வெள்ளி, 9 மே, 2014

ஏப்பம் ஏன் வருகிறது?

ஏப்பம் தொல்லை மானத்தை வாங்குகிறது

ஏவ்! ஏவ்................................. என்ற பெரிய ஏப்பச் சத்தம் வைத்தியசாலை முழுவதும் எதிரொலிக்குமாற் போல ஓங்காரமாக ஒலித்தது. எனது நோயாளர் சந்திப்பு அறையை நோக்கி அச் சத்தம் நெருங்கவும் நான் தலை நிமிர்ந்து பார்த்தேன்.
உடல் கனத்த பெரியவர் உற்சாகமற்ற முகத்துடன், மிகுந்த சோர்வுடன் உள்ளே நுழைந்தார்.
சேலை அவிண்டு விழ அம்மணமாக நிற்பது போன்ற அவமானம் கூட வந்த பெண் முகத்தில் முகத்தில் தெறித்தது.
“இவருக்கு சரியான வாய்வுத் தொல்லை. பெரிய சத்தமாகப் பறியும். பிளட்ஸ்(Flats) வீடு, அக்கம் பக்கமெல்லாம் சிரிப்பாய் சிரிக்குது. மானம் பறக்குது” என்றாள்.
உண்மையில் வாய்வு, ஏப்பம் போன்றவையெல்லாம் இயற்கையான நிகழ்வுகள்தான். இதில் வெட்கப்படவோ அவமானப்படவோ எதுவுமில்லை.
ஆயினும் நாலு பேர் மத்தியில் வெளியேறும் போது சற்று அநாகரீகமான, மரியாதைக் கேடான செயலாகத்தான் சமூகத்தில் கணிக்கப்படுகிறது.
மாறாக வேறு சிலர் அதனை மிகுந்த ரசனையோடும் பெருத்த சத்தத்தோடும் வெளியிட்டும் மகிழ்சி கொள்கின்றனர். அது அவர்களுக்கு மனஅமைதியைக் கொடுக்கிறது.
ஏப்பம் என்பதுஎன்ன?
ஏப்பம் என்பது எமது உணவுத் தொகுதியில்சேர்ந்துவிட்ட மேலதிக காற்றை வெளியேற்றும் வழமையான செயற்பாடுதான்.
  • இந்தக் காற்றைத்தான் நாம் வாய்வு என்கிறோம்.
  • காஸ் என்று சொல்லாரும் உளர்.
  • வயிற்றுப் பொருமல், வயிற்று ஊதல் போன்றவையும் இதனோடு தொடர்புடைய விடயங்கள்தான்.
வாய்வு என்பது என்ன? இது எவ்வாறு உணவுத் தொகுதியை அடைகிறது?
  • நாம் உண்ணும் உணவுகள் ஜீரணமடையும் போது நுண்ணங்கிகளின் தாக்கத்தால் வாய்வுகள் இயற்கையாக குடலுக்குள் வெளியேறுகின்றன.
  • அத்துடன் உணவு உண்ணும் போதும், நீராகாரம் அருந்தும் போதும் அவற்றோடு சேர்ந்து உட்செல்லுகின்ற காற்றும் சேர்ந்து விடுகிறது.
  • இவை அதிகமாகச் சேரும்போதே வயிறு ஊதலாகத் தோன்றும். வயிற்றுப் பொருமல், சமியாப்பாடு என்றும் சொல்வார்கள்.
இந்த வாய்வுக்கள் எங்கே சேர்ந்திருக்கின்றன என்பதைப் பொறுத்தே ஏப்பமும் வாயு பறிதலும் நிகழ்கின்றன.
  • இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறுகின்றன. ஆங்கிலத்தில் Belching or burping என்கிறார்கள்.
  • இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால் வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.
ஏப்பம் என்பது ஒருவருக்கு தன்னிச்சையாக வாய்வு வெளியேறுவதாக அமையலாம். அல்லது அவர் தானாக விரும்பி வெளியேற்றுவதாகவும் நடைபெறலாம். அதாவது வயிறு உப்பலாக அல்லது வயிற்று முட்டாக இருந்தால் ஒருவர் தானகவே காற்றை ஏப்பமாக வெளியேற்றிச் சுகம் காண முயலுவதுண்டு.
ஏப்பங்கள் பலவிதம்
ஏப்பமானது எப்பொழுதும் பெரிய சத்தமாகத்தான் வெளியேறும் என்றில்லை.
  • சத்தமின்றி அல்லது மிகவும் தணிந்த சத்தத்துடன் வெளியேறும் ஏப்ப வாய்வு எமது கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதே உண்மையாகும்.
  • உணவின் பின் மூன்று நான்கு தடவைகள் ஏப்பம் விடுவது எவருக்குமே சாதாரண நிகழ்வுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
  • அதே போல ஒவ்வொருவருக்கும் தினமும் ஆறு முதல் இருபது தடவைகள் வரை வாய்வானது மலவாயில் ஊடாக வெளியேறலாம் என்கிறார்கள்.
  • பெரும்பாலும் மலம் கழிக்கும் போது வெளியேறுவதால் எவரும் கவனிப்பதில்லை. ஆனால் ஓட்டைக் கார் புற்படுவது போன்ற பெரிய சத்தத்துடன் வெயியேறும்போது சங்கடமாகவே இருக்கும்.
  • ஆசூசையான மணத்துடன் குசுவாக வெளியேறுவது குடலில் கிருமித் தொற்று ஏற்பட்டதால் இருக்கலாம்.
தடுக்கும் வழிகள் எவை?
வாய்வுத் தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்?
  1. அவசர அவசரமாக உணவுகளையும் நீராகாரங்களையும் உட்கொள்ளாதீர்கள். அவ்வாறு உட்கொள்ளும் போது அவற்றுடன் காற்றும் உட்சென்று வாய்வுத் தொல்லை ஏற்படும்.
  2. சோடா போன்ற மென்பானங்களில் நிறைய காற்று சேர்ந்திருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.
  3. பயறு, கடலை, சோயா, பருப்பு போன்ற உணவு வகைகளில் உள்ள புரதங்கள் சமிபாடு அடைவதற்கு சிரமமானவை. இவற்றை நன்கு வேக வைத்து உண்டால் சுலபமாக சமிபாடு அடைவதுடன் வாய்வு தோன்றுவதும் குறையும்.
  4. இரப்பையிற்கும் களத்திற்கும் இடையேயான வால்வ் சரியாகச் செயற்படாமை மற்றொரு காரணமாகும். Gastroesophageal reflux disease (GERD) என்பார்கள். இது பாரதூரமான நோயல்ல.
  5.  மலக்குடற் சிக்கல், குரொனஸ் நோய் போன்றவையும் வாய்வுத் தொல்லையை உண்டாக்கலாம்.
  6. இவற்றைத் தவிர மனோவியல் காரணங்களாலும் ஏப்பம் வரலாம். உடல் நோயின்றி ஏற்படும் Functional dyspepsia அவ் வகையைச் சார்ந்தது. இந்த நோயாளியின் நோயும் அத்தகையதே. பூரண குணமாவதறடகு நீண்ட கால சிகிச்சை தேவைப்பட்டது.
எத்தகைய உணவுகள்
எத்தகைய உணவுகள் வாய்வை அதிகம் ஏற்படுத்துகி்னறன?
  • பருப்பு, பயறு, சோயா, கடலை, போஞ்சி, பயிற்றங்காய் போன்ற அவரை இன மரக்கறிகள்
  • கோவா (முட்டை கோஸ்), காலிபுளவர், brussels sprout, கார்பனேற்றப்பட்ட பானங்கள் (மென்பானங்கள், கோலா போன்றவை),
  • ஆப்பிள், பியர்ஸ், peaches போன்ற பழங்கள்
  • Lettuce போன்ற இலைவகைகள்
  • சூயிங்கம்
  • கடினமான டொபி வகைகள் (Hard candy)
எண்ணெய், கொழுப்பு, பொரித் உணவு வகைகள் சிலருக்கு வயிற்றுப் பொருமலை ஏற்படுத்தும். இவை விரைவில் சமிபாடடையாது கூடிய நேரம் இரைப்பையில் தேங்கி நிற்பதால்தான் வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது
பலரும் சொல்வது போல மலச்சிக்கலால் வயிற்று ஊதல் ஏற்படுமே ஒழிய வாய்வுப் பிடிப்பு ஏற்படுவதில்லை. அதாவது உடலில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை வாய்வுப் பிடிப்பு என்று சொல்லிவிடுகிறார்கள். அது தவறான சொல்லாடல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.