ஞாயிறு, 18 மே, 2014

‘கிருமி நீக்கிகள்’ பகுப்புக்கான தொகுப்பு

சுத்தம் பேணுவதில் இன்று அனைவரும் மிகுந்த அக்கறை காட்டுகிறோம். உணவில் சுத்தம், உடையில் சுத்தம்,மற்றவர்களுடன் தொட்டுப்பேசுவதில் தயக்கம், தொற்று நோயுள்ளவரை பார்த்து வந்தால் உடைகளைத் தோய்ப்பதுடன் குளிப்பது, வெளியில் போட்ட செருப்புடன் வீட்டிற்குள் வராதிருப்பது என ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியபடி சுத்தத்திலும் சுகாதாரத்திலும் கவனமாயிருக்கிறார்கள்.
இது அவசியமானது, பாராட்டப்பட வேண்டியது. நலமாக வாழ இது உதவும்.
ஆயினும் இன்றைய விஞ்ஞான யுகத்தில் இன்னும் சில படிகள் மேலே செல்லுகிறோம்.
கிருமிகளைக் கொல்லக்கூடிய (Antimicrobials)இரசாயனப் பொருட்களைக் கொண்டு எமது வீடு,சமையலறை,சாப்பாட்டு மேசை, மலசலகூடம், வீட்டுத்தரை போன்றவற்றைச் சுத்தம் செய்கிறோம். உதாரணமாக benzalkonium chloride (BZK)என்ற கிருமி எதிர் இரசாயனம் வைத்தியசாலைகளிலுள்ள மேசை, கதிரை,தரை போன்றவற்றின் மேற்புறங்களைச் சுத்தம் செய்ய உபயோகிக்கப்படுகிறது. இப்பொழுது அவ்வாறானவை வீடுகளிலும் பரவலாகப் பாவனையில் உள்ளது. லைசோல்,டெட்டோல் என கிருமி எதிர் இரசாயன மருந்துகள் பலவகைப் பெயர்களில் கிடைக்கும்.
ஆனால் இவ்வாறு உபயோகிப்பதால் எமது சூழலிலுள்ள பல கிருமிகள் அத்தகைய கிருமி எதிர் இரசாயனங்களுக்கு தாக்குப் பிடிப்பது மாத்திரமின்றி அவற்றிற்கு எதிரான சக்தியைப் படிப்படியாகப் பெற்று மேலும் வீரியமுள்ள ஆபத்தான நோய்க்கிருமிகளாக மாறும் சாத்தியமுள்ளதாக அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்நிலை தொடர்ந்தால் நாம் வழமையாகப் பாவிக்கின்ற நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics)பலவும் கூட செயற் பலமிழந்து அத்தகைய கிருமிகளை அழிக்க முடியாத நிலை எற்படலாம் எனச் சில விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். அதாவது Antibiotic Resistance தோன்றலாம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு காரணம் என்ன? அத்தகைய இரசாயனங்களால் சுத்தம் செய்த பின் பொருட்களின் மேற்பரப்பில் அவற்றின் எச்சங்கள் மிகுந்திருக்குமல்லவா? இவை பெரும்பாலும் கிருமிகளை அழிக்கக் கூடிய செறிவில் இருக்கமாட்டாது. இதனால் அங்கு தப்பியிருக்கும் கிருமிகள் அந்த இரசாயனத்திற்கு இசைவடையும். காலப்போக்கில் இக்கிருமிகள் மேலும் ஆற்றல் பெற்று அதற்கு அழியாமல் தப்பக்கூடிய நிலைமை கூட ஏற்படும். அக்கிருமிகள் பெருகும் போது மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் நோய் தீவிரமாகும்.
இவ்வாறு கூறுவது வெறும் கற்பனைக்கூற்றே சாதாரண விஞ்ஞான எதிர்வு கூறலோ அல்ல. நோய் தொற்றுதல் துறை சார்ந்த இணைப் பேராசிரியர் Allison Aiello, PhD,MS, தலைமையில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தினரால் 238 வீடுகளில் ஒரு வருடமாகச் செய்யப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
இவ்வாறான கிருமி எதிர் இரசாயன மருந்துகள் வீட்டிலுள்ள ஆபத்தான நுண்ணங்கிகளை அழிப்பதில் உதவுகின்றனவா என்பது ஆய்வு பூர்வமாக அறியப்படாத நிலையில் (அதாவது உண்மையில் அவை அவசியம் தானா என்பது தெளிவாகாத நிலையில்?) அவற்றின் பாவனை இத்தகைய ஆபத்தான கிருமிகள் வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கின்றது என்பது கவலைக்குரியது.
ஆயினும் இதன் காரணமாக நீங்கள் அத்தகைய கிருமி நீக்கி மருந்துகளை உபயோகிக்கக்கூடாது என்று அர்த்தப்படாது. ஆனால் அவற்றை உபயோகிக்கும் போது அவற்றின் செறிவை உற்பத்தியாளர் சிபாரிசு பண்ணிய அளவிலேயே உபயோகிக்க வேண்டும். ஆனால் பலரும் அதிக தண்ணீரை கலந்து அதன் செறிவைக் குறைப்பதாலேயே கிருமிகள் உடனடியாக அழியாமல் தப்பி எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்கின்றன.
இவ்வாறாக வழமையான மருந்துகள் சாதாரண கிருமிகளுக்கு எதிராகச் செயற்பட முடியாது போவது மருத்துவத் துறைக்கு மிகுந்த தொல்லையாகும். ஆனால் இவ்வாறான நிலைமைக்கு முக்கிய காரணம் மேற்கூறியவாறு வீடுகளில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக கிருமி எதிர் இரசாயன மருந்துகளை உபயோகிப்பது அல்ல. மாறாக நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் (Antibiotics) துஷ்பிரயோகமே முக்கிய காரணமாகிறது.
ஒரு காலத்தில் மிகச் சிறப்பான செயற்பாடுடையதாக இருந்த டெட்ராசைகிளின் (Tetracycline)என்ற நுண்ணுயிர்க் கொல்லி பிற்பாடு செயலிழந்து போனது.இதற்கு காரணம் நோயாளிகள் தாங்களாகவே இம்மருந்தை மிட்டாய் வாங்குவது போல வாங்கி தடிமன் போன்ற சிறு நோய்களுக்கக் கூட வாயில் அமுக்கிக் கொண்டதே ஆகும்.
இப்பொழுது அமொக்சிலின் (Amoxicillin) மருந்துக்கும் கூட இந்நிலை தோன்றி வருகிறது.
எனவே நுண்ணுயிர்க் கொல்லி நோய் மருந்துகளை நோயாளிகள் தாங்களாகவே வாங்கி உபயோகிக்கக் கூடாது. வைத்தியர் சிபாரிசு பண்ணினால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.அதுவும் அவர் சிபாரிசு செய்தளவு மருந்தையே உபயோகிக்க வேண்டும்.கூடவோ குறையவோ தாங்களாகப் பாவிக்கக் கூடாது.
டாக்டர் எம்.கே. முருகானந்தன்
நன்றி:- தினக்குரல் 18.8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.