“சே… என்ன நாற்றம் இது?’ என, மற்றவர்களிடமிருந்து வெளியேறும் வியர்வை நாற்றத்தை வெறுக்கிறோம்.
உங்கள் மீது நாற்றம் எடுக்கிறதா என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை எனில், உங்கள் தாயிடம் கேளுங்கள். அவர் தான், உண்மையான பதிலை சொல்வார்.
உடல் துர்நாற்றம், அது வெறுக்கத்தக்கதாக இருந்தாலும், வியர்வை வெளியேற்றுபவரை விட, அருகில் இருப்பவருக்கு தான் கஷ்டத்தைத் தரும்! நம் நாற்றம் நமக்குத் தெரியாத வகையில் தான், நம் மூக்கு பழக்கப்பட்டிருக்கிறது. நண்பர்கள், குடும்பத்தினர், காதலர்கள் என யாருமே, வெறுத்து ஓடச் செய்யும் சங்கடமான விஷயம் இது.
ஒவ்வொருவருக்கும் தனி வாசம் உண்டு. இந்த வாசம், தனித்துவம் வாய்ந்ததாக இருப்பதால், எளிதில் அடையாளம் காணலாம். வாசத்தை நுகர்வது, ஆதிமனிதன் முதலே இருக்கும் சுபாவம்.
கற்கால மனிதர்கள், இந்த வாசத்தை வைத்து தான், வழிப் போக்கர்கள், இரை, மூதாதையர்கள், விலங்குகளை அடையாளம் கண்டனர். நாகரிகம் வளர்ந்த பின், மனிதனின் வாசம் முக்கியத்துவத்தை இழந்தது. தற்போது, தனிப்பட்ட வாசம், அவசியமற்ற, கற்கால பழக்கம் என ஒதுக்கித் தள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது.
ஒரு சில நறுமணங்கள் அல்லது மிகவும் வெறுக்கத்தக்க வாசங்களை தான் நாம் இப்போது உணர்கிறோம்.
ஆனால், குழந்தைகள் வாசங்களைச் சட்டென கிரகித்துக் கொள்வர். பிறக்கும்போதே, தாயின் வாசம் அவற்றுக்கு மிக நன்றாகத் தெரிவதால் தான், தாய் வருவதை இருட்டிலும் உணர்ந்து கொள்வர்.
சிலர் உடல் வாசனை நன்றாக இருக்கும்; சிலர் வாசனை, அருவருக்கத்தக்கதாக இருக்கும். துவைக்காத துணியை அணிவது, நோய் வாய்பட்டிருப்பது, இயற்கையாகவே நாற்றத்தன்மை கொண்டிருப்பதால், இந்த நிலை.
உடல், வாய் துர்நாற்றத்தால், காதல், புகழ், நட்பு ஆகியவற்றை இழப்பது போல், பவுடர் மற்றும் வாசனை திரவியங்கள் குறித்த “டிவி’ விளம்பரங்களில் காட்டப்படுவது உண்மையே.
வியர்வை நாளங்களிலிருந்து தான் வாசனை கிளம்புகிறது. “எக்ரைன்’ என்ற நாளம், உடல் முழுவதும் உள்ளது. இது, உடல் வெப்பநிலையைச் சீராக வைக்க உதவுகிறது. “அபோக்ரைன்’ வியர்வை நாளம், தொடை இடுக்கு மற்றும் அக்குளில் காணப்படுகிறது. இவை, நிறமற்ற, வாசமற்ற நீரைத் தான் வெளியேற்றுகின்றன.
ஆனால், காற்றோட்டம் இல்லாத இந்த பகுதிகளில் பாக்டீரியாக்கள் வளர்வதால், அவையே நாற்றத்தை உண்டாக்குகின்றன. வியர்வையை உறிஞ்சாத உடைகள் அணிவதால் இந்த நாற்றம் ஏற்படுகிறது. வியர்வையை பாக்டீரியாக்கள் சிதைப்பதால், நாற்றம் உருவாகிறது.
செபாக்கஸ் கிளாண்டு என்றழைக்கப்படும், சரும மெழுகுச் சுரப்பிகள், உடல் முழுதும் பரவிக் கிடக்கின்றன. இவற்றிலிருந்து வெளியாகும் மெழுகையும், பாக்டீரியா பதம் பார்ப்பதாலும், இறந்த செல்கள், பாக்டீரியாக்களுக்கு உணவாகப் பயன்படுவதாலும், உடலில் நாற்றம் ஏற்படுகிறது.
நோய்வாய்ப்பட்டவர்கள் மருந்து உட்கொள்வதால், அவர்களின் உடல் துர்நாற்றம் தனியாகத் தெரியும். கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் பாதிப்பு, மனநோய், நீரிழிவு நோய், சிறுநீரக பாதையில் தொற்று, புற்றுநோய் உள்ளவர்கள் உடலில், வித்தியாசமான நாற்றம் ஏற்படும். ரசாயன பரிசோதனை முறை அறிமுகம் ஆகும் முன், இந்த நாற்றத்தை வைத்தே, எந்த நோய் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
குழந்தைகளிடம் வியர்வை நாற்றம் அதிகம் ஏற்படாது. ஆனால், தினமும் குளிக்கவில்லை எனில், அழுக்கு சார்ந்த நாற்றம் அவர்களிடம் ஏற்படும். மூக்கொழுகுதல், அடினாய்டு, டான்சிலைட்டிஸ், வாயால் மூச்சு விடுதல், பல்லில் தொற்று, காதில் தொற்று, மூக்கில், காதில், பிறப்புறுப்பில், கூழாங்கல், பெரிய கொட்டைகளைத் தெரியாமல் திணித்துக் கொள்வதால் கூட, குழந்தைகளிடம் துர்நாற்றம் ஏற்படும்.
சிகரெட் புகைப்பது, மது குடிப்பது ஆகிய பழக்கங்கள் கூட, ஒருவரின் வாசத்தை மாற்றியமைக்கின்றன. மூச்சு, தோல், ஆடை ஆகியவற்றில் இந்த வாசம் தெரியும். இந்த வாசத்திலிருந்து விடுபட, சிகிச்சை உண்டு.
சாதாரண துர்நாற்றம் வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமை, பல், ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் ஏற்படுகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில், “பிரஷ்’ செய்தால் இந்த துர்நாற்றம் இருக்காது.
தினமும் இரண்டு வேளை குளித்தால், உடல் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். குழந்தைகள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு இது மிகவும் அவசியம். சமையல் சோடாவை தண்ணீருடன் கலந்து வைத்து, நீக்கோ போன்ற “டிரைகுளோரெக்சிடைன்’ அடங்கிய, பாக்டீரியாவை அழிக்கக் கூடிய சோப்பை தேய்த்து குளிக்கலாம்.
சோப்பை நேராக உடலில் தேய்க்காமல், பீர்க்கங்காய் நாரில் சோப்பை தேய்த்து, நாரால் உடலை சுத்தம் செய்யலாம். உடலின் வியர்வை இறந்த செல்கள், “செபம்’ என்றழைக்கப்படும் மெழுகு ஆகியவற்றை நீக்கும்.
தொடை, அக்குள் போன்ற இடங்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும். இதன் மூலம், காற்றுபடாத இந்த இடங்களில் பாக்டீரியாக்கள் வளர்வதும், துர்நாற்றமும் குறையும்.
குளித்த பின், பாடி ஸ்பிரே பயன்படுத்தலாம். ரோல் ஆன் மற்றும் வியர்வை வெளியாவதைத் தடுக்கும் ஸ்பிரேக்கள், வியர்வை சுரப்பிகளை அடைத்து, தொற்றுக்களை ஏற்படுத்தும். பவுடர் பூசுவது சருமத்துக்கு நல்லதல்ல. இவையும் தொற்றை உருவாக்குபவை தான். சுத்தமான, துவைத்த பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. காய்ந்து போன வியர்வை கொண்ட, அழுக்கு துணிகளை அணிவது நல்லதல்ல. வெயில் காலங்களில், காலிலிருந்து வியர்வை நாற்றம் கிளம்பும். காட்டன் சாக்ஸ், அதிகம் மூடப்படாத செருப்பு ஆகியவற்றை அணிவதன் மூலம் இந்த துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.