வெள்ளி, 30 மே, 2014

கோடை வெயில்... குளிர்விக்க சில குறிப்புகள்


 உடலில் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க, சீரான இடைவெளியில் அடிக்கடி தண்ணீர்குடிப்பதுடன், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சம்பழச் சாறு விட்டுக் கலந்து குடிக்கலாம். (வைட்டமின் சி இருப்பதால்) உடலின் உள்ளேயும், வெளியேயும் புத்துணர்ச்சியைத் தரும்.
  ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை அப்படியே எடுத்து அருந்துவது ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடும். மண்பானைத் தண்ணீர் உடலுக்கும் நல்லது. தாகமும் தணிக்கும்.
 100 சதவிகிதம் பருத்தி உடைகளும், கண்களுக்குக் குளிர் கண்ணாடியும் சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் காவலர்கள்.
 நிறையத் தண்ணீர், ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், சுத்திகரிக்கப்படாத கடல் உப்பு மற்றும் மருத்துவக் குணம் கொண்ட மசாலாக்கள் (இஞ்சி, பூண்டு, மிளகும் போன்றவை) அடங்கிய முழுமையான சரிவிகித உணவு அவசியம் தேவை.
 புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
 நீர்ச்சத்து அதிகம் நிரம்பிய தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய், திராட்சை போன்ற பழங்கள் கோடைக்கு உகந்தவை.
 காரம், மசாலா மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கவும். வெதுவெதுப்பான சீதோஷ்ணம் பாக்டீரியாக்கள் வளரத் தோதானது. பாக்டீரியாக்களால் ஏற்படும் 'ஃபுட் பாய்ஸனிங்’ என்பது, இந்த சீஸனில் பொதுவாகக் காணப்படும் பிரச்னை. எனவே, உணவில் கவனம் தேவை.
 சுறுசுறுப்பான வேலைகளுக்கு இடையில் அவ்வப்போது நல்ல ஓய்வும் தேவை. உங்கள் உடலால் முடிந்த எல்லைக்கு மேலாக, வேலையோ அழுத்தமோ கொடுக்க வேண்டாமே!
 எப்போதெல்லாம் வெளியே சென்று வீடு திரும்புகிறீர்களோ, அப்போதெல்லாம் உடனே முகம் கழுவி விடுங்கள். ஒரு நாளைக்கு இரு முறை குளிப்பது கூட கோடையில் நல்ல இதம் தரும்.
 முதல் நாள் இரவே சிறிது வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் மோரில்  கலந்து குடிக்கலாம். நம் கையில் இருக்கும் கண்கண்ட மருந்து அது. உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். வயிற்று வலியில் இருந்து நிவாரணம் தரும். மாதவிலக்குப் பிரச்னைகள் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும். மேலும், முடி உதிர்தலைத் தடுக்கும். புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவையும் சீராகப் பராமரிக்கும். வெந்தயத்தின் பலன்களில் இது மிகச் சிலதான் இவை. இன்னும் பல இருக்கின்றன. வெந்தயத்தை விடாதீங்க!
 மற்றொரு மருந்து, விளக்கெண்ணெய். அதிக சூட்டினால் வலி ஏற்படும்போது, தொப்புள் பகுதியைச் சுற்றி விளக்கெண்ணெயைத் தடவிக்கொள்ளலாம். மேலும், கண் இமைகளின் மேலும் பாதங்களின் அடிப்பகுதியிலும் இதைத் தடவிக்கொண்டால் உடம்பின் உஷ்ணம் குறைந்துவிடும்.
 வியர்க்குருவைச் சமாளிக்க தூய சந்தன விழுதைத் தடவலாம். குளிர்ச்சி தருவதுடன், வியர்க்குருவும் மறையும்.
 குளிக்கும்போது, வெட்டிவேர் தேய்ப்பான் உபயோகிக்கலாம். அழுக்கைப் போக்குவதுடன், உடலில் உண்டாகும் வியர்வை நெடியைப் போக்கி, மணமிகு குளியல் அனுபவத்தைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.