''அரிசி, பருப்பு, காய்கறி, பழம்... என்று எதை எடுத்தாலும்.... விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும்; பளபளப்பாக இருக்க வேண்டும்; அதில்தான் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்கிற நம்பிக்கை, இங்கே பலரிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால், இதில் துளிகூட உண்மை இல்லை!
'என்ன விலை விற்றால் நமக்கென்ன?' என்று கவலையில்லாமல் வாங்கத் துணியும் வசதிமிக்கவர்களாக இருந்தாலும் சரி... பொருட்களின் விலைவாசி பரபரவென்று உயர்ந்துகொண்டே போவதைப் பார்த்து பதறுகிற நடுத்தர மற்றும் ஏழைகளாக இருந்தாலும் சரி... இந்த உண்மையைப் புரிந்துகொண்டால்... தேவையில்லாமல் பணம் வீணாவதைக் கட்டுப்படுத்த முடியும்'' என்று சொல்லி திரும்பிப் பார்க்க வைக்கும் சென்னை, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ உணவியல் துறை விரிவுரையாளர் குந்தலா ரவி, ஒவ்வொன்றாக பட்டியலிடுகிறார்... உங்களின் பாக்கெட்டையும், உடலையும் பலமாக்க!
''நாம் உட்கொள்ளும் உணவானது... தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்கள் (அசைவ உணவுகளையும் இந்த வகையிலேயே அடக்கலாம்) என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து வகை உணவுப் பொருட்களிலும் வகைக்கு ஒன்று கட்டாயம் நம் உணவில் இருக்க வேண்டியது அவசியம். இதில் சரியான தேர்வையும், விலைவாசிக்குத் தகுந்த விகிதாச்சாரத்தையும் கடைப்பிடித்தால் போதும். இதைத்தான் உட்கொள்ளவேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை.
தானியத்தில் தேர்வு: தானிய வகைகளைப் பொறுத்தவரை, 70 ரூபாய், 100 ரூபாய் விலையில் கிடைக்கும் அரிசிதான் பிரதானம் என்பதில்லை. அவற்றிலிருக்கும் அதே சத்துக்கள்தான், ரேஷன் கடையில் இலவசமாக தரப்படும் அரிசியிலும் இருக்கின்றன. 20 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசியிலும் இருக்கின்றன. அதேபோல அரிசிதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் மற்ற தானிய வகை உணவுப் பொருட்களையும் பயன்படுத்தலாம். அவற்றிலும் அதே சத்துக்கள்தான் உள்ளன. கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்ற மற்ற தானியங்களையும் உணவாகப் பழக்க வேண்டும்.
பருவகால காய்கறிகள்: குறிப்பிட்ட காய்கறிகளையே வாங்காமல், அந்த வகையில் உள்ள வேறுரக காய்களையும் தேர்வு செய்யலாம். உதாரணமாக, பீன்ஸ் வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும்போது அதன் விலை ஏகத்துக்கும் இருந்தால், அதே ரகத்தைச் சேர்ந்த அவரைக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை வாங்கலாம். குறிப்பிட்ட பருவத்தில் அதிக வரத்துள்ளவையாகப் பார்த்து வாங்க வேண்டும்.
வெங்காயத்தைப் பொறுத்தவரையில் அதிகமானோர் சின்ன வெங்காயத்தைதான் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, சுவை மாறுபாடு மட்டுமே. கீரை வகைகளில் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்றவற்றின் விலை எப்போதுமே குறைவுதான். எல்லா வகை கீரைகளைப் போன்றே இதிலும் கால்சியம், அயர்ன் சத்துக்கள் பரவலாக இருக்கின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் இவற்றையும் உணவில் நிறைய சேர்த்து, அதிக பயன் பெறலாம்.
நம்மூர் பழங்கள்: ஆஸ்திரேலிய ஆப்பிள், அமெரிக்க ஆரஞ்சு, நியூசிலாந்து திராட்சை போன்றவற்றில்தான் சத்துகள் நிறைந்திருக்கின்றன என்கிற நினைப்பு பலரிடமும் இங்கே நிறைந்திருக்கிறது. இவற்றைவிட, நம்ஊரில் விளையும் வாழை, சப்போட்டா, கொய்யா, பப்பாளிப் பழங்களிலேயே அதிக சத்துகள் நிரம்பியுள்ளன. கிலோ 200 ரூபாய் வரை விற்கும் ஆப்பிளைவிட, 40 ரூபாய்க்கும் விற்கும் கொய்யா சிறந்தது. குறைந்த செலவில் அதிக ஆரோக்கியம் பெறலாம்.
பால் பொருட்கள்: பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை, அனைத்துமே அதிக விலைதான். காரணம், மற்ற உணவுப் பொருட்களைவிட, இவற்றில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்று மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கைதான். ஆனால், எல்லாவற்றையும் போல பாலும் ஓர் உணவுப் பொருள் அவ்வளவுதான். பாலை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு நிறைய பால் கொடுக்க வேண்டுமே என்பார்கள் சிலர். தாய்ப்பாலைத்தான் மூன்று வயதுவரை கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, மாட்டுப்பால் என்பது முக்கியமாக கொடுக்க வேண்டும் என்பதில்லை. வழக்கமாக நாம் உண்ணும் உணவுகளையே கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்தினால் போதும். இதனால், பணம் மிச்சமாவதோடு, அதிக சத்தும் கிடைக்கும்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.