மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.
நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.
சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.
சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
Tamil - Suraikai
English - Bottle gourd
Sanskrit - Tumbini
Telugu - Sorakaya
Malayalam - Titalauki
Botanical name - Lagenaria siceraria
வாதபித்தம் வாயருசி வன்பீரி கஞ்சீதம்
ஓதிருத்து நோயுமுண்டாம் உள்ளனல்போம்-ஓதத்
திருப்பாற் கடற்றிருவே தீக்குணத்தை மேவுஞ்
சுரக்காயைத் தின்பவர்க்குச் சொல்
-அகத்தியர் குணவாகடம்
பொருள் - உடல் சூடு தணியும், சிறுநீர் நன்கு வெளியேறும், குளிர்ச்சியுண்டாக்கும், உடலுக்கு உரத்தைக் கொடுத்து பித்தத்தைச் சமப்படுத்தும்.
உடல் சூடு நீங்க
இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.
சிறுநீர் பெருக
மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.
பித்தத்தைக் குறைக்க
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.
· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
· உடலை வலுப்படுத்தும்.
· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.
· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
· குடல் புண்ணை ஆற்றும்.
· மலச்சிக்கலைப் போக்கும்
· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.
சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.
சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.
ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.