திங்கள், 28 ஜூலை, 2014

ஸ்டெம் செல்


   ரு மரத்தின் கிளைகளை வெட்டியெறிந்துவிட்டால் மீண்டும் துளிர்க்கும். புதிய கிளைகள் வளரும். மனிதர்களின் உறுப்புகளில் இத்தகைய வளர்ச்சி சாத்தியமா? சாத்தியம் என்கிறது நவீன உலகின் மறு உற்பத்தி சிகிச்சை முறை (Regenarative Theraphy). இறந்துபட்ட அல்லது செயலிழந்த மனித உறுப்புகளில் அதன் செல் மற்றும் திசுக்களை மறு உற்பத்தி செய்வதன் மூலம் அந்த உறுப்புகளை திரும்பப் பெறும் முறை இது. ஸ்டெம் செல்கள், ஜுன்கள் மற்றும் அதன் வளர்ச்சிக் காரணிகளை தூண்டும் தொழில்நுட்பத்தின் உதவியால் இது சாத்தியம் என்கிறது இன்றைய நவீன மருத்துவம். பழுதுபட்ட மனித உறுப்புகளை வளரச் செய்வதற்கு (வளர்ந்து செயல்படச் செய்வதற்கு) பல்வேறு வழிமுறைகள் நவீன மருத்துவ வல்லுநர்களால் ஆராயப்பட்டு வருகின்றது. 

இந்த மறு உற்பத்தி சிகிச்சையின் முக்கிய நோக்கம் உறுப்புகளில் செயல்படாத குறிப்பிட்ட செல் வகையினை அவ்வுறுப்பின் உயிருள்ள செல் பகுதியிலோ அல்லது வெளிமூலங்களிலிருந்தோ பெறப்பட்டு அதனை பெருக்கமடையச் செய்வதே. சாதாரணமாக நமக்கு காயம் ஏற்பட்டவுடன் அதில் நோய்க்கிருமிகள் புகா வண்ணம் தடுக்க நோய் காப்பு அரணும் (ஒம்ம்ன்ய்ர் ள்ஹ்ள்ற்ங்ம்) அதன் பின்னர் காயத்தினை சரிப்படுத்தும் செயலும் நடைபெறுகின்றது. இந்த காயத்தினை சரிப்படுத்தும் செயல் அக்காயத்திலுள்ள இறந்துபட்ட பகுதியில் புதிய செல்கள் தோன்றுவதன் மூலம் சாத்தியமாகின்றது. புதிய செல்களை தோற்றுவிக்க செல்களுக்கு ரத்த ஓட்டத்தினை அதிகரிப்பது இன்றியமையாததாகிறது.

ஸ்டெம் செல் சிகிச்சையின் வரலாறு

முதன் முதலில் ருதால்ஃப் லுட்விக் கர்ல்விர்சோவ் (1821- 1912) என்பவர் ஒரு செல்லிலிருந்து புதிய செல் பிரிந்து வளரும் என்ற நவீன செல் கோட்பாட்டை வெளியிட்டார். இவரே நவீன செல் பற்றிய அறிவியலின் முன்னோடி. இவருடைய மாணவரான ஜூலியஸ் பிரடெரிச் கொஹெய்ம் புண்களில் பழுதுபட்ட செல்களின் மறுசீரமைப்பு புதிய செல்கள் ரத்த ஓட்டத்தின் மூலமாகவே எலும்பு மஜ்ஜை (Bone Marrow)யிலிருந்து புண்களை வந்தடைந்து வளருகின்றது என்பதனையும் கண்டறிந்தார். P.E  டொன்னால் தோமஸ் ஆராய்ச்சியில் எலும்பு மஜ்ஜை குறைபாடுள்ள நோயாளியின் ரத்த ஒட்டத்தில் மற்றொருவரிடம் எடுக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை செல்களை செலுத்தி ஆராய்ந்தபோது புதிய எலும்பு மஜ்ஜை உருவாகியதுடன் புதிய ரத்த செல்களும் உருவானது.

முதன் முதலில் எலியின் உடலில் மாற்றிவைக்கப்பட்ட எலும்பு மஜ்ஜைதான் செல்களின் இந்த சுய உற்பத்தியினை நிகழ்த்திக் காட்டியது. இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்கள் கனடா ஆராய்ச்சியாளர்களான மக்குல்லாக் மற்றும் ஜேம்ஸ்டில் ஆகியோர்களாவர். அதன் பிறகு 1976-இல் பிரைடென்ஸ்டெய்ன் மற்றும்  அவருடைய ஆராய்ச்சிக் குழுவினரும் இணைந்து எலும்பு மஜ்ஜை செல்களை தனிமைப்படுத்தி அதிலிருந்து முழுமையான வளர்ச்சியடைந்த எலும்பு செல்களை உருவாக்க முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டினர். இன்று மருத்துவ உலகில் பல்வேறு வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஸ்டெம் செல்களை உருவாக்கி வருகின்றனர்.

உண்மையான ஸ்டெம் செல்கள் முடிவிலாத சுய பிரிதலுக்கு உட்படுபவை, மரபொத்த உயிரிகளை உருவாக்க பயன்படுபவை. ஒரு உயிரியின் வாழ்நாள் முழுவதும் பிரிந்து கொண்டே இருப்பவை. அவ்வாறு பிரிவதன் மூலம் புதிய செல் வகைகளை உருவாக்குபவை. சாதாரணமாக மனித செல்கள் பிரிந்து இரு வேறான சேய் செல்களை உருவாக்கும். இவ்விரு சேய் செல்கள் தங்களுள் சமிக்சைகளை (Signals) தூண்டுவதன் மூலம் இரு வெவ்வேறான புதிய சேய் செல்களை உருவாக்கும். இவ்வாறு ஒரு தன்னிச்சையான தொடர் பிரிதலில் செல்கள் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும்.

ஸ்டெம் செல்களின் மூலம்

ஸ்டெம் செல்களின் பிறப்பிடம் அல்லது மூலமாக விளங்குவது ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையாகும். எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ஸ்டெம் செல்கள் முறையே ஹேமடோபோயடிக் ஸ்டெம் செல்கள் (HSC) மற்றும் மெசன்கைமல் ஸ்டெம்செல்கள் (MSC)  ஆகும். HSC முறையெ எரித்ரோசைட்டுகள், மோனோசைட்டுகள், நியூரோபில்ஸ், ஈசினோபில்ஸ், பேசினோபில்ஸ் போன்ற ரத்த பிரிவுகளை கொடுக்கக் கூடியவை. MSC செல்கள் இவற்றிற்கு இடைப்பட்ட அல்லது முந்தைய நிலை செல்களை உருவாக்குவதுடன் HSC  செல்கள் உருவாக்குவதற்கு துணைபுரியவும் செய்கிறது.

சமீபத்தில் ஐநஈ மற்றும் MSC ஆகியவற்றின் துணை கணங்களை  (Subsets) எலும்பு மஜ்ஜை மற்றும் ரத்தம் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுத்துள்ளனர்  இது மட்டுமின்றி பகுதி திறனுடைய (Multipotent (or) Pluri potent) MSC வகை செல்களை ஈரல் மற்றம் தொப்புள் கொடி ரத்தம், கொழுப்பு திசு மருத்துவ வல்லுனர்கள். மேலும் எபிடெர்மிக் ஸ்டெம் செல்களை தோல்களிலிருந்து (இயற்கையான மறுவளர்ச்சியினை கொண்டது) பிரித்தெடுத்துள்ளனர். இயற்கையான ஸ்டெம் செல்கள் மூளை, இருதயம் (அட்ரியல் பயோப்ஸி) போன்ற நுணுக்கமான பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

பெண்களின் கருப்பையில் கருமுட்டை கருத்தரித்த வுடன் ஒரு செல் கருவானது பிரிந்து 8 செல் இளங் கருவாக மாறும்போது, அந்த 8 செல்களும் முழுமையான திறன்  (Toti Potent)  கொண்டவைகளாக மாறியிருக்கும். அதன் பின்னர் பிளாஸ்டோஸைட் நிலையை (பல செல்கள்) அடைந்து பின் உயிரியாக வளரத்தொடங்கும் இந்த நிலையிலுள்ள பகுதி திறனுடைய ஸ்டெம் செல்கள் பிரித்து எடுத்து வளரச் செய்வதன் மூலம் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கையை பெருக்கலாம். இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் ஸ்டெம் செல்களை கொண்டு பல அடுக்கு மனித திசுக்களை உருவாக்க முடியும். மேலும் 8 செல் நிலையில் உருவாகும் முழு திறன் கொண்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு  முழு உயிரியினையே உருவாக்க இயலும்.

மிக சமீபத்தில் பெண்களின் மாதவிடாய் காலங்களில் வெளிப்படும் ரத்தத்திலும் ஆண்களில் விந்து உற்பத்தி செல்களிலும் ஸ்டெம் செல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெண்களின் உடலில் இருந்து தொப்புள் கொடி ரத்தம், பிளசண்டா திரவம் (பனிகுடநீர்) என பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள் பிரசவத்தின்போது சேகரிக்கப்பட்டு உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு தாய் அனைத்தும் ஆனவள் என்பதற்கு இதுவே சான்று.

ஸ்டெம் செல்களின் வகைகள்

ஸ்டெம் செல்கள் இருவகைபடும். ஒன்று முழு திறன் கொண்டவை. மற்றொன்று பகுதி திறன் கொண்டவை. முழு திறன் கொண்ட ஸ்டெம்செல் உடலின் எந்த வகையான செல்லாக மாறக்கூடிய திறன் கொண்டவை. இது கருசெல் பிரிதலில் 8 செல் நிலையை    அடையும் போது உருவாகிறது. பகுதிதிறன் கொண்ட ஸ்டெம் செல்கள் பிளாஸ்டோசைட் நிலையை அடைந்திருக்கும் போது காணப்படும் செல்கள். பகுதி திறன் கொண்ட ஸ்டெம் செல்கள் வளர்ந்து ஒரு இதயம், அல்லது கண் அல்லது எலும்பு போன்ற ஏதாவது ஒரு உறுப்பினை உருவாக்கும் திசுக்களாக வளரக்கூடிய திறன் படைத்தவை. பகுதித் திறன் கொண்ட செல்கள் உறுப்புகளை செப்பனிட உதவுபவை. ஆனால் முழுதிறன் கொண்டவை ஒரு முழு உயிரியையே உருவாக்கும் வல்லமை படைத்தவை. இதுவே குளோனிங் முறையில் உயிரினங்களை (ஒத்த) உருவாக்க பயன்படுத்தப்படும் செல்வகை.


ஸ்டெம் செல் சிகிச்சை

புற்றுநோய் சிகிச்சையில் நோயாளியின் எலும்பு மஜ்ஜையை முழுவதும் கதிரியக்கத்தின் உதவியால் அழித்துவிட்டு நோயாளியின் திசு வகையினைக் கொண்ட உறவினர்களிடமிருந்து பெற்ற எலும்பு மஜ்ஜையினை நோயாளியின் உடலில் செலுத்தி புதிய ரத்த செல்களை உருவாக்கும் முறையே இதுவரை புற்றுநோய் சிகிக்சையில் இருந்து வருகிறது. தற்போது ஸ்டெம்செல் சிகிச்சையில், தொப்புள்கொடி ரத்தம், எலும்பு மஜ்ஜை ஸ்டெம்செல்கள் போன்றவற்றை நோயாளி உடலில் வளரச் செய்து புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை மருத்துவ உலகம் நிரூபித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை எளிதானதாக மாறும்.

அனீமியா (ரத்தசோகை), லுக்கீமியா (ரத்த புற்றுநோய்) போன்ற நோய் குறைபாடுகளை குணப்படுத்த ஸ்டெம் செல் சிகிச்சைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நோய்க்கு ஆளான நோயாளிகள் சுமார் 95% பேர் முற்றிலும் குணமடைந்து வருகின்றனர். தொப்புள் கொடியிலிருந்து பெறப்படும் ரத்தத்தினை சேமிக்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ரத்த வங்கிகள் இயங்கி வருகின்றன. அவை 12000 யுனிட்டுக்கும் அதிக மான தொப்புள்கொடி ரத்தத்தை சேமித்து வருகின்றன. நம்முடைய நாட்டில் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் தொப்புள்கொடி ரத்தத்தினை சேமிக்கும் வசதியுள்ளது.

கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை ரெடினல் ஸ்டெம் செல்களைக் கொண்டும், இருதய கோளாறுகளை போக்க இருதய ஸ்டெம் செல்களைக் கொண்டும்,  அல்ஷிமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றை குணப் படுத்த நரம்பு ஸ்டெம்செல்களும், தசை திசுக்களின் குறைபாடுகளை களைய மஸ்கோஸ்கெலிடல் ஸ்டெம் செல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் சோதனைகளின் பல்வேறு நிலை களைக் கடந்து வெற்றிகரமாக மனிதர்களில் சிகிச்சை யளிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லையென்றே கூறலாம். 

ஆனால், இதுவரையில் சிறுநீரகக் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்கான ஸ்டெம்செல் கண்டு பிடிக்கப் படவில்லை. எனினும் ரெனல் ஸ்டெம் செல் என்னும் இச்செல்வகை எலும்பு மஜ்ஜையிலிருந்து தேவைப்படும்போது செயல்படக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை

சமீபகாலமாக ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்கான வரைமுறைகளை இந்திய உயிரி தொழில்நுட்ப பிரிவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிகழகமும் இணைந்து வகுத்துள்ளன. இந்தியாவில் இதுவரை ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி (CMC)  எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சையில் சரித்திரம் படைத்து வருகிறது. அந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் டாக்டர் ரேகா சாமுவேல். இவரின் ஸ்டெம் செல் படம் ஹார்வோல்ட் செல் நிறுவனத்தின் விருதை பெற்றது. மேலும் புதுடெல்லியில் உள்ள ஆஒஙந மருத்துவமனை, டாடா நினைவு மருத்துவமனை ஆகியவை ஸ்டெம் செல் சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றன.

திரிவேதி ஆப் டிரான்ஸ்பிளான்டேஷன் சயின்சஸ் (அகமதாபாத்) நீரிழிவு நோய் சிகிச்சையினையும், சர் ஐச மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (மும்பை) இருதய சிகிச்சையினையும், ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை(திருவனந்தபுரம்) ஸ்டெம்செல் முறையில் சிகிச்சையும் அளித்து வருகின்றன.

ஒரு வளர் திசுவிலிருந்து மிக குறைந்த எண்ணிக்கை யிலான செல்களை (ஸ்டெம்) பிரித்தெடுக்க இயலும். எனவே வளர்கரு செல்களை உபயோகிப்பதில் மிகப்பெரிய தடை உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய எந்த ஒரு புதிய தொழில்நுட்ப முறையும் இல்லை. ஒரு ஸ்டெம்செல்லை பாதுகாக்கவும், வளர்க்கவும் தற்போதுள்ள முறைகள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாகவே சிகிச்சையில் பயன்படுத்துவது மிக சிரமமான காரியமாக உள்ளது. 

நவீன ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மருத்துவ வல்லுனர்கள் நோய்காப்பு பணியில் ஒருபுறம் ஈடுபட்டிருக்க, அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் மூலம் சேவையாற்ற வேண்டிய மருத்துவர்கள் பாதிப்பேர் பணத்தினை கூடைக் கூடையாக அள்ள ஆசை கொண்டுள்ளனர். இந்தியாவில் உண்மையான வருமானவரி கணக்கு காட்டும் மருத்துவர்கள் மிகமிகக் குறைவு.

நோயாளிகள் கொடுக்கும் பணத்திற்கு முறையான ரசீது கொடுக்கும் மருத்துவர்கள் குறைவு. வருமானவரி ஏய்க்கும் மருத்துவர்களின் மருத்துவ பதிவெண் ரத்து செய்யப்படுமென்ற நிலை வந்தாலொழிய தற்போதைய இந்த நிலை மாறுவதற்கு வாய்ப்பில்லை. மருத்துவ உலகம் ஒருபுறம் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாலும் இது போன்ற புரையோடிப்போன புண்களும் மருத்துவ உலகில் இருக்கத்தான் செய்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.