சனி, 5 ஜூலை, 2014

யோகாசனம்

யோகாசனம் செய்வதிற்கு முன்பும்.. பின்பும்..


யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.. இன்று அவசரகதியில் வாழ்ந்துக்கொண்டு வருகிறோம். நேரமில்லை என்ற நொண்டிச்சாக்கை நீங்கள் மூட்டை கட்டி வையுங்கள். உங்களின் உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்குங்கள் . முதலில் சற்று தினசரி தடுமாற்றம் ஏற்படும். பிறகு போகப்போக அன்றாட வாழ்க்கையில் யோகா ஓர் அங்கமாக மாறிவிடும்.



தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயிற்சி செய்யலாம்.
யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம் , அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.
நீர் ஆகாரமாக இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்கு மணி நேரம் கழித்தும் யோகப்பயிற்சிகளை செய்யவும்.
உங்களது உடலின் தன்மைக்கு ஏற்பவும், தினசரி பழக்கத்திற்கு ஏற்பவும் ஆரம்ப காலங்களில் குளியல் முறையை பின்பற்றவும்.
எப்போதும் குளித்த பின்பு யோகப்பயிற்சிகளை செய்தால் மனம் குதூகலமாக இருக்கும்.
யோகாசனப்பயிற்சிகளை செய்வதற்கு தரைவிரிப்பு சற்று கனமாக இருந்தால், சிலவகை ஆசனங்கள் செய்யும் பொழுது வழுக்காமல் இருக்கும்.
யோகாசனம், தியானம், மூச்சுப்பயற்சி இவைகளை எப்போதும் கிழக்கு முகம் பார்த்தோ, அல்லது வடக்கு முகம் பார்த்தோ பயிற்சி செய்தல் நல்லது.
பருத்தி துணியாலான உடைகளை அணிவது நல்லது.உடலை மிகவும் இறுக்கி, ஆசனங்கள் செய்யும் பொழுது அழுத்தி வலிப்பதாக இருக்கக்கூடாது. அதுபோலவே உள்ளாடைகள் மிகவும் தொளதொளவென்றும் இருக்கக்கூடாது.
நேரமில்லாமல் வருந்துபவர்கள், காலை நேரத்தில் தியானம், மூச்சுப்பயற்சி செய்துவிட்டு, மாலை நேரத்தில் யோகாசனப்பயிற்சியையும் செய்யலாம்.
நீண்ட நேரம் வெயிலில் அலைந்தாலும், நீண்ட நேரம் கண் விழித்திருந்தாலும் , அல்லது நீண்ட பிரயாணங்களில் உடல் களைதிருந்தாலும்இரவில் சரிவர தூக்கம் இல்லாமல் தவித்த நேரத்திலும் யோகாசன உடற்பயிற்சிகளை அன்று செய்யக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் யோகாசனப் பயிற்சி செய்தால் மேலும் மேலும் உடல் களைப்பும், உடல் வெப்பமும் அதிகரிக்கும் ஆகவே போதுமான ஓய்விற்கு பின்பு பயிற்சி செய்யவும்.
சைவ உணவுப் பழக்கமே யோகத்திலும், உடல் நலத்திலும் மிகுந்த நன்மையைச் செய்யும். அசைவ உணவு உட்கொள்பவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டே வந்தால் சில நாட்களில் சைவ உணவின் மகத்துவத்தை உடலின் செயல்பாட்டினால் அறிந்து கொள்வீர்கள், அதற்காக யோகாசனத்தை விட்டு விடாதீர்கள்.
யோகாசனம் செய்த பின்பு கட்டாயம் சவாசனம் என்ற ஓய்வு ஆசனத்தில் குறைந்தது10 நிமிடங்களாவது இருக்க வேண்டும். அப்பொழுது தான் உடலின் இரத்த ஓட்டம் சரியான நிலைக்கு வரும். மேலும் வியர்வைகள் சமன்பாட்டிற்கு வரும். உடல், மனம், சுவாசம் இவைகளில் தெய்வீக காந்த அலைகள் ஊடுருவி பாயும். எனவே சவாசனம் அவசியம் செய்யவும். பணிகளில் களைப்பு அதிகரித்திருந்தாலும் சவாசனத்தின் மூலம் உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்திகொள்ளலாம்.
யோகப் பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வை அடங்கிய பின்னால் தான் குளிக்க வேண்டும்.
யோகாசனப் பயிற்சிக்குப்பின்பு 15 நிமிடங்கள் கழித்து எளிய ஆகாரங்கலையோ, பழச்சாறு, அல்லது உணவு உட்கொள்ளலாம்,
யோகாசனப் பயிற்சி செய்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ அவசியம் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்களுக்குள் தலை தேய்த்துக்குளித்தல் நல்லது. இதனால் கபால சூடு தணியும். நீர் கடுப்பு, வெட்டைச் சூடு இவைகள் உடலை தாக்காது. அதுபோலவே எண்ணெய் தேய்த்துக்குளிக்கும், நாளில் வெயிலில் அலைவதும், கண்விழிப்பதும், குடும்ப சுகம் பெறுவதும் கூடாது.
யோகா பயிற்சி துவங்கும் பொழுது மாதா, பிதா, குரு, தெய்வத்தை பிரார்த்தித்து துவங்கவும். அதுபோலவே யோகப் பயிற்சியை நிறைவு செய்யும்போது சவாசனத்தை முடித்தபின் குரு வணக்கத்தோடு முடித்துக்கொள்ளவும். யோகாவை பதட்டத்துடன் பயிற்சி செய்யாமல், பொறுமையாகவும், விடா முயற்சியுடனும் பயிற்சி செய்து வந்தால் வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம்.
இவ் வலைத் தளத்தில் இடம் பெற்றுள்ள ஆசனங்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஆகிய அனைத்துத் தரப்பினரும் பயிற்சி செய்யலாம், ஆனால் உடல் வாகு,வேலையின் தன்மை, உணவு ஒழுக்கம், நோயின் தன்மை இவைகேற்ப பயிற்சி செய்வது மிக மிக கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்கள் கருவுற்ற காலங்களிலும், மாதவிடாய் காலங்களிலும், உடல் பயிற்சி இயக்கமான ஆசனங்களை தவிர்த்து, தியானமும் மூச்சுப்பயிற்சி முறைகளிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நன்கு சவாசனத்தில் ஓய்வு பெற வேண்டும். பகல் உறக்கத்தை தவிர்த்தல் நல்லது.
காலையில் பழவகைகளையும், அல்லது திரவ கஞ்சி போன்றவற்றையும், மதியம் முழு அளவில் உணவினையும், இரவில் பழவகைகள் அல்லது திரவ ஆகாரங்களை யோகா சாதகர்கள் எடுத்துக் கொள்வது மிக நல்லது.
யோகப் பயிற்சியில் அதிக ஆர்வமும் மிக உன்னதமான பல சித்திகளை பெறவும் ஆசைக்கொண்டவர்கள், கட்டாயம் நொறுக்குத்தீனிகளை தவிர்க்கவும். மேலும் தேவையில்லாமல் மூச்சுக் காற்று ( ஆவி) போகும்படி தொணதொணவென்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
************************************************************************************************************************
யோகாசனம் செய்வதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள்

பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும். இளமையாய் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும். மனவலிமை கிட்டும். மனஅழுத்தம் குறையும். மூளை இதயத்திற்கு நல்ல ஓய்வு கிடைத்து, அதன் திறனை மேம்படுத்தலாம். ஆயுளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஞாபக சக்தி பெருகும். உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம். சோம்பல், சோர்வு, கோபம், பயம் நீக்கலாம். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, சைனஸ் ஸ்பாண்டிலோடிஸ், தூக்கமின்மை, அதிக உடல் எடை, முதுகு வலி, வலிப்பு நோய் தலைவலி மற்றும் கழுத்து வலி, முதுகு மற்றும் மூட்டுவலி, மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மற்றும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
முக்கிய உணவுமுறைகள்:
நாம் எதை உண்ணுகிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்கிறது வேதம். நாம் உண்ணும் உணவில் புரதச் சத்து, கொழுப்பு, மாவுச்சத்து மற்றும் தாது உப்புகள் போன்றவை சரியான அளவு சேர்க்கப்பட வேண்டும்.
ஒவ்வொருவரும் அவரவர் உடல் தேவைக்கேற்றவாறு உண்ணப் பழக வேண்டும். உணவை நன்கு மென்று கூழாக்கி, எச்சில் கலந்து மெதுவாக உண்ண வேண்டும். உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு நீரருந்தலாம். உண்டு அரை மணி நேரம் பின்பே நீரருந்த வேண்டும். பழ உணவருந்தி பின்பு உண்ணலாம். காபி, தேநீர், மற்றும் குளிர்பானங்கள் அறவே கூடாது. உப்பு, புளி, மிளகாய், எண்ணெய், நெய், பால் பொருட்கள் மிகக்குறைந்த அளவில் உண்ண வேண்டும். இரவு படுப்பதற்கு இரண்டு அரைமணி நேரத்திற்கு முன்பு உணவை முடித்து விட வேண்டும். வெள்ளைச் சீனி, உப்பு, மைதா மாவுப் பொருட்கள் ஆகியவை மிக்க தீங்கு விளைவிக்கும் பொருட்கள். (three white dangerous ) பழ வகைகளில்; பிஞ்சுக்காய், நன்கு பழுத்த பழம் உண்ணலாம். உணவு வகைகளினை மிகக் குறைவாகவோ, வயிறு முழுவதும் நிரம்பும் வகையிலோ உண்ண வேண்டாம். நன்கு பசித்த பின் புசிக்கலாம். தினம் ஒரு கீரை உண்ணவும். உணவில் அவல், சத்து மிகுந்த தானிய பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். இரு உணவுகளுக்கு இடையில் குறைந்த பட்சம் 4 மணி நேர இடைவெளி விடவேண்டும். நொறுக்குதீனி நம் ஆயுளை குறைக்கும். கொட்டையுணவு (முந்திரி பிஸ்தா, பாதாம், தேங்காய் மற்றும் உலர்ந்த பழங்கள் (plums , அத்தி, பேரிச்சம்பழம்) அவசியம் உணவில் இடம் பெற வேண்டும். தேங்காய் எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றில் சமைத்தால் கொலஸ்ட்ராலைக் கூட்டி நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மலக்குடல் சுத்தமடைய நிறைய நீர் அருந்தி, நார்ச்சத்து உணவு உண்ண வேண்டும். தாகமெடுத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது எனப் பொருள். எனவே 3 முதல் 4 லிட்டர் வரை நீர் தினமும் குடிக்க வேண்டும். தினம் காலை காரட் சாறு, பீட்ரூட் சாறு, கொத்தமல்லிச்சாறு, கீரைச்சாறு, மூலிகைச்சாறு ஆகியவற்றில் ஏதாவதொன்றை அருந்தலாம். மதிய உணவில் அல்லது பாதி சமைத்த காய்கறி கலவை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை இரவு வேளை உணவைத் தவிர்த்து உண்ணா நோன்பிருக்கலாம்.
மாதம் ஒருமுறை பழச்சாறு மட்டும் அருந்தி உண்ணா நோன்பிருக்கலாம். பெரும்பான்மையான அசைவ உணவு நச்சுப்பொருள் மிகுந்த உணவாகையால் அதைத் தவிர்ப்பது நல்லது. அதிகாலை படுக்கையினை விட்டு எழுந்தவுடன் முழங்காலிட்டு அமர்ந்து 1 முதல் 2 குவளை மிதமான சூடுடைய நீரையோ அல்லது குளிர்ந்த நீரையோ பருக வேண்டும். டி.வி. பார்த்து கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, பேசிக்கொண்டோ சாப்பிடக் கூடாது. தினமும் இருமுறை மலக்குடலில் சேரும் கழிவுப்பொருட்களை வெளிப்படுத்திப் பழக வேண்டும். மிக மெல்லிய தலையணை வைத்து உறங்க வேண்டும். தினமும் அதிகாலை காலாற 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடக்கவும். இதனை எந்த வயதினரும் (10 வயதினருக்கு மேல்) பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இரவு உண்ட பின்பு 15 முதல் 20 நிமிடம் வரை உலாவவும். பதப்படுத்தப்பட்ட உணவு, கலப்பட உணவு, சுவையூட்டப்பட்ட உணவு, சிந்தெடிக் ரகங்கள் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும். மனம் சாந்தமாக இல்லாத போதோ, கவலையாக இருக்கும் போதோ, பசி இல்லாமல் இருக்கும் போதோ உணவருந்தக் கூடாது. அதிக உஷ்ணம், அதிக குளிர் ஏற்றப்பட்ட பொருட்களை உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். முகச்சாயம், உதட்டுச் சாயம், சில்க் போன்ற துணிகள், ரசாயனம் அதிகமுடையவைகளை அறவே தவிர்க்க வேண்டும். உணவருந்தும் போது நீர் பருகக்கூடாது. இரவில் நேரம் தாமதமாக உணவருந்தக் கூடாது. இரவில் அதிக உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது.கலந்து வாய் கொப்பளிக்கவும், தினமும் வாயின் மேற்சுவரிலுள்ள அசுத்தங்களை அகற்றி விடவும். காலை, மாலை இருவேளையும் கண்களை குளிர்ந்த நீரில் கழுவவும்.காய்கறிகள் மற்றும் பழங்களைக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தோலோடு உண்ணப் பழகவும். தினமும் சில நிமிடங்கள் பாட்டிலும், சிரிப்பிலும் மனதை ஈடுபடுத்துங்கள். தொலைக்காட்சிப் பெட்டிக்கும், உங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தூரத்தை நிர்ணயித்து அமரவும். அதிக நேரம் பார்ப்பதை குறைத்துக் கொள்ளவும்.

யோகத்தில் ஆசனத்திற்குப் பின்னுள்ள பிராணாயாமம் (சுவாசக் கட்டுப்பாடு) பிரத்யாகாரம் (நிலையற்றவைகளை எல்லாம் துறத்தல்) தாரணம் (நிலையான உண்மைப் பொருளைப் பற்றிடம்) தியானம் (பற்றியதை விடாமல் எண்ணுதல்) ஆகியவற்றிலும் படிப்படியாக முன்னேறி சமாதியும் (ஆண்டவனுள் ஆழ்ந்து விடல்) கூடிட இறையருளை நாடிடுவோம்.
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணயாமம் பிரத்தியாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ்ச்சமாதி
அயமுறும் அட்டாங்கமாவது யோகமே
-திருமூலர்.


1. சூரிய நமஸ்காரம்
எந்த ஒரு ஆசனம் செய்வதற்கு முன்பும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் முக்கியம். சூரிய நமஸ்காரம் என்பது மந்திரமும் ஆசனமும் சேர்ந்த ஒரு அபூர்வ அதிசக்தி அளிக்கும் படைப்பாகும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன. சூரிய நமஸ்காரம் செய்தபின் இயல்பான மூச்சு வரும் வரை ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னரே மற்ற ஆசனங்கள் செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரம் (சூரிய வணக்கம்)வாழ்க்கைமுறை சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுபட சில வழிமுறைகள்


சூர்ய நமஸ்காரம் – விளக்கம்
சூரிய நமஸ்காரம் என்பது சூரியனை வணங்குதல் என்று பொருள்.இது பண்டைய காலம் முதலே, சூரியனை வழிபடுதல் முறைகளில்ஒன்றாக கருதப்படுகிறது. ஆசனம், பிராணயாமம், மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பல்வேறுவிதங்களில உடல் பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட ஒரு முழுமையான உடற்பயிற்சியாக சூர்ய நமஸ்காரம் உள்ளது.சூர்யநமஸ்காரம் பன்னிரண்டு ஆசனங்கள் ஒருங்கிணைந்த ஆசன முறை ஆகும்.
சூரிய நமஸ்காரம் சுவாசம், உடல் மற்றும் மனம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செய்யும் பயிற்சிமுறை. சில காரணங்களால்உடல் பயிற்சியோ அல்லது யோகாவோ செய்ய முடியாதவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்வதன் மூலம் சிறந்த பலனை பெறுவர். சூர்யநமஸ்காரத்தில் உள்ள ஆசனங்கள் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது. சூர்யநமஸ்காரம்.நம் முன்னோர்கள் நமக்கு தந்த ஒரு அற்புத பயிற்சி. நாம் இயற்கையை விட்டு விலகி இருக்கும் இந்த நவீன காலத்தில்சூரிய நமஸ்காரம் நமது உடல்,மனம் போன்றவற்றினை நன்கு செழுமைப்படுத்த உதவுகிறது.





கீழே குறிப்பிட்ட பனிரெண்டு நிலைகள் செய்த பின்னர் சாதாரண நிலைக்கு வர வேண்டும்.



Pose 1 Pose 2



Pose 3 Pose 4




Pose 5 Pose 6



Pose 7 Pose 8


Pose 9 Pose 10


Pose 11 Pose 12





யார் செய்யலாம்?


சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம்.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.
சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை. பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.








எவ்வளவு நேரம் செய்யலாம்?



சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையாக வரும்.ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.பின் உங்களால் இயன்ற முறை செய்யலாம்.ஆனால் அதிக வலிவுடனோ அல்லது மிகவும் சிரமப்பட்டு செய்வது மிகவும் தவறு.






எப்பொழுது செய்யவேண்டும்?
காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும். தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும்.






எச்சரிக்கை
முதுகுப் புறத்தில் பிரச்சினை இருந்தாலோ, இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும்.




சூரிய நமஸ்காரத்தின் பயன்கள்

இதயத்தை முடுக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.
சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கி கசக்கிப் பிடித்து விடுவது போன்று மசாஜ் செய்யப்படுகின்றன.
மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடுகிறது.
பசியின்மை பறந்தோடுகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிக மிக தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன. இருப்பினும் இடையறாத முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க அளவில் வலுவடைகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென என்று கூறப்படுகிறது.வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஓங்கும்.
சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன. குறிப்பாக கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், தொடை, கெண்டைக்கால், கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சியால் உரம் பெறுகின்றன.
கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும்.
தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே சரியாக மலம் (கழிவுப் பொருட்கள்) வெளியேறுவதால் உடலில் விரும்பத் தகாத துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இளமை, நலம், அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது.


*****************************************************************
நின்றநிலை ஆசனங்கள் :
1.தாளாசனம்




செய்முறை...

முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். பின்னர் நுனிக்கால்கள் தரையில் இருக்க உடலை மேல் நோக்கி உயர்த்தவும். கைகள் இரண்டையும் ஒன்றாக இணைத்த படி மேலே தூக்கி உள்ளங்கைகள் மேலே பார்த்த படி இருக்கவும்.

உடல் எடை முழுவதும் நுனிக்கால்களில் தாங்கி இருக்கும்படி செய்ய வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 3 முறை செய்யலாம். கைகளை மேலே உயர்த்தும் போது மூச்சை உள் இழுத்தும், ஆசனத்தின் போது இயல்பான மூச்சிலும் விடும் போது வெளி மூச்சு இருக்க வேண்டும். குதிகால் வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது.

பயன்கள்.....

நுரையீரல், நெஞ்சுப்பகுதி பலன் பெரும். உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். ஆஸ்துமா நோய் குணமடையும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.


ஆன்மீக பலன்கள் : மனம் ஒருமைப்படும்
**************************************************
2.உட்கட்டாசனம்




செய்முறை...உடலை இறுக்கமாக இல்லாமல் தளர்த்தி வைத்துக்கொண்டு நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின்னர் 2 கால்களுக்கு இடையே ஒரு அடி அகலம் இருக்குமாறு கால்களை விரித்து வைத்துக் கொண்டு கைகளை தோள்பட்டை உயரத்துக்கு நேராக முன்னே நீட்ட வேண்டும்..பின்பு உடலை மெதுவாக கீழே இறக்கி நாற்காலி மீது அமருவது போன்று மெதுவாக உட்கார வேண்டும்.

முதுகெலும்பு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன் முன்பக்கமாகவோ, பின்பக்கமாவோ உடலை வளைக்கக் கூடாது. முதுகெலும்பு 90 டிகிரி போன்று நேராக இருக்க வேண்டும். இது தான் உட்கட்டாசனம் ஆகும். முதலில் 5 முதல் 10 வினாடிகள் செய்யலாம். தினந்தோறும் நன்றாக பயிற்சி செய்த பின்னர் 20 முதல் 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும்.

இந்த ஆசனத்தை செய்யும் போது மூட்டுவலி ஏதாவது ஏற்பட்டால் வலி நீங்கிய பின்னரே செய்ய வேண்டும். உட்கட்டாசனம் செய்யும் போது சாதாரண நிலையில் மூச்சை வெளியில் விட வேண்டும். செய்து முடித்த பின்னர் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும்.

பயன்கள்....

கணுக்கால் மூட்டுவலி, கால் மூட்டு வலி சரியாக இந்த ஆசனம் பயன்தருகிறது. தொடர்ந்து செய்து வந்தால் கால் மூட்டுகளில் வீக்கம் இருந்தாலும் குணமாகும். தோள் பட்டை வலி சரியாகும். நடைப்பயிற்சி செய்யாமலேயே பயிற்சியை செய்தது போன்ற பலனையும், முதுகெலும்புக்கு பலத்தையும் உட்கட்டாசனம் கொடுக்கிறது.

**************************************************************
3. அர்த்த சக்கராசனம்





மனம் : முதுகெலும்பு
மூச்சின் கவனம் : உடலை வளைக்கும் போது உள்மூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு. தளரும்போது வெளிமூச்சு.


உடல் ரீதியான பலன்கள் :
உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன. முதுகுத்தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கின்றது. இது பாதஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அந்த ஆசனத்தின் பலன்களை இதுகூட்டுகின்றது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.


குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன. தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்பு நீங்குகிறது.


ஆன்மீக பலன்கள் : உடலின் சமநிலை, தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கின்றது.


எச்சரிக்கை : இதயநோய் உள்ளவர்கள் இதனை மெதுவாகச் செய்ய வேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதைத் தவிர்க்கவும். அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக்கொண்டு செய்யலாம். முதுகெலும்பு தேய்ந்தவர்கள் மற்றும் கழுத்துவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.