படுக்கையை நனைத்தல் (Bed Wetting) என்பது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனையாகும். மருத்துவத்தில் இதனை (Nocturnal Enuresis) எனவும் அழைப்பர்.
4 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30 சதவீதமும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதமும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 3 சதவீதமும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஒரு சதவீதமும் இப்பிரச்சினையால் துன்பப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே பாதிக்கப்படுவது அதிகம்.
ஒரே குடும்பத்தில் காணப்படுவது அதிகம்.
குழந்தைகள் முதிர்ச்சியடைவது சற்று காலதாமதமாதல் இது ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, கால ஓட்டத்தில் தானாகவே மறைந்துவிடும். மாறாக சிறுநீரக தொற்றுநோய்களாலும் ஏற்படலாம். அரிதாக கட்டிகள், பிறவியிலே உறுப்புகளில் இருந்த அசாதாரண நிலைகள், நீரிழிவு போன்றவையும் காரணமாவதுண்டு.
பொதுவாக 6 வயதாகும் வரையில் எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. தானாகவே குணமாகிவிடும்.
அதன் பின் பலவிதமான முயற்சிகள் மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு வருகின்றன. படுக்கைக்குப் போகு முன் குழந்தையை சிறுநீர் கழிக்கச் செய்தல், படுக்கப் போவதற்கு முன்னதான 2 – 3 மணி நேரத்திற்குள் நீராகாரம் அருந்துவதைக் கட்டுப்படுத்தல், சிறுநீர் கழித்த, கழியாத தினங்கள் பற்றிய அட்டவணையைப் பேணுவது, படுக்கையை நனைக்காத நாட்களுக்கு பரிசளித்தல் போன்றவை சில.
“உனது தவறினால் இது நிகழவில்லை. வளர வளர இது சரியாகிவிடும்’ என குழந்தைக்கு அடிக்கடி நம்பிக்கையூட்டுவதையும் பல மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.
ஆனால், அண்மையில் செய்யப்பட்ட ஆய்வானது தூங்கிய இரு மணி நேரத்தில் குழந்தையை எழுப்பி, கழிவறைக்குக் கூட்டிச் சென்று சிறுநீர் கழிக்க வைப்பது மட்டுமே போதுமானது என்கிறது. இது பற்றிய விபரம் Journal Watch Pediatrics and Adolescent Medicine May 20, 2009 இதழில் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து நாட்டில் 4-5 வயதான வாரத்தில் இரண்டிற்கு மேற்பட்ட தடவைகளில் படுக்கையை நனைக்கும் 570 பிள்ளைகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது.
குழந்தைகள் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டனர். முன்பு கூறியவாறு தூங்கிய இரு மணி நேரத்தில் குழந்தையை எழுப்பி கழிவறைக்குக் கூட்டிச் சென்று சிறுநீர் கழிக்க வைப்பது, அதேபோல எழுப்பிச் செல்லும் போது குழந்தை உண்மையில் முழித்துவிட்டதா என்பதை அறிய முன்பே சொல்லி வைத்த குறிச்சொல்லை (Password) கேட்பது, படுக்கை நனைத்த, நனைக்காத தினங்கள் பற்றிய அட்டவணையை பேணிப் பரிசளிப்பது ஆகியன அப்பிரிவுகளாகும்.
ஆறு மாதங்களின் பின்பு எதுவுமே கேட்காது சிறுநீர் கழித்த குழந்தைகள் மற்றக் குழந்தைகளை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பது அவதானிக்கப்பட்டது.
இந்த ஆய்விலிருந்து கற்றுக்கொள்ளக் கூடியது என்ன?
படுக்கையை நனைப்பதற்காக பிள்ளைகளைத் தண்டிக்காது, நனைக்காதிருப்பதற்காக பரிசளிக்காது, குறிச்சொல்லைக் கேட்டு அவர்களைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்காது இயல்பாக நடத்தினால் விரைவில் குணம் கிடைக்கும் என்பது தானே.
ஆம். இது இயல்பான பிரச்சினை. அவர்கள் வேண்டுமென்று செய்வதில்லை. அவர்கள் முதிர்ச்சியடையப் பிந்துவதால் ஏற்படுகிறது. தானாகவே மாறும். அவர்களைத் தண்டிக்காதீர்கள். ஆதரவோடு நடத்துங்கள். ஆனால், அன்போடு நடத்துவதாக எண்ணி தாழ்வு மனப்பான்மையையும் குற்ற உணர்வையும் தூண்டாதீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.