச்னை ஆரஞ்சு தருகிறது தீர்வு

வெரிக்கோஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் கால்களை, பத்திரமாக பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வெரிக்கோஸ் பிரச்னையில், நாளப்புடைப்பு ஆபத்தை தரும். இந்த ஆபத்துக்கு தீர்வு தருவதாக அமைகிறது ஆரஞ்சு பழம். ரத்தக்குழாய்களுக்கு வலுவையும், அவற்றின் வால்வுகளுக்கு பலத்தையும் தருவதுடன், வீக்கத்தையும் ஒவ்வாமையையும் நீக்கி, ரத்த ஓட்டத்தையும் சீர் செய்கிறது ஆரஞ்சு பழம்.
சிட்ரஸ் சைனன்சிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட, ரூட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த பெருஞ்செடிகளின் பழங்கள் உணவாகவும், மருந்தாகவும், வழிபாட்டு மூலிகையாகவும் பயன்படுகின்றன. ஆரஞ்சில் காணப்படும் ஹெஸ்பெரிடின், ரூட்டின், நாரிஜெனின், வைட்டமின் ஏ, தையமின், பைரிடாக்சின், போலேட் போன்ற வைட்டமின் பி, வைட்டமின் சி, கரோட்டின்கள், சேந்தின்கள், பொட்டாசியம், கால்சியம் ஆகியன, சிறந்த பயோபிளேவனாய்டுகளாக செயல்பட்டு, நாள புடைப்புக்கும் அதனால் ஏற்பட்ட புண்களை ஆற்றவும் பெரிதும் உதவுகின்றன.
பயோபிளேவனாய்டுகள் நிறைந்த ஆரஞ்சு பழச்சாறை, தினமும், 60 முதல் 120 மிலி ஒரு வேளை இளஞ்சூடான நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால், நுண்ணிய குழாய்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆரஞ்சு பழச்சாற்றை கடுக்காய்த்தூளுடன் சேர்த்து பிசைந்து, இளந்தீயில் சூடாக்கி, மெழுகுபதம் வந்ததும் வெயிலில் காயவைத்து, பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
2 முதல் 4 கிராம் அளவு வரை இதன் பொடியை மாலையில், 100 மில்லி லிட்டர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், நுண்ணிய ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் ரத்தக்குழாய் அடைப்பு நீங்கும். ஆரஞ்சு பழத்தை சாலட், ஜுஸ், ஜாம், ஜெல்லி அல்லது டீ போன்ற, ஏதேனும் ஒரு வடிவத்தில் உட்கொள்வது நல்லது.
பழங்களில் உள்ள நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. குறைந்த அல்லது பூஜ்ஜிய ஆற்றலுடைய நார்ச்சத்துகள், குளூக்கோஸ் கிரகித்தலை தாமதப்படுத்துவதுடன், இன்சுலின் தடையை நீக்கி, செல்களின் இன்சுலின் ஏற்கும் திறனை அதிகரிக்கின்றன.
பெர்ரி, ஆப்பிள், பேரீச்சை, நாவல் போன்றவற்றில் போதுமான அளவு நார்ச்சத்தும், மெக்னீசியமும் உள்ளதால், அன்றாடம் குறைந்தளவில் இதனை உட்கொள்ளலாம். மருந்துக்கடைகளில் கிடைக்கும் சிட்ரஸ் பிளேவனாய்டுகள் சேர்ந்த, சி.வி.பி. கேப்சூல் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நாளப்புடைப்பு மற்றும் அதனால் தோன்றிய புண்கள் விரைவில் ஆறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.