ஞாயிறு, 25 அக்டோபர், 2015

பித்தத்திலிருந்து விடுபட!

piththam
பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது.
உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது.
தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் – தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச்சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை:-
  1. பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், இதனிடம் நெருப்பின் குணம் அதிகமாக இருப்பதாலும், நீரின் குணங்கள் குறைவாக இருப்பதாலும், தன் திரவகுணத்தை விட்டுவிட்டு தன்னைச் சார்ந்த வாயு, ஈரத்தன்மை இவற்றின் காரணமாக உடலுக்கு உதவி புரிகிறது. அதாவது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி’ என்று அழைக்கப்படுகிறது. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன்னிருக்கையிலிருந்து கொண்டே, ஊட்டமளிக்கிறது.
  1. ரஞ்சக பித்தம்: இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு அங்குள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது.
  1. ஸாதக பித்தம்: இது இதயத்தை தங்கு மிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தந்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவைகளைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது.
  1. ஆலோசக பித்தம்: இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது.
  1. ப்ராஜக பித்தம்: சருமத்தை உறைவிடமாகக் கொண்டு சருமத்திற்கு ஒருவித ஒளியைக் கொடுத்து அதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இது எண்ணெய் குளியல், நீராடுதல், மேற்பூச்சு இவற்றைப் பக்குவப்படுத்தி ஊட்டமளித்து ஒளியை வெளிப்படுத்துகிறது.
காரம், புளி, உப்புச்சுவை, புலால் உணவு வகைகளில் மீன், கோழி, நண்டு வகையறா, எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், காபி, டீ, பேல்பூரி, பாணிப்பூரி, சமோஸா, பாஸ்தா, நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், கையேந்தி பவனில் விற்கப்படும் சூப், சுண்டல், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்குக் காரணமாகி சுமார் 40 வகையான பித்த நோய்களை ஏற்படுத்துகின்றன. அவை: வருமாறு:-
உடல் முழுவதும் நெருப்பின் அருகில் உள்ளது போன்ற வியர்வையுடன் கூடிய எரிச்சல். உடலில் ஒரு பகுதியில் வியர்வை ஏற்படாமல் உஷ்ணம் தோன்றுதல், உடலில் காட்டுத் தீ போன்ற எரிச்சல், , கண் முதலிய பொறிகளில் எரிச்சல், முகம், உதடுகள்,
வாயின் மேல் பாகம் இவற்றில் எரிச்சல் , உடலின் உள் எரிச்சல், தோலில் தோன்றும் எரிச்சல், தோளில் எரிச்சல், புகைவது போல ஏப்பம் விடுதல், புளித்த ஏப்பம், கடுமையான உஷ்ணம், அதிகமாக வியர்த்தல், உடல் நாற்றம், புலன்களின் அழற்சி, இரத்தம் கருத்து நீற்றுப் போதல், மாமிசம் கருநிறமடைந்து கெட்ட நாற்றம் வீசுதல்,
தோல், அதனுள் உள்ள மாமிசம் இவற்றின் பிளவு, தோலின் உள்ளும், புறமும் வெடிப்பு, இரத்தக்கட்டி, எரிச்சலுள்ள இரத்தக் கொப்புளம், தோலின் மேல் உண்டாகும் வட்டமான தடிப்பு, இரத்த பித்தம், உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல், உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல், ரத்தம் நீல நிறமாக மாறுதல்,
கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம், மஞ்சள் காமாலை, வாயில் கசப்புச் சுவை, வாயில் இரத்தத்தின் நாற்றம், வாயில் கெட்ட நாற்றம், தாகம் அதிகரித்தல், உணவில் போதும் என்ற எண்ணம் தோன்றாமை, வாய் வேக்காடு, தொண்டைக்குள் வேக்காடு, கண் நோய்.
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.