திங்கள், 12 மே, 2014

சீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட்கள்!


வ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வரக்கூடிய இரண்டாம் வியாழக்கிழமையை உலக சிறுநீரக தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் மார்ச் 14 உலக சிறுநீரக தினமாகும் (World Kidney Day). நமது உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவேண்டி இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பணம் சம்பாதிச்சு குவிச்சிட்டா வாழ்க்கையில் ஜெயித்துவிட்டதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அல்ல. எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது தான் உண்மை.
ஓராயிரம் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் சேர்ந்து முயன்றாலும் உருவாக்க முடியாத – இயற்கை நமக்களித்த – இந்த அற்புதமான உடலை, முறையற்ற பழக்க வழக்கங்களினாலும், மது புகை உள்ளிட்ட தீய பழக்கங்களினாலும் கெடுத்துக்கொள்வது எத்தனை அறிவீனம்?
போனது போகட்டும்… இனி கழிக்கப்போகும் வாழ்க்கையையாவது ஆரோக்கியமாக கழிப்போம்.
சிறுநீரகத்தின் செயல்பாடு மற்றும் அவற்றை பாதுகாப்பது பற்றிய இந்த பதிவை படித்துப் பாருங்கள். நமது உடலில் உள்ள மிக மிக முக்கியமான இந்த உறுப்பை பற்றி இத்தனை நாள் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். அந்தளவு நமது உடலில் உள்ள மிக மிக முக்கிய உறுப்புக்களில் சிறுநீரகமும் ஒன்று. நம் உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரகத்தில் உள்ள 30 லட்சம் நுண்ணிய நெஃப்ரான்கள் இந்த பணியை செய்கின்றன. இந்த நச்சுப் பொருட்களும் கழிவுப் பொருட்களும் சரியாக வெளியேற்றப்படவில்லை எனில் உடலில் அவை தேங்கி மற்ற உறுப்புக்களையும் பாதித்துவிடுகின்றன. இதனால் உறுப்புக்கள் செயலற்று கோமா நிலைக்கு ஒருவரை தள்ளிவிட வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆகையால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இன்றியமையாதது.

சிறுநீரகங்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்த சில முக்கிய டிப்ஸ்கள்.
1) நிறைய தண்ணீர் குடியுங்கள்
மனித உடலே 60 முதல் 70% வரை நீரால் ஆனது தான். நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல. மனித உடலும் தான். சராசரியாக ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் நீர் வரை குடிப்பது நல்லது என்று கருதப்படுகிறது. எழுந்திருக்கும்போது இரண்டு கிளாஸ்கள், சாபிடுவதற்கு முன்பும் பின்பும் தலா ஒரு கிளாஸ் என இரண்டு கிளாஸ்கள் படுக்க செல்வதற்கு முன்பு இரண்டு என வழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
ப்ரிஜ்ஜில் வைத்த நீரை பருகுவதால் எந்த பயனும் இல்லை. அதுவும் உணவு உட்கொள்ளும்போது இதை அவசியம் தவிர்க்கவேண்டும். காரணம் குளிர்ந்த நீர் உடலின் இயக்கத்தை (metabolism) பாதிக்கிறது. கொழுப்புகள் இறுகி, ஜீரணிக்க கடினமாகிவிடுகிறது. அதுவும் சிலர் சாப்பிடும்போது கோக், பெப்சி இவற்றை வைத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். நாளடைவில் அவை இல்லாமல் சாப்பிடுவது என்பதே முடியாமல் போய்விடும். இத்தகையோருக்கு சிறுநீரகக்கோளாறு ஏற்படும் சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம்.
மிதமான வெந்நீர் என்றும் நன்று.
சுத்தமான தண்ணீரை அதிகளவு எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரகம் நன்கு வேலைசெய்கிறது. உடலுக்கு தேவையான நீரை எடுத்துக்கொண்டு மீதத்தை வெளியேற்றிவிடும். எவ்வளவுக்கெவ்வளவு நீர் அருந்துகிறீர்களோ அவ்வளவு சரியாக சிறுநீரகம் வேலை செய்யும்.
2) உப்பு தூக்கலாக உள்ள உணவுகளை தவிர்க்கவும்
நமது சமையல் உப்பிற்கு ரசாயானப் பெயர் சோடியம் குளோரைடு. சோடியமும் குளோரைடும் நமது இரத்தத்தின் எலெக்ட்ரோலைட் விகிதத்தை பராமரிகின்றன. அவை அளவுக்கதிகமாக உடலில் சேரும்போது இந்த விகிதத்தில் சமமின்மை (Imbalance) ஏற்பட்டு, மிகுதியாக உள்ள உப்புக்கள் சிறுநீரகத்தில் சேர்ந்துவிடும். விளைவு சிறுநீரகம் செயலிழிந்துவிடும். எனவே உப்பு மிகுந்த சாட் ஐட்டங்கள், சிப்ஸ்கள், மற்றும் எண்ணை பதாரத்தங்களை உணவில் கூடுமானவரை தவிர்க்கவேண்டும்.
3) மது கூடவே கூடாது
ஆல்கஹால் எனப்படும் சாராயம் சிறுநீர் வெளியேற்றத்தை தூண்டும் பொருளாகும். அதாவது DIURETIC. அதுமட்டுமல்ல யூரிக் ஆசிட் வெளியேறுவதை கட்டுப்படுத்தும். விளைவு…அவரி சிறுநீரகத்தில் சேர்ந்து  சிறுநீரகக்கல்லாகிவிடும். ஆரோக்கியமான சிறுநீரகம் போதுமானளவு யூரிக் ஆமிலம் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை போதுமானளவு வெளியேற்றிவிடும்.
4) சிறுநீரை அடக்கக் கூடாது
சிறுநீர் கழிக்கவேண்டும் என்கிற உந்துதல் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே அவற்றை வெளியேற்றி விடவேண்டும். நமது மூத்திரப்பை ஒரு குறிப்பிட்ட அளவு சிறுநீரை மட்டுமே தாங்கும் சக்தியுள்ளது. அதற்கு மேல் அது தாங்கும்போது சிறுநீரகத்திற்கு ஸ்ட்ரெயின் அதிகரிக்கும். ஸ்ட்ரெயின் அதிகரித்தால் அதன் ஆயுள் குறையும்.
5) ஆரோக்கியமான வாழ்க்கை முறை
நம் உடல் ஒரு இயந்திரம் போல. ஒரு பாகம் மக்கர் செய்தாலும் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிப்புக்குள்ளாகும். எனவே ஆரோக்கியமான நல்ல சிறுநீரகத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் இன்றியமையாததாகும். சரியான உணவு, சரியான தூக்கம், இவை மிகவும் முக்கியம். மாமிசத்தில் உள்ள கொழுப்புகள் பல நோய்களை ஏற்படுத்த காரணிகளாகின்றன. சைவ உணவே ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு பெஸ்ட். சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றொரு முக்கியமான விஷயம் புகைப்பிடிக்கும் பழக்கம். எனவே சிறுநீரகத்தை பாதுக்காக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் சிகரெட்டை நிறுத்தவேண்டும்
எனவே எப்பொழுதும் பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டிற்கு பழங்களும் காய்கறிகளும் பெருமளவு உதவுகின்றன.
முட்டைகோஸ் : விட்டமின் கே, மற்றும் சி மற்றும் ஃபைபர் இருப்பதால் கான்சரை உற்பத்தி செய்யும் செல்களை கட்டுபடுத்துகின்றன.
காலிப்ளவர் : விட்டமின் சி சத்து மற்றும் ஃபோலேட் மிகுதியாக உள்ள காய்கறி இது. நச்சு பொருட்களை சமன்படுத்தும் ஆற்றல் காலிப்ளவருக்கு உண்டு.
பூண்டு : கொழுப்பை கரைக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. மேலும் மிகச் சிறந்த கிருமி நாசினி.
வெங்காயம் : இதயநோயை தவிர்க்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு. பொட்டாசியம் குறைவாக உள்ள காய்கறி இது. குரோமியம் அதிகம் உள்ளது. (உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் குரோமியத்தின் பங்கு மிக மிக முக்கியமானது)
பசலைக் கீரை : ஆங்கிலத்தில் இதை SPINACH என்று சொல்வார்கள். வைட்டமின் ஏ, சி, இ, கே, இவை அனைத்தும் இதில் உள்ளது. சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.
பரங்கிக்காய் : கலோரி மிக குறைவாக உள்ள காய் இது. இதன் விதைகளி காயவைத்து தோல் நீக்கி உண்ணலாம். சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு அருமருந்து இது.
இதைத் தவிர, காரட், முள்ளங்கி ஆகியவையும்  சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.
பழங்களில் ஆப்பிள், தர்பூசணி, அன்னாசிப்பழம், வெள்ளரிக்காய், மாதுளை, மிக மிக நல்லது.
பொதுவாகவே ஆப்பிள் கொழுப்பை கரைத்து மலச் சிக்கலை நீக்கும் வல்லமை பெற்றது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் சிறுநீரகத்திற்கு மிக மிக நல்லது.
குருதி நெல்லி எனப்படும் சீமை களாக்காய் : ப்ரோஆந்திசையனாடின் எனப்படும் கழிவுப் பொருளை வெளியேற்றும் வேதிப் பொருள் இந்த பழத்தில் உள்ளது.
அன்னாசி : அன்னாசி, பொட்டாசியம், ஃபைபர், வைட்டமின் சி. சிருநீரகக் கல்லுக்கு ஏற்ற மருந்து இது.
மாதுளை : ஃபைபர் மற்றும் ஃபோலேட்டுகள் அடங்கிய பழம் இது. வைட்டமின் சி மற்றும் கே நிரம்பியது. சிறுநீரகத்திற்கு மிக நல்லது.
இதே போன்று பிஸ்தா, பாதாம், இளநீர் ஆகியவையும் சிறுநீரகத்திற்கு நல்லது.
நன்றி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.