எல்லா வயதினருக்கும் மூக்கடைப்பு என்பது ஜலதோஷம் அலர்ஜி போன்ற சாதாரண காரணங்களால் ஏற்படுகிறது சில முக்கியமான காரணங்களைப் பார்ப்போம்.
ஒரு சிலருக்கு மூக்கினுள் உள்ள "செப்டம்" எலும்பு வளைந்து இருக்கும் இதனால் சுவாசப்பாதையில் எலும்பு குறுக்கிட்டு மூக்கடைப்பு இருக்கும் மூக்கினுள் இருக்கிற அந்த வளைந்த எலும்பை எஸ்.எம்.ஆர். முறையில் முழுவதுமாக அகற்றிவிடுவார்கள் இதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. என்ன... மூக்கு கொஞ்சம் கொள கொளவென்று ஆடிக்கொண்டிருக்கும்.
ஒரு பக்கம் படுத்தால் அந்தப் பக்கமாக மூக்கு சரிந்து இருக்கும் அவ்வளவுதான். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை இப்படி எலும்பை எடுப்பது அவர்களின் எலும்பு வளர்ச்சியையே பாதிக்கும் என்பதால் எஸ்.எம்.ஆர். முறை சிகிச்சை அவர் களுக்குச் செய்யப்படுவது இல்லை.
வளைந்த எலும்பைச் சரிசெய்கிற இன்னொரு முறை... "செப்டோ பியாஸ்டி" இதில் மூக்கு எலும்பு முழுவதையும் அகற்றாமல் எந்தப் பகுதி வளைந்திருக்கிறதோ அந்த இடத்தை மட்டும் மாற்றி நேர்செய்கிறார்கள் மூக்கடைப்புக்கான அடுத்த காரணம் "பாலிப்" என்கிற சதை.
"பாலிப்" என்கிற சதை வளர்ச்சியை "பீல்டுக்ரேப்ஸ்" என்பார்கள். உரித்த திராட்சைப்பழங்களைப் போல... கொத்துக் கொத்தாகத் தோற்றம் அளிப்பதால் இப்படி சொல்கிறார்கள் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-
மூக்கு ஜவ்வு, மினிக்கஸ் மெம்பரைன் போன்ற பகுதிகளில் அலர்ஜியாலோ, "காளான்" கிருமிகளாலோ இந்தச் சதை வளர்கிறது. இது வளர வளர சைனஸ் அறைகளின் வாசலை அடைக்கிறது. அதனால் சைனஸில் சளி தேங்கி, சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக "பாலிப்" மேலும் பெரிதாக வளரத் துவங்குகிறது.
இப்படி "பாலிப்" சைனஸ் என்று போட்டி போட்டுக்கொண்டு தொல்லை தொடங்கும்போது பேச்சு பாதிக்கப்படும். மூக்கடைத்தபடி பேசுவார்கள். வாயால்தான் சுவாசிக்க வேண்டிவரும். வாசனை டேஸ்ட் பிரச்னைக்கும் ஆளாகிறார்கள். "பாலிப்" குறையைப் போக்குவதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்தும் இவர்கள் குணமாக வழியிருக்கிறது!
"பாலிப்" வளர்ச்சி உள்ளவர்களுக்கு என்ன சிகிச்சை செய்கிறார்கள். பாலிப்களை மூக்கிலிருந்து பிரித்து எடுப்பதே சிறந்த வழி. இதை பாலிபெக்டமி என்கிறார்கள் அறுவைசிகிச்சை செய்து இந்த பாலிப்களை வேரோடு பறிக்க வேண்டும். இல்லையென்றால் திரும்பத் திரும்ப வளர ஆரம்பிக்கும். சி.டி. ஸ்கேன் மூலம் அதன் வேர்கள் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைக் கண்டுபிடித்து எண்டோஸ்கோபிக் முறையில் அதை அடியோடு அகற்றுவதே நிரந்தரதீர்வைத் தரும்.
சிலவகை பாலிப்கள் ஆஸ்பர்ஜில்லஸ் என்கிற காளான்களால் ஏற்படுகிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் இந்தச் சதையானது வளர்ந்து மூளைவரை பாய்ந்துவிடுகிறது. இந்தச் சிக்கலான கட்டத்தில் மிகத் திறமையான அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் மட்டுமே, சரியான முறையில் நோயாளிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் இந்த "பாலிப்"களை அகற்ற முடியும்!
நம்முடைய முகத்தின் ஆபத்தான பகுதி எது தெரியுமா?
மூக்கை ஒட்டி அமைந்துள்ள அந்த முக்கோண ஏரியாதான். ஏராளமான ரத்தக்குழாய்கள் இந்த முக்கோணப் பகுதி வழியாகத்தான் மூளைக்குச் செல்கின்றன. இந்தப் பகுதியில் ஏதேனும் சின்ன ரத்தக்காயமோ புண்ணோ உண்டானால் கூட... அதன் கிருமிகள் உடனடியாக மூளைக்குச் சென்று மரணத்தையே ஏற்படுத்தலாம்.
மூக்கிலும் இதேபோல ஒரு ஆபத்தானபகுதி இருக்கிறது அது மூக்கின் உள்ளே மேல்பகுதி அதாவது மூளையின் அடித்தளத்தை தொட்டபடி செல்கிற சுவாசவழி. இதை ஆபத்தான மூக்குப்பகுதி என்கிறார்கள் எண்டோஸ்கோபிக் ஆபரேஷன்கள் மிக மிக கவனமாக செய்யப்பட வேண்டும். கொஞ்சம் தவறினாலும் மூளைப் பகுதியைத் துளைத்து பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.
என்னிடம் ஒரு கல்லூரி மாணவன் வந்தான்... அவனுக்கு மூக்கில் இந்த ஆபத்தான பகுதியில் பாலிப் வளர்ந்திருந்தது. கவனிக்காமலே விட்டதால் பாலிப் பெரிதாக வளர்ந்து இதனால் அவனது இரண்டு கண்களும் அகலத்தில் விலகி திரும்பியிருந்தது. இதுபோல் ஆவதற்கு "தவளைமுகம்" என்கிறோம். அந்த மாணவனுக்கு எண்டோஸ்கோபிக் முறையில் மூக்கில் ஆபரேஷன் செய்து "பாலிப்"பை நீக்கி, கண்கள் சரிசெய்யப்பட்டன.
நமக்குத் தெரிந்த சின்னச் சின்ன விஷயங்களாலும் மூக்கடைப்பு ஏற்பட்டு, பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.